எல்லோரும் ரெடியா இருங்க.. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய உத்தரவு!
சென்னை: தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழலில், அந்த தேர்தல் தற்போது தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் விரைவில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையை தவிர தமிழகம் முழுவதும் வாக்கு பெட்டிகளை தயார் நிலையில் வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதுதான் இந்த எதிர்பார்ப்புக்கு காரணம்..
தமிழகத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர்த்து, உள்ளாட்சி அமைப்புகளின் கீழும் மக்கள் பிரதிநிதிகள் செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை ஊரகம், நகர்ப்புறம் என இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் இருக்கிறது.

மாநகராட்சி மேயர், துணை மேயர், வார்டு கவுன்சிலர்கள், நகராட்சி தலைவர், நகராட்சி துணைத் தலைவர், கவுன்சிலர்கள் என நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. இவை தவிர்த்து ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது.
ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சித் தலைவர், வார்டு கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்க ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டில் 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. வார்டு வரையறை பிரச்சினை, எல்லை தீர்மானம் உள்ளிட்ட காரணமாக ஒன்பது மாவட்டங்களில் தாமதமாக அதாவது 21 மாதங்கள் கழித்து தேர்தல் நடத்தப்பட்டது.
27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற நிலையில், மற்ற ஒன்பது மாவட்டங்களுக்கு 2021ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த நிலையில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்ற தலைவர், வார்டு கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்டவர்களின் பதவிக்காலம் வரும் ஜனவரி 5ஆம் தேதி உடன் நிறைவடைகிறது. இதன் காரணமாக அதற்கு முன்னதாகவே தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்பட்டிருக்கிறது.
ஆனால் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளை தொடங்குவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும் தேர்தல் நடைபெறுவதே தள்ளிப் போகலாம் என அதிகாரிகள் மட்டத்தில் பேசப்படுகிறது. அதாவது தற்போது சில மாவட்டங்களில் கிராமங்களை நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுடன் இணைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் கிராம மக்கள் இதனை மிகக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
மாநகராட்சிகளை விரிவாக்கம் செய்வதில் சிக்கல் காரணமாகவும், 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளை தொடங்க இன்னும் ஒரு ஆண்டு காலமே இருக்கும் நிலையில் உள்ளாட்சித் தேர்தலால் தேவையில்லாமல் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகள் இடையே மனக்கசப்பு ஏற்படும். இதனால் உள்ளாட்சித் தேர்தலை ஒட்டுமொத்தமாக 2026 இல் நடத்தலாம் என திமுக தலைமை திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் கணிப்புகளுக்கு மாறாக விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காரணம் சென்னையை தவிர தமிழக முழுவதும் வாக்கு பெட்டிகளை தயார் நிலையில் வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக தேர்தல் ஆணைய செயலாளர் சென்னையை தவிர்த்து பிற மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு ஒன்றினை அனுப்பியுள்ளார். அதில்,"ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு எதிர்வரும் சாதாரண / தற்செயல் தேர்தல்களை முன்னிட்டு தேர்தல்களுக்கு தேவையான அனைத்து வகையான வாக்குப்பதிவு பொருட்களையும் தயார் நிலையில் வைப்பது மிகவும் அவசியமாகிறது.
இதில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டிகளை தயார் நிலையில் வைக்கவேண்டும். எனவே. ஊரக உள்ளாட்சித் தேர்தல்களுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து வகையான வாக்குப்பெட்டிகள் (Ballot Boxes) தற்போதைய தரம் மற்றும் நிலையை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) நேரடியாக வாக்குப்பெட்டிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து அவைகளின் தன்மையினை ஆராய்ந்து அதாவது வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தும் வகையில் நல்ல நிலையில் உள்ளவை, சிறிதளவு பழுதடைந்து அதனை சரி செய்வதன் மூலம் வாக்குப்பதிவிற்கு மீண்டும் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளவை.
முழுவதும் பழுதடைந்து பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளவை என வகை பிரித்து வைத்துக்கொள்ள வேண்டும். வாக்குப்பெட்டிகளில் உள்ள சிறு பழுதுகளை சரிசெய்வதற்கும் மற்றும் சுத்தம் செய்து எண்ணெயிடும் பணிக்கு செலவு மதிப்பீடு, வாக்குப் பெட்டி ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.21. (ரூபாய் இருபத்தி ஒன்று மட்டும்) பார்வையில் காணும் கடிதத்தில் பொதுபணித் துறை பரிந்துரைத்துள்ளவாறு அனுமதிக்கப்படுகிறது.

மேற்படி தரம் பிரித்து வைக்கப்பட்டிருந்த வாக்குப்பெட்டிகளை கீழ்க்காணும் அறிவுரைகளின்படி எதிர்வரும் தேர்தலுக்கு தயார் நிலையில் வைக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த ஆண்டுக்கு முன்னதாகவே தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படலாம் எனவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications