தம்பியை நலம் விசாரித்த அண்ணன்! மு.க.அழகிரி-ஸ்டாலின் சந்திப்பில் பேசியது என்ன? மதுரையில் கொண்டாட்டம்
சென்னை: முதலமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலினும் அவரது அண்ணன் மு.க.அழகிரியும் பல வருடங்களுக்கு பிறகு ஒருவருக்கு ஒருவர் முகம் கொடுத்து பேசிக்கொண்டதோடு பரஸ்பர நலமும் விசாரித்துக் கொண்டனர்.
இவர்கள் இருவரும் சந்தித்துப் பேசிக்கொண்டதை அமைச்சரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்பில் உறுதிப்படுத்தினார்.

இதனிடையே அண்ணன் தம்பி இடையேயான சந்திப்பு மதுரையில் சிலருக்கு மிரட்சியையும் சிலருக்கு மகிழ்ச்சியையும் அளித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக அழகிரி ஆதரவாளர்களுக்கு இந்தச் சந்திப்பு மிகுந்த கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது என்றே கூறலாம். விரைவில் அழகிரியை திமுகவில் பார்க்கக்கூடும் என இப்போதே நம்பிக்கை பொங்க கூற ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 2014ஆம் ஆண்டு திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் மு.க.அழகிரி நீக்கப்பட்டார். கட்சியில் குழப்பம் விளைவிக்க முயல்வதாக காரணம் கூறி பேராசிரியர் அன்பழகன் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார். அதன் பின்னணியில் அண்ணன் தம்பி பஞ்சாயத்து, அப்பா மகன் வாக்குவாதம் என பல காரணங்கள் இருந்தன. அது தனி டிராக் என்பதால் இப்போது அதை விட்டுவிடுவோம்.
திமுகவிலிருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில் முதலமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலினும் அவரது அண்ணன் மு.க.அழகிரியும் இன்று சந்தித்துப் பேசியிருப்பது திமுகவில் மட்டும் தமிழக அரசியல் களத்தில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அண்ணன் தம்பி இடையேயான பிணக்கை தீர்த்து வைத்ததில் செல்வியும், முரசொலி செல்வமும் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள்.
அண்மையில் முதலமைச்சர் ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் ஒரு நாள் தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், தம்பியின் உடல்நலம் பற்றி அக்கறையோடு கேட்டறிந்திருக்கிறார் அழகிரி. பதிலுக்கு ஸ்டாலினும் தனது அண்ணன் உடல்நலம் பற்றி விசாரித்திருக்கிறார். இதைத்தாண்டி இன்றைய தினம் பெரியளவில் அரசியல் பற்றியோ, கட்சி பற்றியோ எதுவும் பேசவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெறுவதற்காக கோபாலபுரம் இல்லத்துக்கு வந்திருந்த கனிமொழியும் இந்தச் சந்திப்பின் போது உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications