நீங்க நம்பாட்டியும் அதான் நெசம்.. "மின்வெட்டுக்கு காரணமே மத்திய அரசுதான்"... முரசொலி விளாசல்!
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டுக்கு உண்மையான காரணம் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு தானே தவிர, தமிழ்நாடு அரசு அல்ல என்று திமுக அரசின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: வரலாறு காணாத நிலக்கரித் தட்டுப்பாட்டால் நாட்டின் மின் உற்பத்தி நான்கில் ஒரு பங்கு முடங்கியுள்ளது. அதுதான் இன்றைய மின் வெட்டுக்கு அடிப்படையான காரணம் என்று திமுக அரசின் முரசொலி தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலக்கரித் தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசுதான் காரணம் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Recommended Video
இது குறித்து திமுக அரசின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சில இடங்களில் தவிர்க்க முடியாத வகையில் ஏற்பட்டுள்ள மின்வெட்டுக்கு உண்மையான காரணம் என்ன என்று தெரியாமல் சிலர் தேவையற்ற வதந்திகளைக் கிளப்பி வருகிறார்கள். இப்போது ஏற்பட்டுள்ள மின் நிலைமைக்கு உண்மையான காரணம் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு தானே தவிர, தமிழ்நாடு அரசு அல்ல.
வரலாறு காணாத நிலக்கரித் தட்டுப்பாட்டால் நாட்டின் மின் உற்பத்தி நான்கில் ஒரு பங்கு முடங்கியுள்ளது. அதுதான் இன்றைய மின் வெட்டுக்கு அடிப்படையான காரணம் ஆகும். இந்த நிலக்கரித் தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசுதான் காரணம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

நிலக்கரி பற்றாக்குறை
இந்திய மின் உற்பத்தியானது 70 சதவிகிதம் நிலக்கரியைச் சார்ந்து உள்ளது. இந்நிலையில், தொழில் நிறுவனங்கள் முழு அளவு இயங்குவதாலும், கடுமையான கோடை வெப்பத்தினால் வீட்டு மின் தேவை அதிகரித்துள்ளதாலும், இறக்குமதியும் குறைந்துள்ளதாலும் நாட்டில் கடும் நிலக்கரி கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதும், இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்பதுமே முழுமையான உண்மையாகும்.

மின்சார உற்பத்தி
மத்திய மின்சார ஆணையத்தின் செயல்திறன் கண்காணிப்பு அறிக்கையின்படி, ஏப்ரல் 20 வரை அனல், அணு மற்றும் நீர் மின் நிலையங்கள் ஆகியவற்றில் மொத்தம் 72 ஆயிரத்து 74 மெகாவாட் மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதில், பராமரிப்புக்காக 9 ஆயிரத்து 744 மெகாவாட் மின்சாரமும், நிலக்கரித் தட்டுப்பாடு காரணமாக 38 ஆயிரத்து 826 மெகாவாட் அளவு மின்சார உற்பத்தியும், பிற காரணங்களால் 23 ஆயிரத்து 503 மெகாவாட் மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நாடு முழுவதும் மின்வெட்டு
உள்நாட்டு நிலக்கரியில் இயங்கும் 150 மின் உற்பத்தி நிலையங்களில் 86ல் நிலக்கரி அளவு மிகவும் குறைவாக உள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 5 அலகுகளில் நிலக்கரி இருப்பு முக்கிய அளவை விட கீழே சரிந்துள்ளது. இதன் காரணமாக உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் 6 முதல் 8 மணி நேர மின் தடை செய்யப்பட்டு வருகிறது.

இருளில் மூழ்கும் மாநிலங்கள்
12 மாநிலங்கள் இருளில் மூழ்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வருகின்றன. எனவே, இது தமிழகத்துக்கு மட்டுமான நிலைமை மட்டுமல்ல, பல்வேறு மாநிலங்களிலும் இதே நிலைமை உள்ளது. இதற்கு மாநிலங்கள் காரணமல்ல, மத்திய அரசின் செயல்பாடுகளே காரணம் ஆகும்.

மின்சாரம் கொள்முதல்
தமிழ்நாட்டின் தினசரி மின்சாரத் தேவை 17 ஆயிரம் மெகாவாட் ஆகும். இதில் ஒன்றியத் தொகுப்பில் இருந்து 6,500 முதல் 7 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஒன்றியத் தொகுப்பில் இருந்து வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு திடீரென்று 4,909 மெகாவாட் ஆக குறைக்கப்பட்டது. இந்தப் பற்றாக்குறையே இன்றைய மின் தடைக்குக் காரணம் என்று மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். சூரிய ஒளி மின்சக்தி மூலமாக 3 ஆயிரத்து 33 மெகாவாட் மின்சாரம் கிடைத்தது. மேலும் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு மின் தடை பிரச்சினைக்குத் தீர்வு கண்டு வருகிறோம் என்றும் அந்த அதிகாரி சொல்லி இருக்கிறார்.

செந்தில் பாலாஜி விளக்கம்
இது குறித்து மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உரிய விளக்கத்தை அளித்துள்ளார். "ஒன்றியத் தொகுப்பில் தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 மெகாவாட் திடீரென தடைப்பட்டது. இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையைச் சமாளிக்க நமது வாரியத்தின் உற்பத்தித் திறனை உடனடியாக அதிகரித்தும், தனியாரிடம் இருந்து கொள் முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்று சொல்லி இருக்கிறார்.

நெருக்கடி சூழ்நிலை
அதாவது நெருக்கடி சூழ்நிலை ஏற்பட்டதும் துரிதமாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருவதை அவர் சுட்டிக் காட்டி உள்ளார். நிலக்கரி தட்டுப்பாடு காரணமாகத்தான் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்தியா முழுமையும் உள்ள 178 அனல் மின் நிலையங்களில் பாதிக்கும் மேலான நிலையங்களில் குறைவான நிலக்கரி கையிருப்பு உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்தத் தட்டுப்பாடு காரணமாக நான்கில் ஒரு பங்கு மின் உற்பத்தி குறைந்துள்ளதாகவும் தகவல்கள் சொல்கின்றன. இதனை மத்திய அரசின் மின்சார ஆணையத்தின் செயல்திறன் கண்காணிப்பு அறிக்கையே உறுதிப்படுத்துகிறது.

நிலக்கரி தட்டுப்பாடுதான் காரணம்
25 சதவிகித செயல்திறன் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையே சொல்கிறது. கடந்த இரண்டு நாட்களில் நிலக்கரி இருப்பானது மிக மிகக் கீழே சரிந்துள்ளது. எனவே, நிலக்கரித் தட்டுப்பாடு தான் இன்றைய சூழ்நிலைக்கு காரணம் ஆகும். நிலக்கரித் தட்டுப்பாடு காரணமாக, ஒன்றிய அரசு தனது தொகுப்பில் இருந்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய மின்சாரத்தின் அளவைக் குறைத்துவிட்டது. இதனால் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. குறைந்தும் விட்டது. இந்தச் செய்திகள் எதுவும் தெரியாமல் தமிழக அரசு மீது அவதூறு கிளப்புவது கண்டிக்கத்தக்கது ஆகும்.












Click it and Unblock the Notifications