பரந்தூர் விமான நிலையம்.. பிப்.27 வரை கால அவகாசம்.. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் அறிவிப்பு!
பரந்தூர் விமான நிலையம் தொடர்பான டெண்டர் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை: பரந்தூர் விமான நிலையம் தொடர்பான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கை தயார் செய்ய கோரப்பட்ட டெண்டர் கால அவகாசம் இரண்டாவது முறையாக நீட்டிப்பு செய்து தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 6ம் தேதியுடன் டெண்டர் கால அவகாசம் முடிவடைந்த நிலையில், வரும் 27ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 13 கிராமங்களை உள்ளடக்கி 4,750 ஏக்கர் பரப்பளவில் புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
சென்னையின் 2வது பெரிய விமான நிலையமாக அமைய உள்ள இந்த பரந்தூர் விமான நிலையத்திற்கான இடங்களும் தேர்வு செய்யப்பட்டு, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே ஏகனாபுரம், மேலேறி, நாகப்பட்டு, நெல்வாய், தண்டலம் உள்ளிட்ட கிராமங்களில் விளைநிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளன.

பரந்தூர் விமான நிலையம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள கிராம மக்கள் 150 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும் தமிழ்நாடு அரசு தரப்பில் விமான நிலையம் அமைப்பதற்காக போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இன்னொரு பக்கம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான டெண்டர் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

கால அவகாசம் நீட்டிப்பு
இதற்காக ஏற்கனவே சில ஒப்பந்ததாரர்கள் முன்வந்துள்ளனர். இந்த நிலையில் கூடுதலாக ஒப்பந்ததாரர்களையும் சேர்ப்பதற்காக கால அவகாசம் நீட்டிப்பட்டுள்ளது. முன்னதாக நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் கடந்த பிப்.6ம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது மீண்டும் கூடுதல் ஒப்பந்ததாரர்களை சேர்ப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 27ம் தேதி வரை நீட்டிப்பு செய்து தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மாஸ்டர் பிளான்
அந்த அறிவிப்பில் புதிதாக அமைய உள்ள விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து, விமான நிலையம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு ஆகியவை குறித்து ஆய்வு செய்ய டெண்டர் கோரப்பட்டது. விமான நிலையத்தின் மூலம் கிடைக்கும் வருவாய், மேம்பாட்டு பணிகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, சமூக தாக்க மதிப்பீட்டு அறிக்கை, விமான நிலைய மேம்பாடு தொடர்பாக மாஸ்டர் பிளான், திட்ட வரைபடம் உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் இந்த டெண்டர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்
கடந்த 15 ஆண்டுகளில் சென்னையில் விமான போக்குவரத்தின் வளர்ச்சி, 2023-24 ஆண்டு முதல் 2069-70 ஆண்டு வரை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் விமான போக்குவரத்து எந்த அளவுக்கு அதிகரிக்கும் என்பதை பொறுத்து, அது தொடர்பாகவும் அறிக்கை தயார் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே கூடுதல் ஒப்பந்ததாரர்களை சேர்ப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.















Click it and Unblock the Notifications