கால் வைக்கிற இடம் எல்லாம் கன்னிவெடி.. கழற்றி விடப்பட்ட விஜய்! தனித்து களமிறங்கி ஜொலிக்குமா தவெக?
சென்னை: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் தேர்தலை சந்திப்போம் என பாஜக கூறியிருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் வேட்பாளர் என பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா உறுதியாக கூறியிருக்கிறார். திமுக கூட்டணி ஏற்கனவே உறுதியாகி இருக்கும் நிலையில் தமிழகத்தின் புது வரவான தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் தனித்து விடப்பட்டிருக்கிறார். கூட்டணி அமைந்தால் கொள்கைகளை விட்டு தர வேண்டி இருக்கும்.. கொள்கைகளை விட்டு தந்தால் கட்சியின் எதிர்காலம் பிரச்சனைக்குரியதாக மாறிவிடும் என அவர் முன் பல சவால்கள் இருக்கிறது. 2026 தேர்தலை விஜய் எப்படி சந்திக்க போகிறார் என்பதுதான் தற்போதைய அரசியலில் பேசுபொருளாக இருக்கிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பாஜக கூட்டணி அமைந்த போதும், அடுத்தடுத்து நடந்த தேர்தல்களில் அந்த கூட்டணியால் தமிழகத்தில் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை. 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தலில் இரு கட்சி கூட்டணியும் தோல்வியில்தான் முடிந்தது.
அதே நேரத்தில் அதிமுக தயவால் நான்கு பாஜக எம்எல்ஏக்கள் நீண்ட காலத்திற்கு பிறகு தமிழக சட்டமன்றத்திற்குள் நுழைந்தனர். இந்த நிலையில் அந்த கூட்டணி உடைந்து 600 நாட்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து இருக்கிறது. பாஜக அதிமுக கூட்டணிக்கு பின்னால் பல்வேறு நெருக்கடிகள் இருப்பதாக சொல்லப்பட்டாலும் எடப்பாடி பழனிச்சாமி அதனை மறுத்துள்ளார்.

தேர்தல் கூட்டணி:
அதே நேரத்தில் அவர் வைத்த டிமாண்டுகளுக்கு பாஜக தலைமை தலை அசைத்ததின் விளைவு தமிழக பாஜக தலைவர் மற்றும் எடப்பாடி முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளப்பட்டது என கூறுகின்றனர் அதிமுகவினர் . இது ஒரு புறம் இருக்க சட்டமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. திமுக கூட்டணி ஏற்கனவே வலுவாக இருக்கிறது. அதிமுக கூட்டணியும் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டு விட்டது. அதே நேரத்தில் கூட்டணி ஆட்சிக்கு தயார் என கூறியிருந்த விஜய் தனித்துவிடப்பட்டிருக்கிறார். நாம் தமிழர் சீமானோ எப்போதும் போல் தனித்து களமிறங்குவது உறுதி என சொல்லி இருக்கிறார். இந்த நிலையில் 2026 தேர்தலில் விஜய் முன் பெரும் சவால்கள் காத்திருக்கிறது.
தமிழக அரசியல்:
திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இருக்கும் நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் அந்த கூட்டணி அப்படியே தொடரும் என எதிர்பார்க்கலாம். தற்போது அதிமுகவுடன் தேமுதிக, பாஜகவுடன் பாமகவும் கூட்டணியில் இருக்கிறது. எனவே மீண்டும் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்த கூட்டணி உருவாக்கலாம். நாம் தமிழர் கட்சி சீமான் தனியாகத்தான் தேர்தலை சந்திப்பார். இதனால் தனித்து போட்டியிட வேண்டிய சூழல் விஜய்க்கு உருவாகி இருக்கிறது.
விஜய் கட்சி:
கடந்த சில நாட்களாகவே அதிமுகவுடன் விஜய் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், என்பது தொகுதிகள், துணை முதல்வர் பதவி கேட்டதாகவும் கூறப்பட்ட நிலையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்திருக்கிறது. பாஜக கொள்கை எதிரி, திமுக அரசியல் எதிரி என விஜய் கூறியதால் அதிமுக கூட்டணியில் அவர் இணைவது சாத்தியமே இல்லை. அதே நேரத்தில் புதுவரவான விஜயை நம்பி திமுக அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வருமா என்பது கேள்விக்குறி தான். இதனால் 2026 தேர்தலில் விஜய் தனித்து போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாக இருக்கிறது.
தனித்து போட்டி:
234 தொகுதிகளிலும் விஜய் தனித்தே வேட்பாளர்களை களம் இறக்க வேண்டிய நிலை இருக்கிறது. விஜயை பொறுத்தவரை அவரது வாக்கு வங்கி, மக்கள் செல்வாக்கு 2026 தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் தான் தெரிய வரும். அதே நேரத்தில் ஏற்கனவே களத்தில் இருக்கும் வேட்பாளர்கள், மக்களுக்கு நன்கு தெரிந்த முகங்களாக இருப்பார்கள். விஜய் களமிறக்குவது புது முகங்களாகவோ அல்லது இளைஞர்களாகவோ இருப்பதால் விஜயின் முகத்தை வைத்து மட்டுமே அவர்கள் தேர்தலை சந்திக்க வேண்டும். விஜயின் சினிமா செல்வாக்கு வாக்குகளாக மாறுமா என்பதும் கேள்விக் குறி தான்.
நடைமுறை சிக்கல்:
காரணம் தமிழக வரலாறு பல 'அரசியல் சினிமா' பிரபலங்களை பார்த்திருக்கிறது. விஜயகாந்த், எம்ஜிஆரை தவிர அரசியலில் நுழைந்த நடிகர்கள் பலர் சூடு போட்டுக் கொண்டு விலகி ஓடியது அனைவரும் அறிந்ததே. அது மட்டும் அல்லாமல் ஆளும் கட்சி திமுக, பலமுறை ஆண்ட கட்சி அதிமுக, மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக என முப்பெரும் ஜாம்பவான் கட்சிகளை எதிர்த்து புதுமுகமான விஜய் அரசியல் களத்தில் போட்டி போட முடியுமா? அப்படியே போட்டி போட்டாலும் அது வாக்குகளாக மாறி சட்டசபை உறுப்பினர்களை பெற்றுத் தருமா என்பதும் கேள்வி தான்.
நிர்வாகிகள் நியமனம்:
தற்போது வரை விஜய் கட்சியில் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் மட்டுமே வெளியாகி இருக்கிறது. ஒன்றியம், தொடங்கி நகரம், மாநகரம், கிளைக் கழக நிர்வாகிகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே இருக்கும் நிலையில் முழுமையான நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டு அதற்குப் பிறகு அவர்களை வேட்பாளராக அறிவித்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். பூத் கமிட்டியை அமைக்கும் பணியும் தொய்வடைந்து இருக்கிறது, அதையும் விரைவு படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
எம்ஜிஆர் விஜயகாந்த்:
கடந்த ஆண்டு கட்சியை ஆரம்பித்த விஜய் பரந்தூருக்கு மட்டுமே சென்றிருக்கிறார். சென்னையை இன்னும் அவர் தாண்டி மக்களை சந்திக்காத நிலையில் ஒரு வருட காலத்திற்குள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதுவும் ஒரு வகையில் அவருக்கு சவால் தான். அதற்குப் பிறகு வேட்பாளர் தேர்வு, அறிவிப்பு, பிரச்சாரம் என அரசியலில் அவர் நீந்த வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கி விஜய், எம்ஜிஆர் விஜயகாந்த் போல களத்தில் ஜொலிப்பாரா என்பதை காலம் தான் தீர்மானிக்கும்..
மாறுமா கணக்குகள்?:
அதே நேரத்தில் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்பது போல திடீரென கூட்டணி கணக்குகள் மாறவும் வாய்ப்பு இருக்கிறது. கடைசி நேரத்தில் தங்களுக்கு தொகுதிகள் கிடைக்கவில்லை என பெரிய பெரிய கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகி அடுத்த நாளே பிற கட்சிகளுடனும் அல்லது தங்கள் தலைமையிலேயே கூட்டணி அமைத்த வரலாறையும் தமிழ்நாடு பார்த்திருக்கிறது. இப்போதைக்கு கூட்டணிகள் உறுதியாக இருக்கின்றன. ஆனால் இறுதி செய்யப்படவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். இன்னும் ஓராண்டு 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இருக்கும் நிலையில் கூட்டணி கணக்குகள் மாறினாலும் மாறலாம்.












Click it and Unblock the Notifications