எம்ஜிஆரின் ஆன்மாவால் உயர்ந்த இருக்கை.. புகழ்ந்த அதிமுக எம்எல்ஏ.. கண் கலங்கிய சபாநாயகர்
சென்னை: சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. தவெக, திமுக இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. மறுபக்கம் அதிமுக, தவெக உறுப்பினர்கள் இடையேயும் காரசார விவாதம் நடக்கிறது. எம்ஜிஆரின் ஆன்மா தான் உங்களை பெரிய இடத்தில் உட்கார வைத்துள்ளது என சபாநாயகரை அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் புகழ்ந்தார். அப்போது ஜே.சி.டி பிரபாகர் உணர்ச்சிவசப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
சட்டமன்றத்தில் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை பார்த்து அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் பேசுகையில், "புரட்சி தலைவரால் தொடங்கப்பட்ட அதிமுகவுக்கு ராயப்பேட்டையில் தலைமை அலுவலகத்திற்கான கட்டிடம் கட்டப்பட்டது. அப்போது அதிமுக அலுவலகத்துக்கு எம்ஜிஆர் மாளிகை என்று பெயர் வைக்க வேண்டுமென நீங்கள் உரத்த குரலில் வலியுறுத்தினீர்கள். எம்ஜிஆரின் ஆன்மா தான் உங்களை இந்த உயரமான இருக்கையில் அமரவைத்துள்ளது.

எம்ஜிஆரின் ஆன்மா
இங்குள்ள நண்பர்கள் எல்லாம் பேசும்போது எம்ஜிஆரின் குரலை எழுப்பி வருகிறார்கள். எம்ஜிஆரின் பாடல்களை பாடுகிறீர்கள். வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையனும் எங்களுடன் மிகவும் கஷ்டப்பட்டார். 90 நாட்கள் சிறையில் இருந்தார். ஏன் இதை சொல்கிறேன் என்றால், இதற்கு காரணம் கேட்டால் நிறைய விளக்கம் கொடுக்க முடியும். கட்சியின் வழக்கறிஞர் அணி செயலாளர் என்கிற அடிப்படையில் அவரை 4 முறை சிறையில் சந்தித்தேன்.
சேலம் சிறையில் இருமுறையும், கோவை சிறையில் இருமுறையும் அவரை சந்தித்தேன். அந்த வேதனையை காரணமாக சில காலத்தில் அதை பேச வேண்டியுள்ளது. பேசாமல் இருந்தால் ஏன் பேசவில்லை என்கிறார்கள், பேசினால் ஏன் பேசினீர்கள் என்று கேட்கிறார்கள். புரட்சி தலைவரின் ஆன்மா உங்களை பெரிய இடத்தில் உட்கார வைத்துள்ளது. பல இடங்களில் உங்கள் பெயர் ஒலித்துள்ளது. நாடு முழுவதும் உங்கள் புகழ் ஒலிக்கட்டும்" என்றார். தளவாய் சுந்தரம் பேசும்போது பிரபாகர் உணர்ச்சிவசத்துடன் நன்றி கூறினார்.
வழக்குகள்
முன்னதாக தளவாய் சுந்தரம் தன் மீது திமுக ஆட்சியில் 24 வழக்குகள் போடப்பட்டதாக கூறினார். இதற்கு திமுக எம்எல்ஏ ஆஸ்டின்,"தளவாய் சுந்தரம் எங்கள் ஊர்தான். அவர் நீதிமன்றம் சென்று நான் பார்க்கவிலலை. அவர் மீது எங்கள் ஆட்சியில் தொடுத்த வழக்குகளின் விபரத்தை வாங்கிக் கொடுங்கள்" என சபாநாயகரிடம் கேட்டார். அதற்கு தளவாய் சுந்தரம், "எல்லா வழக்குக்கும் நான் செல்ல வேண்டியதில்லை. அந்த வழக்குகளை ரத்து செய்வதற்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். விரைவில் பட்டியல் வழங்குகிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications
