Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பீகாரும் தமிழ்நாடும் ஒன்னா? எங்களுக்கு எதற்கு தகுதி தேர்வு? கொந்தளித்த ஆசிரியர்கள்.. பறந்த கோரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆசிரியராக பணியில் தொடரவும் பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆசிரியர்கள் ஓய்வு பெற 5 ஆண்டுகள் மட்டுமே இருந்தால் அவர்கள் பணியை தொடரலாம் என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தீர்ப்பில் இருந்து விலக்கு பெற வேண்டுமென தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

டெட் (tet) எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை மத்திய மாநில அரசுகள் ஆண்டுதோறும் தனித்தனியாக நடத்தி வருகின்றன. இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே உரிய கல்வித் தகுதி இருந்தாலும் அவர்கள் ஆசிரியர் பணியில் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏற்கனவே பணியில் சேர்ந்தவர்களுக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இதேபோல பல்வேறு மாநில அரசுகளும் வழக்கு தொடர்ந்தனர்.

TET Mandatory Issue

டெட் தேர்வு

இந்த நிலையில் நேற்று தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. அதில் ஐந்தாண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும், தேர்ச்சி பெறவில்லை என்றால் அவர்கள் பணியை விட்டு வெளியேறலாம் அல்லது சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓய்வு பெறுவதற்கு ஐந்து ஆண்டுகள் மட்டுமே இருந்தால் அவர்கள் பணியை தொடலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு

இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசு தேர்வில் இருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மெண்ட் விடுத்துள்ள அறிக்கையில்," ஆசிரியர் தகுதி தேர்வு: NCTE-யின் தெளிவின்மை, ஆசிரியர் நலனுக்கு எதிரான அரசியல் சாசனப் பிரச்சனையாக மாறியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்

இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது, அந்நாளைய அதிமுக அரசு தீவிர கவனம் செலுத்தியிருந்தால், ஆசிரியர்களுக்கு சாதகமான முடிவு கிடைத்திருக்க வாய்ப்பிருந்தது. அப்போது, பதவி உயர்வுக்கு மட்டுமே ஆசிரியர் தகுதி தேர்வு (TET) கட்டாயம் என்ற உத்தரவு வழங்கப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் இதனை விரிவாக்கி, பணியில் தொடரவே TET தேவை என அறிவித்தது, 2011-க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நியாயமற்ற சுமையாக அமைந்துள்ளது. இது அவர்களின் நீண்டகால அனுபவத்தையும், முறையான தகுதிகளையும் புறக்கணிக்கும் செயலாகும்.

கல்வி உரிமைச் சட்டம்

தேசிய கல்வி ஆசிரியர் கவுன்சில் (NCTE)-யின் 2011 அறிவிப்பு, கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமைச் சட்டம் (RTE Act, 2009) பிரிவு 23-ஐ அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர்களுக்கான குறைந்தபட்ச தகுதிகளை நிர்ணயித்தது. ஆனால், 2011-க்கு முன் நியமிக்கப்பட்டவர்களுக்கு TET கட்டாயமா என்பது குறித்து தெளிவான வழிகாட்டுதல் இல்லை. புதிய நியமனங்களுக்கு மட்டுமே TET கட்டாயமாக்கப்பட்டது, ஆனால் முன்பணியாற்றியவர்களுக்கு இது முன்தேதியிட்டு (retrospectively) பயன்படுத்தப்படவில்லை. இந்தத் தெளிவின்மை, மாநில அரசுகளுக்கும் ஆசிரியர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது, இறுதியில் 2025-ல் TET-ஐ கட்டாயமாக்கும் முடிவுக்கு வழிவகுத்தது, இது ஆசிரியர்களின் பணி பாதுகாப்பை அச்சுறுத்துகிறது.

தமிழ்நாடு ஆசிரியர்கள்

NCTE, 2011-க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதி மேம்பாட்டிற்கு மாற்று வழிகளை வகுக்கவில்லை. RTE சட்டம் 2015 வரை அவகாசம் வழங்கிய போதிலும், TET-க்கு மாற்றாக பயிற்சித் திட்டங்கள், தொழில்முறை மேம்பாட்டு படிப்புகள் அல்லது அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீடு முறைகள் அறிமுகப்படுத்தப்படவில்லை. TET தேர்வு நடத்துவது, ஆசிரியர்களைத் தயார்படுத்துவது அல்லது உதவி வழங்குவது குறித்து எவ்வித வழிகாட்டுதலும் இல்லை. இதனால், அனுபவமிக்க ஆசிரியர்கள் தங்கள் தகுதியை மீண்டும் நிரூபிக்க வேண்டிய நியாயமற்ற சுமைக்கு உள்ளாகினர்.

தேசிய கல்விக் கொள்கை

கல்வி, அரசியலமைப்பின் பொதுப்பட்டியலில் (List III) உள்ளதால், மத்திய அரசின் கல்விக் கொள்கைகள் மாநிலங்களின் சுயாட்சிக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன. புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக குரல் எழுப்பியவர்கள் அப்போது பரிகாசிக்கப்பட்டனர். ஆனால், இன்று ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, மாநில அரசு சமூக நீதி அடிப்படையில் உறுதியாக செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. NCTE-யின் தெளிவற்ற வழிகாட்டுதல்கள், மாநில அரசுகளின் உரிமைகளை பாதித்துள்ளது.

பணி பாதுகாப்பு

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், சட்ட வல்லுநர்கள் மற்றும் ஆசிரியர் அமைப்புகளுடன் ஆலோசித்து, பணி தொடர்ச்சி மற்றும் பதவி உயர்வுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத தெளிவான தீர்வை வகுப்பார் என நம்பிக்கை உள்ளது. மாநில அரசு, ஆசிரியர்களின் நலனை முதன்மைப்படுத்தி, உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, ஆசிரியர்களின் நலன், பணி பாதுகாப்பு, மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றைப் பாதுகாக்க அரசுடன் இணைந்து பணியாற்ற உறுதி பூண்டுள்ளது. NCTE-யின் அறிவிப்புகளுக்கு உரிய சட்ட ஆலோசனைகளையும், மாற்று நடைமுறைகளையும் வகுக்க எங்கள் அமைப்பு எப்போதும் தயாராக உள்ளது" என கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+