தந்தி டிவி சர்வே.. ஒவ்வொரு தொகுதியிலும் செம ஃபைட்.. அதிமுக, திமுக ஓட்டு சதவீதம் பார்த்தாலே தெரியுது
சென்னை: தந்தி டிவி வெளியிட்டுள்ள தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகளில் பல சுவாரசியங்கள் அடங்கியுள்ளன. தமிழகத்தில் 10 வருடங்களாக அதிமுக ஆட்சி நடைபெற்று வருவதால் இந்த முறை எளிதாக திமுக வென்று விடும் என்று ஆரம்பத்தில் கருத்துக்கள் நிலவின.
சில தேசிய ஊடகங்களில் வெளியான கருத்துக் கணிப்புகள் அது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தின. ஆனால் தேர்தல் வாக்குறுதிகள், களநிலவரம், பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களும் தற்போது திமுக அதிமுக கடும் போட்டியை கொடுக்க ஆரம்பித்து இருப்பதைக் காட்டுகின்றன .
அதற்கு தந்தி டிவி கருத்துக்கணிப்பு ஒரு உதாரணம்.

234 தொகுதிகள்
234 தொகுதிகளிலும் மார்ச் 5ஆம் தேதி முதல் மார்ச் 28ம் தேதி வரை தந்தி டிவி கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது .அந்த முடிவுகள் முதல் கட்டமாக நேற்று இரவு வெளியாகின. 50 தொகுதிகளுக்கான கணிப்புகளை இதுவரை வெளியிட்டுள்ளது தந்தி டிவி. நேற்று வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பில், தாம்பரம், பூந்தமல்லி, வில்லிவாக்கம், அண்ணா நகர், தி நகர், திருவிக நகர், சைதாப்பேட்டை, சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக இடங்களில் திமுக வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அம்பாசமுத்திரம், சங்கரன் கோவில் , சோழவந்தான், மதுரை தெற்கு தொகுதிகளை அதிமுக வெல்லும் என்று கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

திமுக வாக்குகள்
கருத்துக் கணிப்பில் யாருக்கு எத்தனை சதவீதம் வாக்குகள் என்பதை தந்திடிவி குறிப்பிட்டிருந்தது. திமுக வெல்லக்கூடிய தொகுதிகளில் அதிகபட்சம் 50% அல்லது அதை ஒட்டி மேலோ அல்லது கீழோ வாக்குகளை பெறுகிறது. ஆனால் 2வது இடம் வந்தாலும், அதிமுகவும் 40 சதவீதத்துக்கு மேலே பெறுகிறது. மற்றவர்கள், 3, 4 போன்ற சதவீதத்தில் வாக்குகளை பெறுவார்கள் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

வாக்கு சதவீதம்
உதாரணத்திற்கு, குளித்தலை தொகுதியில் திமுக அதிகபட்சம் 54 சதவீதம் வாக்குகளை பெறும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. அதேநேரம், அதிமுக 48 சதவீதம் வரை வாக்குகள் பெறவும் வாய்ப்பு இருப்பதாக கூறுகிறது தந்தி டிவி. சிதம்பரம் தொகுதியில் அதிமுக அதிகபட்சம் 50 சதவீதம் வாக்குகளை பெற்று வெற்றி பெறும் என்றாலும், திமுக கூட்டணியிலுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 46 சதவீதம் வாக்குகளை பெற வாய்ப்பு இருப்பதாக கூறுகிறது தந்தி டிவி.

கிளீன் ஸ்வீப் இல்லை
மொத்தத்தில் எந்த கட்சிக்கும் கிளீன் ஸ்வீப் என்பது இருக்காது என்பதை தான் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன. இரட்டை தலைமை இருந்தாலும், ஜெயலலிதா மறைந்தாலும், அதிமுக வாக்கு வங்கி எந்த அளவுக்கு நிலையானதாக இருக்கிறது என்பதுதான் இந்த டிவி கருத்துக் கணிப்பில் இருந்து கிடைக்கக்கூடிய மற்றொரு தகவலாக இருக்கிறது.

அதிக தொகுதிகள் திமுகவுக்கு
அதே நேரம் 50 தொகுதிகளில் 12 தொகுதிகளை அதிமுக வெல்லும் என்றும் 34 தொகுதிகளை திமுக கூட்டணி வெல்ல கூடும் என்றும் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. எனவே, திமுக அதிகமாக வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கருதக்கூடிய அதே நேரத்தில் அதிமுக கடும் போட்டியாக உருவெடுத்துள்ளது. இந்த களம் எளிதாக இருக்கப் போவது கிடையாது என்பதை உறுதி செய்துள்ளது தந்திடிவி.












Click it and Unblock the Notifications