காமராஜர் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய கருணாநிதி அனுமதி மறுத்தாரா? தாரகைக்கு தங்கம் பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் உடலை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய, கலைஞர் தலைமையிலான திமுக அரசு அனுமதி மறுத்ததாக பேரவையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு, அவைக்குறிப்புகளையும் வரலாற்று ஆதாரங்களையும் முன்வைத்து முன்னாள் அமைச்சரும், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு இன்று பேரவையிலேயே பதிலடி கொடுத்தார்.

குறிப்பாக, காமராஜர் மறைந்தபோது அவருடைய இல்லத்துக்கு உடனடியாகச் சென்று கலைஞர் மரியாதை செலுத்தியது தொடங்கி அவரது உடலை அரசு மரியாதையுடன் ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்க ஏற்பாடு செய்தது. பின்னர் கிண்டியில் காந்தி மண்டபத்திற்கு அருகே நினைவிடம் அமைக்க நடவடிக்கை எடுத்தது வரை நடந்த நிகழ்வுகளை தங்கம் தென்னரசு விரிவாக எடுத்துரைத்தார்.

Thangam Thennarasu

நேற்றைய தினம், தமிழக சட்டசபையில் காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் தாரகை கத்பர்ட், கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, திமுக ஆட்சிக் காலத்தில் காமராஜர் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது என்ற தகவலை பேரவையில் பதிவு செய்திருந்தார்.

இதற்கு இன்று பதிலளித்த தங்கம் தென்னரசு, வரலாற்றிலும், இந்தப் பேரவையிலும் பிழையான அல்லது உண்மைக்கு மாறான செய்திகள் பதிவாகிவிடக் கூடாது என்ற அடிப்படையில் விளக்கம் அளிப்பது எனது கடமையாகும்.

பெருந்தலைவர் காமராஜர் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காலையில் இயற்கை எய்தினார். அவர் மரணமடைந்த செய்தியைக் கேள்விப்பட்டவுடன், அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கருணாநிதி உடனடியாக அவருடைய இல்லத்திற்கு விரைந்து சென்று மரியாதை செலுத்தினார். அப்போது அங்கே இருந்த காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், அவருடைய உடலை தேனாம்பேட்டையில் இருக்கக் கூடிய காங்கிரஸ் மைதானத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது அங்கே வந்த கருணாநிதி, பெருந்தலைவர் காமராஜர் என்பவர் ஏதோ காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் மாத்திரம் கிடையாது; அவர் ஒரு பெரிய தேசியத் தலைவர். அவருக்கு உரிய முறையில் நாம் அடக்கம் செய்து, அந்த இடத்தில் நினைவிடம் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதன்படி, காமராஜரின் உடலை ராஜாஜி மண்டபத்துக்கு கொண்டு சென்று, முழு அரசு மரியாதையுடன் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்க ஏற்பாடு செய்ததுடன், கிண்டியில் காந்தி மண்டபத்திற்கு அருகே அவரது நினைவிடம் அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் கருணாநிதி மேற்கொண்டார்.

இதற்கான முக்கியமான வரலாற்றுச் சான்றாக, அன்றைய மேலவையின் எதிர்க்கட்சித் தலைவரும் காமராஜரின் நெருங்கிய நண்பருமான ராஜாராம் நாயுடு அவையில் பேசிய உரையை தங்கம் தென்னரசு சுட்டிக்காட்டினார்.

காமராசரை இழந்த துயரில் கழக அரசு பங்கு கொண்டது குறித்து, காமராசரினுடைய நெருங்கிய நண்பரும் மேலவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவருமான ராஜாராம் நாயுடு அப்போது மேலவையிலே பேசியது: காமராசர் மறைந்தன்று என்னால் எங்கு பேசினாலும் இதைச் சொல்லாமல் இருக்க முடியாது. நமது மாநில அரசை நடத்தும் முதலமைச்சர் கருணாநிதி, கல்வி அமைச்சரும் மற்ற அமைச்சர்களும் அங்கு வந்து, அவர்களுடைய சகோதரர்களில் ஒருவர் இறந்துவிட்டதைப்போல அந்த இடத்தில் தோற்றமளித்தார்களே தவிர, மற்றொரு கட்சியினுடைய தலைவர் இறந்தார் என்று அவர்கள் நினைத்ததாகத் தெரியவில்லை.

எங்களைக் கட்டிப்பிடித்து முதலமைச்சர் கருணாநிதி அன்று துக்கம் தெரிவித்ததும், அழுததும் என்னுடைய உயிர் உள்ள அளவும் மறக்க முடியாது. அவ்வளவு பாச உணர்ச்சியை அவர்கள் காட்டினார்கள். தமிழ்நாடு அரசாங்கத்திடமிருந்து அன்று அரசு மரியாதையை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் அவருடைய உடலைப் பார்வைக்கு வைத்து, அங்கேயே எரித்து நினைவுச் சின்னம் கட்டுவது என்றுதான் முதலில் முடிவு செய்திருந்தோம்.

சிலர் ராஜாஜி ஹாலுக்குக் கொண்டு போய் வைக்க வேண்டும், முதலமைச்சரிடத்திலே கேளுங்கள் என்று சொன்னார்கள். இதை எப்படிக் கேட்பது என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில், அதே வினாடியில் முதலமைச்சர் கருணாநிதி, காமராசர் வீட்டுக்குள் வந்துவிட்டார்கள். வந்ததும் முதல் வேலையாக, இங்கே கூட்டத்தைச் சமாளிக்க முடியாது, உடனே ராஜாஜி ஹாலுக்குக் கொண்டு போக வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு ஏதோ கனவு கண்டதைப்போல சொன்னார்கள். எங்கள் மனதை எப்படித் தெரிந்துகொண்டார்கள் என்றே எங்களுக்குத் தெரியவில்லை.

எனக்கும், என்னுடைய சகாக்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கும் இதற்கெல்லாம் என்ன கைம்மாறு செய்வது என்றே புரியவில்லை. பிறகு ராஜாஜி ஹாலுக்கு வந்து எவ்வாறு வைக்க வேண்டும் என்று அவையிலெல்லாம் சரி செய்து மேடை போட்டுக் கொண்டிருக்கக் கூடிய நேரத்தில், அங்கேயே மந்திரி சபை கூடியது என்ற வகையில் எல்லா அமைச்சர்களும் அங்கே வந்துவிட்டார்கள்.

அவரை எங்கே வைப்பது என்பதற்கு காந்தி மண்டபத்திற்குப் பக்கத்தில் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதே கணத்தில் முடிவு செய்தது மாத்திரமல்லாமல், அன்று இரவே முதலமைச்சர் கருணாநிதி அவருடைய வண்டியிலேயே என்னையும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி காரியதரிசியையும் அழைத்துக் கொண்டு, மழை பெய்து கொண்டிருக்கும்போதே இரவு 8 மணிக்கு முதலமைச்சர் கருணாநிதி, பொதுப்பணித்துறை அமைச்சர்களும் அந்த இடத்திற்குச் சென்றோம். அவர்களே செய்திருக்கலாம், எங்களை அழைத்துச் சென்றிருக்க வேண்டியதில்லை; இருந்தாலும் எங்களையும் அழைத்துக் கொண்டு அந்த இடத்தில், அந்த இரவில் வெளிச்சமில்லை, கார்களையெல்லாம் திருப்பி நிறுத்தி விளக்கைப்போட்டு, இடத்தைத் தேர்ந்தெடுத்து, அன்றிரவே அங்குள்ள மரங்களையெல்லாம் அகற்றி, இரவெல்லாம் முதலமைச்சர் அங்கேயே தூக்கமில்லாமல் இருந்து ஏற்பாடுகளையெல்லாம் செய்தார்கள். இதற்கெல்லாம் என்ன கைமாறு செய்வது என்று எங்களுக்குத் தெரியவே இல்லை. கட்சியைப் பற்றி நான் எண்ணவில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் என்றுமே இதை மறக்க முடியாது. நான் உள்ள அளவும் அதை மறக்க முடியாது எனக் கூறியுள்ளார்.

இவ்வாறு ராஜாராம் நாயுடு சொன்னது இன்றைக்கும் மேலவையினுடைய அவைக்குறிப்புகளிலே இருக்கிறது. கருணாநிதியை தொடர்ந்து, ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலகட்டங்களிலெல்லாம் பெருந்தலைவர் காமராஜருக்கு எவ்வளவு சிறப்புகளைச் செய்தார்கள் என்பதை நாம் தொடர்ந்து பல்வேறு விஷயங்களாகச் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

மெரினா கடற்கரைச் சாலைக்கு காமராஜர் பெயர் சூட்டியதிலிருந்து, இன்று அவையில் நாம் காணும் காமராஜரின் திருவுருவப் படம் வரையிலும் திமுகவும் ,கருணாநிதியும் காமராஜருக்கு அளித்த மரியாதை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.

முன்னதாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் அந்தப் படத்தை அவையில் திறந்து வைத்த அந்தக் காலகட்டத்தில்கூட, அந்த படத்தின் கீழ் இடம்பெற்ற உழைப்பே உயர்வு தரும் என்ற வரிகளை எழுதித் தந்தவர் தலைவர் கருணாநிதிதான். காமராஜரின் உழைப்பையும் பெருமையையும் மதித்து, அதை தலைமுறைகள் நினைவுகூரும் வகையில் பதிவு செய்தவர் கருணாநிதி.

எனவே, அன்று தொடங்கி, பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக சட்டமாகக் கொண்டு வரக்கூடிய அந்த நிலை வரை, எண்ணற்ற விஷயங்களை நான் அடுக்கிக்கொண்டே செல்லலாம். இருந்தாலும், நேரத்தின் அருமை கருதி என்றைக்கும் பெருந்தலைவர் காமராஜருக்கு மிகுந்த மரியாதையோடு, எல்லாச் சிறப்புகளையும் செய்யும் வகையில் செயல்பட்டவர் நம்முடைய முதலமைச்சராக இருந்த கருணாநிதியும், திராவிட முன்னேற்றக் கழக அரசும், நம்முடைய திராவிட மாடல் அரசின் முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின்தான் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+