ஸ்டாலினுக்கு நன்றி அறிவிப்பு விழா! கோவையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள்! செந்தில்பாலாஜியின் ஸ்பெஷல் பிளான்
கோவையில் ஸ்டாலினுக்கு நாளை நன்றி அறிவிப்பு விழா.
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோவையில் நாளை நன்றி தெரிவிக்கும் விழா நடைபெறுவதால் அதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன.
விழா ஏற்பாடுகளை அமைச்சர் செந்தில்பாலஜி நேரடியாக கவனித்து வருவதால் வழக்கம் போல் கூட்டமும் மாஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரையும் அடிக்கடி கோவைக்கு அழைத்து வந்து தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் சக அமைச்சர்களே அமைச்சர் செந்தில்பாலாஜி மீது பொறாமை கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.

இலவச மின்சாரம்
விசைத்தறிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை 1000 யூனிட்டாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது விசைத்தறியாளர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி பரிசாக விசைத்தறிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை 1000 யூனிட் வரை கடந்த வாரம் உயர்த்தி அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். இது விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வரும் லட்சக்கணக்கான குடும்பத்தினருக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளித்தது.

விசைத்தறி தொழில்
மிகவும் நெருக்கடியான சூழலை விசைத்தறி தொழில் சந்தித்து கொண்டிருக்கும் நிலையில், முதல்வர் வெளியிட்ட இந்த அறிவிப்பு விசைத்தறியாளர்கள் மத்தியில் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. இதையடுத்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் அமைச்சர் செந்தில்பாலாஜியுடன் முதலமைச்சர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

ஸ்பெஷல் திட்டம்
அதோடு மட்டுமல்லாமல் ஒரு பெரிய விழா எடுத்து அதில் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம் என்றும் அதற்கு தேதி வேண்டும் எனவும் கேட்டிருக்கிறார்கள். உடனடியாக முதல்வர் தரப்பில் 11ஆம் தேதி, தேதி கொடுக்கப்பட்டதால் கோவையில் விழா ஏற்பாடுகள் மளமளவென நடைபெற்று வருகின்றன. இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விசைத்தறியாளர்கள் மூலம் சிறப்பு பட்டம் ஒன்றை சூட்டவும் அமைச்சர் செந்தில்பாலாஜி ஸ்பெஷல் திட்டம் ஒன்றை வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கொங்கு ஈஸ்வரன்
இந்த விழாவில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் மற்றும் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் உறுப்பினர்கள் குடும்பத்துடன் பங்கேற்கவுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications