MP சீட்டுக்கு பதில் ஹஜ் கமிட்டி குழு தலைவர் பதவி! மனிதநேய மக்கள் கட்சியை ஆஃப் செய்த திமுக!
சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 1 எம்.பி. சீட் வாங்கிவிட வேண்டும் என்பதில் மனிதநேய மக்கள் கட்சி மிக உறுதியாக இருந்த நிலையில், தமிழக ஹஜ் கமிட்டி குழுத் தலைவர் பதவியை வழங்கி திமுக ஆஃப் செய்துவிட்டது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் மனிதநேய மக்கள் கட்சியை பொறுத்தவரை இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கை காட்டிலும் தமிழ்நாடு முழுவதும் ஓரளவு வலிமையான கட்டமைப்புடன் திகழ்கிறது. தமிழகத்தில் உள்ள மற்ற இஸ்லாமிய அமைப்புகளை காட்டிலும் மமகவும், தமுமுகவும் ஆக்டிவாக இயங்கி வருவது அந்தக் கட்சியின் ப்ளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது. இதனிடையே மமகவுக்கு போட்டியாக மஜகவை வேகமாக வளர்த்தெடுத்து வருகிறார் தமிமுன் அன்சாரி.

இந்நிலையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஒரு தொகுதியையாவது வாங்கிவிட வேண்டும் என முயற்சித்த ஜவாஹிருல்லா அதற்கான காய்களை தொடர்ந்து நகர்த்தி வந்தார். ஆனால் இந்த முறை வேண்டாம் சட்டமன்றத் தேர்தலில் பார்த்துக் கொள்வோம், இன்னும் சில அரசு பதவிகளை தருகிறோம் எனக் கூறி திமுக ஆஃப் செய்வதிலேயே குறியாக இருந்தது. அந்த வகையில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளரும், மணப்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமதுக்கு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி குழுத் தலைவர் பதவியை வழங்கி எம்.பி.சீட்டுக்கு பதில் திமுக ஈடு கட்டியுள்ளது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போதே திமுகவிடம் 1 சீட் கேட்டது மமக. ஆனால் அப்போது அடுத்தமுறை பார்த்துக்கொள்ளலாம் எனக் கூறியிருந்தது திமுக. இந்த முறையும் எம்.பி.சீட்டுக்கு வாய்ப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. சீட்டுக்காக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தினால் அது சந்தர்ப்பவாத அரசியல் என்ற விமர்சனத்தை உருவாக்கும் என்பதால் வேறு வழியின்றி ஜவாஹிருல்லாவும் பொறுமை காத்து வருகிறார்.
மனிதநேய மக்கள் கட்சியை போலவே வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியை எதிர்பார்த்தது. கடலூரில் தனது சகோதரர் திருமால் வளவனை களமிறக்க வேல்முருகன் விரும்பினார். ஆனால் கடலூரை காங்கிரஸ் கேட்பதாலும், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மகன் கதிரவன் ஏற்கனவே கிரவுண்ட் ஒர்க் செய்து வைத்திருப்பதாலும் அந்த தொகுதிக்கு கடும் டிமாண்ட் நிலவி வருகிறது.
இதனிடையே இம்மாத இறுதிக்குள் இன்னும் சொல்லப்போனால் தனது பிறந்தநாளான மார்ச் 1ஆம் தேதிக்கு முன்பே கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை சுமூகமாக முடிக்க விரும்புகிறார் ஸ்டாலின். இதனால் இனி வரும் நாட்களில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.












Click it and Unblock the Notifications