மழை பெய்தாலும் சென்னையில் வெயில் சுட்டெரித்த இடங்கள் எவை.. ஆல் சென்டம்!.. வெதர்மேன் அப்டேட்
சென்னை: தமிழகத்தில் மீனம்பாக்கம்தான் மிகவும் வெப்பமான பகுதியாக இருந்தது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கத்தரி காலம் முடிந்தாலும் வெயில் அதிகமாகவே இருந்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் மழை பெய்யும் சில இடங்களை தவிர மற்ற இடங்கள் எல்லாம் ஹாட்டஸ்ட் ஹாட்ஸ்பாட்டாகவே இருந்து வருகின்றன.

வருண பகவான் கருணையால் ஏதோ அவ்வப்போது லேசான மழை பெய்து பூமியை குளிர்விக்கிறது. இதனால் மக்கள் வெக்கையை மறந்து விட்டு மகிழ்கிறார்கள். அந்த வகையில் கடந்த சில தினங்களாக சென்னையில் 102 டிகிரியை விட வெப்பம் அதிகமாகவே இருந்து வருகிறது.
பள்ளித் திறக்கும் நேரத்தில் இத்தனை வெயிலா என மக்கள் கவலையில் இருந்தனர். ஆனால் பள்ளிகள் திறப்பு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வரும் 12 மற்றும் 14 ஆம் தேதிகளில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இந்த நிலையில் நேற்றைய தினம் சென்னையில் காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்தது.

மக்கள் வெளியே போகவே அஞ்சி வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். இந்த நிலையில்தான் நேற்று மதியம் திடீரென சென்னையின் பெரும்பாலான இடங்களில் இருளில் மூழ்கின. சில நிமிடங்களில் மழை பெய்தது. திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
எனினும் நேற்று காலை நேரம் வெயில் எங்கு அதிகமாக அடித்தது என்பது குறித்து வெதர்மேன் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் தமிழகத்தில் மீனம்பாக்கத்தில்தான் அதிக வெப்பமான பகுதியாக இருந்தது. மீனம்பாக்கத்தில் 40.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது.

புறநகர் பகுதிகளிலும் சென்னையில் மேற்கு பகுதிகளிலும் மழை பெய்தது. புதுவை, விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் நேற்று காலை சுட்டெரித்த போது கூட நல்ல மழை பெய்தது. சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் எந்த இடத்தில் எவ்வளவு மழை பெய்தது என்பதை பார்ப்போம்.
பொத்தேரியில் 40 மி.மீ. பள்ளிக்கரணையில் 30 மி.மீ., திருவள்ளூரில் 20 மி.மீ. மழை பெய்தது. அது போல் தமிழகத்தில் சராசரியாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மீனம்பாக்கத்தில் 40.8 டிகிரி செல்சியஸ், கிண்டியிலும் அதே வெப்பம்தான், வில்லிவாக்கத்தில் 40.5 மி.மீ., நுங்கம்பாக்கம், பொத்தேரி, தாம்பரத்தில் தலா 40.1 டிகிரி வெப்பம் பதிவானது. இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications