பழைய கார், பழைய பைக்குகள் விலை உயர்ந்தன.. தமிழகத்தில் அமலானது வாகனங்கள் வரி உயர்வு.. புதிய சாலை வரி
சென்னை: தமிழகத்தில் சாலை வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.. அதுபோலவே, சரக்கு வாகனங்களுக்கு சுமைக்கு ஏற்ப வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோலவே, இறக்குமதி வாகனங்களுக்கும், பழைய வாகனங்களுக்கும் வரி கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது..
இதுகுறித்து, தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் சொல்வதென்ன? வாகன விற்பனையாளர்கள் சொல்வதென்ன? தமிழக அரசு ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது.

வந்தது அரசாணை: அதில், "வாடகை பயணிகள் போக்குவரத்து வாகனங்களில், சுற்றுலா மற்றும் ஒப்பந்த வாகனங்களுக்கு காலாண்டு வரி ரூ.4,900-ஆகவும், 35 பேருக்கு மேல் பயணித்தால் இருக்கைக்கு ரூ.3 ஆயிரமும், படுக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ்களுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையிலும் வரி உயர்கிறது. சென்னை, மதுரை, கோவை நகர சுற்றுப்பகுதிகளில் இயக்க அனுமதிக்கப்பட்ட பிரத்யேக பேருந்துகளுக்கு மேல்வரி விதிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் போக்குவரத்து, வாடகை வாகனங்களுக்கு 5 ஆண்டு வரியாக ரூ.1,400 முதல் ரூ.6,000 வரை பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில் வரி உயா்த்தப்படுகிறது.
வாழ்நாள் வரி: புதிய பைக்குகளுக்கான வாழ்நாள் வரி, ரூ.1 லட்சம் வரை 10 சதவீதம், ரூ.1 லட்சத்துக்கு மேல் இருந்தால் 12 சதவீதமும், பழைய பைக்குகளுக்கு, ஒருவருட பழையது எனில் ரூ.1 லட்சம் வரை விலைக்கு 8.25 சதவீதமும், அதற்கு மேல் 10.25 சதவீதமும், 2 ஆண்டு வரை பழையதாக இருந்தால் ரூ.1 லட்சத்துக்கு 8 சதவீதம், அதற்கு மேல் 10 சதவீதம் என வரி நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, 15 ஆண்டுகள் நிறைவடையாத இருசக்கர வாகனங்களுக்கு, 5 ஆண்டுகளுக்கான பசுமை வரி ரூ.750, மற்ற மோட்டாா் வாகனங்களுக்கு ரூ.1,500 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய வாகனங்களுக்கான சாலை பாதுகாப்பு வரி இருசக்கர வாகனங்களுக்கு ரூ.375, இலகுரக வாகனங்களுக்கு ரூ.2,250, மற்ற வாகனங்களுக்கு ரூ.3 ஆயிரம் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள்: தமிழக போக்குவரத்து ஆணையரகத்தின் பரிந்துரையின் பேரில், 13 வருடங்களுக்கு பிறகு வாகனங்களுக்கான சாலை வரி உள்ளிட்டவற்றை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளதால், கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் விலை தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது.
இது குறித்து தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் சொல்லும்போது, மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் சாலை வரி குறைவு. புதிய வாகனங்களுக்கு சாலை வரி, 3 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர, சாலை பாதுகாப்பு வரி, பழைய வாகனங்கள், வாகனங்களுக்கு எடைக்கு ஏற்றார்போல் வரி உயர்த்தப்பட்டுள்ளது என்றனர்.
வாகன விற்பனை: வாகன விற்பனையாளர் இதை பற்றி சொல்லும்போது, தற்போது உயர்த்தப்பட்டுள்ள புதிய சாலை வரியால், கார், டூ வீலர்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதாவது, இருசக்கர வாகனங்களுக்கு கூடுதலாக, 8,000 ரூபாய் வரையிலும், கார்களுக்கு கூடுதலாக, 25,000 ரூபாய் வரையிலும் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்" என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications