இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆம்பூர் பூஜாரி.. எஸ்கேப் ஆனவரை புதுச்சேரியில் மடக்கிய போலீஸ்
திருப்பத்தூர்: இளம்பெண்ணுக்கு கோவில் அர்ச்சகர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவில் அர்ச்சகர் தலைமறைவாக இருந்த நிலையில், அவரை புதுச்சேரியில் போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் உள்ளது நாகநாத சுவாமி கோவில். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோவிலில் அர்ச்சகராக பணிபுரியும் தியாகராஜன் என்பவர், அதே கோவிலில் தூய்மை பணி செய்து வந்த இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அர்ச்சகர் தியாகராஜன் வலுகட்டாயமாக பாலியல் தொல்லை கொடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த இளம்பெண் போலீசில் புகார் கூறியிருந்தார்.
இதையடுத்து, தூய்மை பணியாளர் அளித்த புகாரின் அடிப்படையில் அர்ச்சகர் தியாகராஜன் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அர்ச்சகர் தியாகராஜனை போலீசார் தேடி வந்தனர். அர்ச்சகர் தலைமறைவாக இருந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து, புதுச்சேரி சென்ற போலீசார் சுற்றி வளைத்து தியாகராஜனை கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பாலியல் புகாருக்குள்ளான தியாகராஜனுக்கு ஏற்கெனவே திருமணங்களாகி, 2 மனைவிகள் மற்றும் குழந்தைகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அர்ச்சகர் தியாகராஜன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் கோயில் செயல் அலுவலர் விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பி உள்ளார். கோவில் அர்ச்சகர் பணியிலிருந்து அவரை நீக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications