தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அடியோடு மாற்றம்.. ரூ.10 காலி பாட்டில் திட்டம் கன்பார்ம்டு? புதிய தகவல்
சென்னை: காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று டாஸ்மாக் சங்கத்தினர் தரப்பில் வலியுறுத்தி வரும்நிலையில், தமிழக அரசு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இதுகுறித்து அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் சில தகவல்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
தமிழகத்தில், மது அருந்துபவர்கள் மது பாட்டில்களை சாலைகளில் வீசி செல்வதால் மனிதர்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. இதனை தடுக்கும் விதமாக காலி மது பாட்டில்களை மதுக்கடையில் திரும்பப் பெறும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழக அரசு: இதனையடுத்து, டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம் வனப்பகுதிகள் மற்றும் மலைப்பிரதேசங்களில் அமைந்துள்ள சுற்றுலா தளங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காலி மதுபானப் பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. அதன்படி, கூடுதலாக 10 ரூபாய் செலுத்தி மதுபான பாட்டில்களை வாங்கிவிட்டு, அந்த காலி பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் திரும்ப ஒப்படைக்கும்போது கூடுதலாக வசூலிக்கப்பட்ட 10 ரூபாயைத் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
இந்த திட்டம் வனம் மற்றும் மலைப்பகுதிகளில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமல்ல, இப்படி திரும்ப பெறும் பாட்டில்களை விற்பதன் மூலம் அரசுக்கு ரூ.250 கோடி வருவாய் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள்.
டாஸ்மாக் சங்கம்: ஆனால், இந்த திட்டத்துக்கு, டாஸ்மாக் ஊழியர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். காரணம், மதுபான பாட்டில்களை வாங்கிய அதே நாளில், அதே கடையில், கஸ்டமர்கள் திருப்பி கொடுத்து ரூ.10 பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதால், கஸ்டமர்களுடன் தேவையற்ற மோதல் வருகிறது..
மது பாட்டில்கள் மீது இதற்காக ஸ்டிக்கர் ஒட்டுவது, மார்க்கர் பேனா மூலம் குறியிடுவது போன்ற பணிகளை கூடுதலாக மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. காலி பாட்டில்களை வாங்கி இருப்பு வைக்க, டாஸ்மாக் கடைகளில் இடமும் இருப்பதில்லை" என்றெல்லாம் கூறி இந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அத்துடன், தமிழகமெங்கும் போராட்டத்தையும் நடத்தி வருகிறார்கள்..
ஹைகோர்ட்: ஆனால், காலி மது பாட்டிலை திரும்ப பெறும் திட்டம், வரும் நவம்பருக்குள் மாநிலம் முழுதும் அமல்படுத்தப்படும் என்று சென்னை ஹைகோர்ட்டில் தமிழக அரசு உத்தரவாதம் தந்திருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில் அவர் சொன்னதாவது: "காலி பாட்டிலை சாலை, வயல், நீர் நிலைகளில் வீசி செல்வதை தடுக்க, 9 மாவட்டங்களில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் முறை செயல்படுத்தப்படுகிறது. இதனால் சிரமம், கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாக ஊழியர்கள் சொல்கிறார்கள்..
பரிசீலனை: நீதிமன்ற வழிகாட்டுதல்படி, மதுபானங்கள் தயாரித்து வழங்கும் ஆலைகளே காலி பாட்டில்களை திரும்ப எடுத்துக் கொள்ள செய்யலாமா அல்லது, டெண்டர் கோரி ஒப்பந்த நிறுவனங்களுக்கு மது பாட்டில்களை எடுத்து கொள்ள அனுமதிக்கலாமா என்ற பரிசீலனை நடந்து கொண்டிருக்கிறது..
இதில், மது ஆலைகளே பாட்டிலை திரும்ப பெறுவதில் சிரமங்கள் குறைவு என்ற ரீதியில், அவர்களிடமே டெண்டரை ஒப்படைக்க பரிசீலிக்கப்படுகிறது. எப்படி இருந்தாலும் நீதிமன்றத்தில் நவம்பர் மாதம் வழக்கு விசாரணை வருவதால், அதற்கு முன்பே முடிவு செய்யப்படும்" என்றார் அமைச்சர் முத்துசாமி. நவம்பர் மாதம் புதிய திட்டம் அமலாகும்நிலையில், டாஸ்மாக் சங்கங்கள் என்ன செய்ய போகின்றன என தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications