எக்குத்தப்பா எகிறுது.. பைக், கார் என சகல வாகனங்களுக்கும் வரி உயர்வு.. அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!
சென்னை: பைக், கார், ஆம்னி பேருந்துகள், சரக்கு வாகனங்கள் என தமிழ்நாட்டில் அனைத்து வாகனங்களுக்குமான வரி உயர்கிறது. மோட்டார் வாகனங்களுக்கான தமிழக அரசின் திருத்தப்பட்ட வரி குறித்தான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் போக்குவரத்து துறையில் 2012-ம் ஆண்டுக்கு பிறகு வரிகள் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், தமிழ்நாட்டில் அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் வரியை உயர்த்துவதற்கான சட்ட மசோதா, கடந்த சட்டசபை கூட்டத்தொடரின்போது தாக்கல் செய்யப்பட்டு, குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், அனைத்து வகை வாகனங்களுக்குமான வரி உயர்வு குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சரக்கு வாகனங்கள், வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்கள், பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள், ஆம்னி பஸ்கள், அனைத்து வகை புதிய மற்றும் பழைய 2 சக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட 3 சக்கர வாகனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான பஸ்கள் மற்றும் வாகனங்கள், கட்டுமானத்திற்கு பயன்படும் வாகனங்கள், கார்கள், டாக்சிகள், 'கேப்'கள் என அனைத்து வகை மோட்டார் வாகனங்களுக்கு புதிய வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி , வாடகை பயணிகள் போக்குவரத்து வாகனங்களில், சுற்றுலா மற்றும் ஒப்பந்த வாகனங்களுக்கு காலாண்டு வரி ரூ.4,900-ஆகவும், 35 பேருக்கு மேல் பயணித்தால் இருக்கைக்கு ரூ.3 ஆயிரமும், படுக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ்களுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையிலும் வரி உயர்கிறது. சென்னை, மதுரை, கோவை நகர சுற்றுப்பகுதிகளில் இயக்க அனுமதிக்கப்பட்ட பிரத்யேக பேருந்துகளுக்கு மேல்வரி விதிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் போக்குவரத்து, வாடகை வாகனங்களுக்கு 5 ஆண்டு வரியாக ரூ.1,400 முதல் ரூ.6,000 வரை பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில் வரி உயா்த்தப்படுகிறது. புதிய பைக்குகளுக்கான வாழ்நாள் வரி, ரூ.1 லட்சம் வரை 10 சதவீதம், ரூ.1 லட்சத்துக்கு மேல் இருந்தால் 12 சதவீதமும், பழைய பைக்குகளுக்கு, ஒருவருட பழையது எனில் ரூ.1 லட்சம் வரை விலைக்கு 8.25 சதவீதமும், அதற்கு மேல் 10.25 சதவீதமும், 2 ஆண்டு வரை பழையதாக இருந்தால் ரூ.1 லட்சத்துக்கு 8 சதவீதம், அதற்கு மேல் 10 சதவீதம் என வரி நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, 15 ஆண்டுகள் நிறைவடையாத இருசக்கர வாகனங்களுக்கு, 5 ஆண்டுகளுக்கான பசுமை வரி ரூ.750, மற்ற மோட்டாா் வாகனங்களுக்கு ரூ.1,500 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய வாகனங்களுக்கான சாலை பாதுகாப்பு வரி இருசக்கர வாகனங்களுக்கு ரூ.375, இலகுரக வாகனங்களுக்கு ரூ.2,250, மற்ற வாகனங்களுக்கு ரூ.3 ஆயிரம் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications