பஸ் ஸ்டிரைக் போராட்டம் நாளையும் தொடரும்.. அரசு அழைத்து பேச வேண்டும்.. அண்ணா தொழிற்சங்கம்
சென்னை: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நடத்தி வரும் போராட்டம் நாளையும் தொடரும். அரசு உடனடியாக அழைத்து பேச வேண்டும் என்று அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து 23 போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர். இதன்படி, திட்டமிட்டபடி இன்று போராட்டத்தை தொடங்கினர்.

முன்னதாக இரண்டு முறை இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில், வேலைநிறுத்த போராட்டம் காரணமாக இன்று காலை முதல் பல இடங்களில் வழக்கமான எண்ணிக்கையில் பல இடங்களில் பஸ்கள் இயக்கப்படவில்லை. பெரும்பாலான ஊர்களில் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடின.
குறிப்பாக நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பேருந்து சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இரண்டாவது நாளாக நாளையும் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என்று அண்ணா தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அண்ணா தொழிற்சங்க பேரவைத் தலைவர் கமலக்கண்ணன் கூறியதாவது:- போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நடத்தி வரும் போராட்டம் நாளையும் தொடரும். அரசு உடனடியாக அழைத்து பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications