"அதிமுக ஆன்லைன் ரம்மி சட்டம் பிழையானது! விரைவில் புதிய சட்டம் கொண்டு வருவோம்!" தங்கம் தென்னரசு உறுதி
சென்னை: தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் காரணமாகத் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டம் என்பது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. முதலில் பொழுது போக்காக இதில் விளையாடத் தொடங்கும் பலரும் தங்கள் மொத்த சேமிப்பை இதில் இழக்கும் அபாயமும் உள்ளது.
Recommended Video
அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு காரணமாகத் தற்கொலை சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

ஆன்லைன் ரம்மி
இதனால் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய புதிய சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டது. இருந்த போதிலும், அதை நீதிமன்றம் ரத்து செய்து இருந்தது. இந்தச் சூழலில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு ஆன்லைன் ரம்மி குறித்து சில முக்கிய தகவல்களைத் தெரிவித்தார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு
அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "திமுக ஆட்சியில் ஜாதி மதச் சண்டைகள் இல்லாமல் மிக அமைதியான மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. துப்பாக்கி கலாச்சாரம் முற்றிலுமாக அழித்து வைக்கப்பட்டுள்ளது. அதிமுக கடைசி ஓராண்டு ஆட்சியில் 1695 கொலைகள், 146 கொள்ளைகள், 30 கூலிப்படை கொலைகள், 16 போலீஸ் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. ஆனால் திமுக ஆட்சியில் இவையெல்லாம் குறைக்கப்பட்டுள்ளது. புள்ளி விவரங்களே அதிமுக திமுக ஆட்சிக்குச் சாட்சியாக உள்ளது.

ஆன்லைன் ரம்மி
அதிமுக ஆட்சியில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை ஒழிப்பதற்குக் கொண்டுவரப்பட்ட சட்டம் வளமானதாக இல்லை. அவசர கோலத்தில் அள்ளித் தெளித்துக் கொண்டு வரப்பட்ட சட்டத்தால் அது தற்போது நீக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் அது உறுதியான சட்டமாகக் கொண்டுவரத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் ரம்மி ஒழிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

போதைப்பொருள்
திமுக ஆட்சியில் போதைப்பொருட்கள் நடமாட்டம் கூட இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். அதிமுக ஆட்சியில் குட்கா எந்தளவுக்கு இருந்தது என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். யார் வீட்டில் ரெய்டு நடந்தது, அதிமுக ஆட்சியில் காவல் துறைத் தலைவராக இருந்தவர் மீது வழக்குப் பாயவில்லையா?

கஞ்சா விற்பனை
கஞ்சா விற்பனை தடுக்கும் வகையில் 813 பெயரில் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கஞ்சாவை முற்றிலுமாக ஒழிக்கத் தமிழக அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல எடப்பாடி பழனிசாமி அவர்கள் குறைகளை மட்டுமே கண்டு அதைப் பெரிதுபடுத்திப் பேசி வருகிறார். திமுக ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாகச் செயல்பட்டு வருகிறது" என்று அவர் தெரிவித்தார்,












Click it and Unblock the Notifications