"இந்தியாவிலேயே பெஸ்ட் தமிழக மாணவர்கள் தான்.." நறுக்கென சொன்ன டாடா குழும தலைவர் சந்திரசேகரன்
சென்னை: டாடா குழுமத்தின் தலைவராக உள்ள சந்திர சேகரன், நமது நாட்டிலேயே தமிழகத்தில் தான் புத்திசாலியான மாணவர்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முக்கியமான பெரு நிறுவனங்களில் ஒன்று டாடா என்று சந்தேகமே இல்லாமல் சொல்லலாம். 10 ரூபாய் உப்பு முதல் பல கோடி மதிப்பிலான சொகுசு கார் வரை அனைத்திலும் டாடா முத்திரை பதித்துள்ளது.

பிஸ்னஸ், விற்பனை ஆகியவற்றில் மட்டுமின்றி மக்களிடையே அதிக நம்பிக்கை பெற்ற நிறுவனமாகவும் டாடா இருக்கிறது. இந்த நம்பிக்கை தான் டாடா இத்தனை ஆண்டுகள் வெற்றிகரமாக இருக்கக் காரணமாக இருந்துள்ளது.
டாடா சன்ஸ்: நாட்டின் மிகப் பெரிய குழுமங்களில் ஒன்றாக இருக்கும் டாடா சன்ஸ் தலைவராக இருப்பவர் நடராஜன் சந்திரசேகரன். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் தான். விவசாய குடும்பத்தில் பிறந்து அரசுப் பள்ளியில் படித்த இவர், டாடா குழுமத்தில் டிசிஎஸ் நிறுவனத்தில் சாதாரண internஆக சேர்ந்தார். பின்னர் படிப்படியாக உழைத்து அவர் இப்போது டாடா சன்ஸ் குழுமத்தின் தலைமை பொறுப்பிற்கு வந்துள்ளார். அவர் தனது கல்லூரி படிப்பைப் படித்தது எல்லாம் தமிழ்நாட்டில் தான் என்பது மற்றொரு சிறப்பு.
டாடா குழுமத்தில் இருந்து சைரஸ் மிஸ்திரி வெளியேற்றப்பட்ட நிலையில், கடந்த 2017இல் இக்கட்டான சூழலில் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டவர் சந்திரசேகரன். அதன் பிறகு டாடா சன்ஸின் பல நிறுவனங்களை லாபகரமானதாக மாறியுள்ளது. இவர் தலைவர் பொறுப்பில் இருந்த போது தான் டாடா ஸ்டீல் நிறுவனம் பல ஆண்டுகளுக்குப் பின் லாபமீட்டத் தொடங்கியது. டாடா மோட்டர்ஸிலும் நல்ல நிலைக்கு வந்தது.
வேற லெவல் லாபம்: சந்திரசேகரனின் வழிகாட்டுதலின் கீழ், டாடா குழுமம் 2017ல் ரூ.36,728 கோடி லாபமீட்டிய நிலையில், அது 2022ல் ரூ.64,267 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், டாடா குழுமத்தின் வருவாய் ரூ.6.301 லட்சம் கோடியில் இருந்து ரூ.9.44 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படிப் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான சந்திரசேகரன் தான் தமிழக மாணவர்கள் குறித்து சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் டாடா டெக்னாலஜி நிறுவனத்துடன் 4.0 தொழில்நுட்ப மையம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. சென்னை ஒரகடத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 4.0 தொழில் மையத்தைத் தொடங்கி வைத்தார். இதில் தமிழக அமைச்சர்கள், சட்டசபை, மக்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதேபோல டாடா சன குழுமத் தலைவர் சந்திரசேகரனும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சிறந்த மாணவர்கள்: தமிழ்நாட்டில் ஐடிஐ படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஒப்பந்தம் பெரிய அளவில் உதவப் போகிறது. இதன் மூலம் அவர்களுக்கு ஏகப்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாகும். இந்த நிகழ்ச்சியில் டாடா சன் குழுமத் தலைவர் சந்திர சேகரன் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவிலேயே புத்திசாலி மாணவர்கள் தமிழ்நாட்டில் தான் இருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது என்றும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால் மாணவர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications