சீறிப்பாய்ந்த சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில்.. விழுப்புரத்தில் வியந்து பார்த்த பயணிகள்! அடடே.. செம!
சென்னை: சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் வரும் 24 ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ள நிலையில் ரயிலுக்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரயிலை பார்த்ததும் பயணிகள் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
இந்தியாவில் ரயில் பயணிகளின் வசதியை மேம்படுத்த ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகைய்ல், விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டது. முதன் முதலாக டெல்லி - வாரணாசி இடையே இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை பல்வேறு சொகுசு வசதிகளை கொண்ட ரயிலாக இருந்தது. இதனால், பயணிகளுக்கும் இந்த ரயில் மீதான ஆர்வம் அதிகரித்தது. தற்போது வரை 25 வந்தே பாரத் ரயில்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூருக்கும் சென்னையில் இருந்து கோவைக்கும் என இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
வந்தே பாரத் ரயில் முழுவதும் ஏசி வசதி கொண்டது ஆகும். தானியங்கி கதவுகள், வைஃபை வசதிகள், பயோ டாய்லட்டுகள் என வந்தே பாரத் ரயில்களில் உள்ள வசதிகளை அடுக்கிக் கொண்டே போகலாம். சிறப்பான வசதிகள் இருந்தாலும் இதில் கட்டணம் சற்று அதிகமாக இருப்பதாக பயணிகள் மத்தியில் ஆதங்கம் இல்லாமலும் இல்லை. எனினும், வந்தே பாரத் ரயில்களை அதிக வழித்தடங்களில் இயக்க வேண்டும் என்றும் பயணிகள் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
குறிப்பாக தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் வகையில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதன்படி, சென்னை எழும்பூர் - நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. செப்டம்பர் 24-ம் தேதி இந்த ரயில் தொடங்கப்பட உள்ளது. இதற்காக டிராக்கை சரி செய்ய வேண்டும். குறுகிய வளைவுகளை நீக்க வேண்டும்.
இந்த பணிகள் நடந்து வந்த நிலையில் எதிர்பார்த்ததை விட வேகமாக பணிகள் முடிந்துள்ளன. இதனால், இன்னும் 3 தினங்களில் இந்த ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. பிரதமர் மோடி காணொலி வாயிலாக வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார். தென் மாவட்ட மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான சென்னை - நெல்லை இடையெயான வந்தே பாரத் ரயில் இன்னும் சில நாட்களில் நிறைவேறப்போகிறது.
இந்த ரயில் சென்னையில் இருந்து நெல்லையிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரயில், பிற்பகல் 2 மணிக்கு சென்னை வந்தடையும். மீண்டும் சென்னையிலிருந்து மதியம் மூன்று மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் இரவு 11 மணிக்கு நெல்லையை சென்றடையும் என தெரிகிறது. நெல்லையிலிருந்து கிளம்பும் வந்தே பாரத் ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
செல்லும் நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயிலுக்கான டிக்கெட் 1400 முதல் 1500 வரை வசூலிக்கலாம் என தெரிகிறது. அது போல் எக்ஸிக்யூட்டிவ் சேர் காரில் ரூ 3000 வரை டிக்கெட் விற்பனை இருக்கும் என்றும் தெரிகிறது. மேலும் உணவு வேண்டுமானால் அதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது சென்னை - நெல்லை சென்றடைய சராசரியாக 11 மணி நேரம் வரை ஆகும் நிலையில், வந்தே பாரத் ரயில் 8 மணி நேரத்திற்கு உள்ளாகவே சென்று சேர்ந்துவிடும்.
இதனிடையே, வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லை நோக்கி வந்தே பாரத் ரயில் காற்றை பிளந்தபடி சீறிப்பாய்ந்தது. இதனை விழுப்புரம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தந் பயணிகள் உற்சாகத்துடன் பார்த்தனர். வந்தே பாரத் ரயில் விழுப்புரத்தில் நிற்காது என்பது கவனிக்கத்தக்கது. விழுப்புரம் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலை பார்த்ததும் ரயில் பயணிகள் ஆர்வமாக செல்பி எடுத்ததையும் காண முடிந்தது.












Click it and Unblock the Notifications