சென்னை ஆற்காடு சாலையில் சத்தமில்லாமல் நடக்கும் சூப்பர் மாற்றம்.. வடபழனி, வளசரவாக்கத்திலுமே செம்ம
சென்னை: மெட்ரோ ரயில் பணிகள் நடந்துவரும் போரூர், வடபழனி மற்றும் கோடம்பாக்கத்தை இணைக்கும் ஆற்காடு சாலை மோசமான நிலையில் இருந்தது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையை ஏற்று சாலையை சீரமைத்து வருகிறது மெட்ரோ நிறுவனம். இன்னும் ஒரு வாரத்தில் சாலை முழுமையாக சீரமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் காலத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தான் சென்னையில் பிரதானமாக இருக்கும் என்பதை உணர்ந்து அதற்கு தகுந்தாற்போல் பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிறுவனம் 2015ம் ஆண்டு முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவையை முதல்முறையாக சென்னையில் தொடங்கியது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்ட சேவை விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை, திருமங்கலம் கோயம்பேடு, வடபழனியாக ஒரு தடமும், தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, நந்தனம், பரங்கிமலை என இன்னொரு வழித்தடத்திலும் இருக்கிறது.
சுரங்கப்பாதை, மேல்மட்ட பாதை என இரண்டு வழிகளில் மெட்ரோ ரயில்கள் செல்கின்றன. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்க தொடங்கிவிட்டார்கள். வரும் காலத்தில் பேருந்து சேவைக்கு மாற்றாக மெட்ரோ ரயில்கள் மாறும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. முதல்கட்ட மெட்ரோவுக்கு கிடைத்த வரவேற்பின சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ பணிகள் 116.1 கி.மீ. நீளத்துக்கு மேலும் 3 வழித்தடங்களைக் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதில் வழித்தடம் 3 (45 கி.மீ) மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை அமைகிறது. இதில் 19 உயர்நிலைப் பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள், 28 சுரங்கப்பாதை ரயில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
வழித்தடம் 4 இல் (26.1 கி.மீ) கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் நிலையம் முதல் பூந்தமல்லி பணிமனை வரை நடைபெறுகிறது. 18 உயர்நிலைப் பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள், 9 சுரங்கப்பாதை ரயில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமையப்போகிறது.
வழித்தடம் 5 (44.6 கி.மீ) மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை பணிகள் நடைபெறுகிறது.இதில் 39 உயர்நிலைப் பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள், 6 சுரங்கப்பாதை ரயில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
இதில் வழித்தடம் 4 இல் (26.1 கி.மீ) கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் நிலையம் முதல் பூந்தமல்லி பணிமனை வரை பணிகள் மிக முக்கியமானது ஆகும்.சென்னையின் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள உள்பகுதிகள் ஆகும். மிககுறுகிய சாலையான ஆற்காடு சாலையில் தான் இந்த வழித்தடம் பெரும்பாலும் வருகிறது. சென்னையின் மையப்பகுதிகளை வழியாக செல்லும் இந்த வழித்தடம் ரெடியானால் சென்னையின் அடையாளமே மாறிவிடும்.
சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு இந்த 4வது வழித்தடமே முக்கிய காரணமாக உள்ளது. இது ஒருபுறம் எனில் ஆற்காடு சாலை மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக மிக மோசமான நிலைக்கு சென்றது. வாகனங்கள் செல்ல லாயக்கற்ற நிலைக்கு போனதால் அந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. ஏனெனில் ஏற்கனவே பூந்தமல்லி முதல் திநகர் வரை மெட்ரோ பணி காரணமாக குறுகிய சாலையில் வாகனங்கள் செல்லும் நிலையில், சாலையும் மோசமடைந்து இருந்ததால், வாகனங்கள் மிக மெதுவாக சாலையை கடக்க வேண்டிய நிலை இருந்தது. இதையடுத்து சென்னை மெட்ரோ நிறுவனம் ஆற்காடு சாலையை சீரமைக்க ஒப்புக்கொண்டது. அதன்படி பணிகளையும் விரைவுபடுத்தி உள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கோடம்பாக்கம் முதல் போரூர்வரையிலான ஆற்காடு சாலையில் வடபழனி, சாலிகிராமம், சாலிகிராமம் கிடங்கு, வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர், காரம்பாக்கம் மற்றும் ஆலப்பாக்கம் ஆகியபகுதிகளில் சென்னை மெட்ரோரயில் நிறுவனத்தின் ஒப்பந்ததாரரான லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் மூலம் சாலை சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஆற்காடு சாலையில் சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும், அவ்வப்போது பெய்யும்மழையாலும், பிற துறைகளின்பணிகள் சாலை ஓரம் நடைபெறுவதாலும் சாலை சேதமடைந் துள்ளது. சாக்கடை நீரை சென்னைபெருநகர குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மற்றும் மெட்ரோ ரயில் நிறுவனத் தின் ஒப்பந்ததாரரான லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் இணைந்து ஆழ்துளையில் நிரம்பி வரும் தண்ணீரை சுத்தம் செய்து வருகின்றனர்.
மேலும், கோடம்பாக்கம் முதல் போரூர் வரையிலான ஆற்காடு சாலையில், சாலை சீரமைப்புப் பணிகளையும், மெட்ரோ ரயில் தூண் பணிகள் முடிவடைந்த இடங்களில் தடுப்புகளை மாற்றி அமைக்கும் பணிகளையும் ஒப்பந்ததாரர் தொடங்கியுள்ளார். இந்தப் பணிகள் ஒரு வாரத்தில் முடிக்கப்படும்" இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications