தட்கல் டிக்கெட் ஆன்லைன் புக்கிங்.. செகண்டில் காலியாகுதே.. பின்னணியில் அந்த பெரிய நெட்வொர்க்?
சென்னை: இந்திய ரயில்வேயில் தட்கல் முறையில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் அதில் புரோக்கர்களுடன் ரயில்வே ஊழியர்களுக்குள்ள தொடர்பு குறித்து நாடாளுமன்ற மக்களவையில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.. சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் படேல் உமேஷ்பாய் பாபுபாய் எழுப்பிய இது தொடர்பான கேள்விக்கு, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக விரிவான பதிலளித்தார்.
தட்கல் முன்பதிவு தொடங்கும் கொஞ்ச நேரத்திலேயே எல்லா சீட்டுகளும் விற்று தீர்ந்துவிடுவதும், சாதாரண மக்களுக்கு பயணச்சீட்டு கிடைக்காமல் போவதும் தொடர்கதையாகி உள்ளது.

இந்திய ரயில்வே
இது தொடர்பாக, மேல்மண்டல ரயில்வே மண்டலத்தில் பயணிகளிடமிருந்து ஏகப்பட்ட புகார்கள் சென்று கொண்டேயிருந்தது.. இந்த புகார்களை மேற்கோள்காட்டி, சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் படேல் உமேஷ்பாய் பாபுபாய் மக்களவையில் கேள்வி எழுப்பினார்.
தட்கல் டிக்கெட் விற்பனையில் ரயில்வே ஊழியர்களுக்கும் சட்டவிரோத இடைத்தரகர்களுக்கும் இடையே நிலவும் பிரச்சனைகளைசுட்டிக்காட்டிய அவர், கடந்த 3 வருடங்களில் இத்தகைய சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட ரயில்வே ஊழியர்கள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த கேள்விக்கு, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிவரங்களை வெளியிட்டார்.
தட்கல் டிக்கெட் விற்பனை
அதன்படி, கடந்த 2023ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான மூன்றரை ஆண்டு காலத்தில், ரயில்வே முன்பதிவு முறையைத் தவறாக பயன்படுத்திச் சட்டவிரோதமாகப் பயணச்சீட்டுகளை விற்பனை செய்த குற்றத்திற்காக நாடு முழுவதும் 13580 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சட்டவிரோத நெட்வொர்க்கிற்கு உடந்தையாகவும் துணையாகவும் செயல்பட்ட 65 ரயில்வே ஊழியர்களும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அட்வான்ஸ் புக்கிங் முறை
இதில் மேல்மண்டல ரயில்வே எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 9 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட இடைத்தரகர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் அனைவரும் 1989ம் ஆண்டின் ரயில்வே சட்டப் பிரிவு 143-ன் கீழ் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடரப்பட்டு வருகின்றன.
அட்வான்ஸ் புக்கிங் முறையை சில சமூக விரோத சக்திகள் மற்றும் இடைத்தரகர்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் பொருட்டு, ரயில்வே பாதுகாப்புப் படையினரால் (RPF) வழக்கமான சோதனைகளும், திடீர் சிறப்பு தணிக்கை இயக்கங்களும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று பதிலளித்தார்.
பொய்க்கணக்கு காட்டுகிறார்கள்
இதனைத் தொடர்ந்து, மேல்மண்டல ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார். அங்குள்ள லிஃப்டுகள், எஸ்கலேட்டர்கள் மற்றும் FOB எனப்படும் நடைமேம்பாலங்கள் ரொம்ப காலமாகவே செயல்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும்கூட அதிகாரப்பூர்வப் பதிவேடுகளில் அவை வழக்கம்போல் இயங்குவதாக பொய்க் கணக்கு காட்டப்படுவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்த குற்றச்சாட்டிற்கும் ரயில்வே அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.. மேல்மண்டல ரயில்வேயின் கீழ் உள்ள 46 ரயில் நிலையங்களில் 191 எஸ்கலேட்டர்களும், 86 ரயில் நிலையங்களில் 240 லிஃப்டுகளும் தற்போது பயணிகளின் பயன்பாட்டில் முழுமையாக இயங்கி வருவதாகத் தெரிவித்தார்.
லிஃப்ட், எஸ்கலேட்டர் மூடப்படவில்லை
எந்தவொரு லிஃப்ட், எஸ்கலேட்டர் அல்லது நடைமேம்பாலமும் நிரந்தரமாக மூடி வைக்கப்படவில்லை என்று தெளிவுபடுத்திய ரயில்வே அமைச்சர், பராமரிப்பு அல்லது பழுதுபார்ப்புப் பணிகளுக்காகத் தற்காலிகமாக மூடப்படும் காலங்களில் பயணிகளின் தடையற்ற நடமாட்டத்திற்காக மாற்று வழிகள் எப்போதும் திறந்து வைக்கப்படுகின்றன.
மேலும், ரயில் நிலையங்களில் நடைமேம்பாலங்களின் எண்ணிக்கை மற்றும் பயன்பாடு ஆகியவை பயணிகளின் நடமாட்டம் மற்றும் செயல்பாட்டு தேவைகளின் அடிப்படையிலேயே திட்டமிட்டுப் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
