டாஸ்மாக் கடைகளில் புது ரூல்ஸ்.. பார்களில் சாப்பாடும் கிடைக்குமா? புதிய டெண்டர்: அமைச்சர் விக்னேஷ்
சென்னை: டாஸ்மாக் பார்களில் இனி என்னென்ன மாற்றங்கள் வரப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பார்களில் உணவகங்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், டாஸ்மாக் பார்களின் டெண்டர் முறையிலும், கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் அடுத்தடுத்து மாற்றங்கள் வர உள்ளதாக அவர் கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது... அந்த விவரங்களை இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
நம்முடைய தமிழ்நாட்டை பொறுத்தவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடிக்கும் அதிகமான வருவாய் கிடைத்து வருகிறது.

அரசு டாஸ்மாக்
புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அருகில் இருந்த 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை, பார்களின் செயல்பாடு, முறைகேடுகள் உள்ளிட்ட விஷயங்களில் அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல், விதிமீறல் செய்யும் பார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மற்றொருபுறம், டாஸ்மாக் பார்களுக்கான நடைமுறையிலும் மாற்றங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. கர்நாடகம், கேரளம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் நடைமுறையில் இருப்பதைப் போல "ரெஸ்டோ பார்" முறையை கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மதுபான கடைகள் - பார்கள்
இந்நிலையில், டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு விவாதங்கள் இருந்து வருகின்றன. குறிப்பாக, மதுபானக் கடைகளுடன் செயல்படும் பார்களின் சுகாதாரம், உணவின் தரம், விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது உள்ளிட்ட பிரச்சினைகள் அடிக்கடி எழுந்து வருகின்றன.
இந்த சூழலில்தான் டாஸ்மாக் பார்களில் உணவகங்கள் நடத்த அனுமதி வழங்குவது தொடர்பான முக்கிய தகவலை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் பார்களில் உணவகங்கள்
அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களிடம் பேசும்போது சொன்னதாவது: "டாஸ்மாக் பார்களில் உணவகங்களை நடத்த அனுமதி வழங்கப்படும். இதற்காக அடுத்ததாக விடப்படும் டாஸ்மாக் பார் டெண்டரில் அதற்கான விதிமுறைகள் இடம்பெறும்.
புதிய பார் டெண்டர் இன்னும் ஒரு மாதத்திற்குள் விடப்படும். அதன்பிறகு பார்களில் உணவகம் நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படும். உணவகங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டால், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளை கொண்டு அங்கு ஆய்வு நடத்தி, விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்க முடியும்.
அமைச்சர் விக்னேஷ் அதிரடி
டாஸ்மாக் துறையை சம்பாதிப்பதற்காகவே கடந்த ஆட்சியாளர்கள் வைத்திருந்தார்கள். டாஸ்மாக் துறை அமைச்சராக இருந்தாலும் சரி, நிர்வாகக் குழுவாக இருந்தாலும் சரி, "Money Mind" ஆகவே பார்க்கிறார்கள். இவர்கள் நிறைய பணம் வைத்திருப்பார்கள், கேட்டால் கொடுப்பார்கள் என்றெல்லாம் எழுதுகிறார்கள். இதை முழுமையாக மாற்ற வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம்.
மாற்றுவது என்பது தரம் உயர்த்துவது கிடையாது. போதையில்லாத தமிழகத்தை உருவாக்குவதுதான் எங்களின் இலக்கு.
FL1, FL2 போன்ற உரிமம் பெற்ற பார்களிலும் விதிமீறல்கள் தொடர்பாக நடவடிக்கைகள் தொடர்கின்றன. தவறு கண்டுபிடிக்கப்பட்டால் 30 நாட்கள் அல்லது 60 நாட்கள் வரை சஸ்பெண்ட் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அடுத்தகட்டமாக FL2 பார்களிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
