என்னங்க.. கூட்டணியில் இருக்கும்போதே இப்படி சொல்லிட்டாரு கே.எஸ்.அழகிரி.. சலசலப்பை உருவாக்கிய பேச்சு!
சென்னை: பெருந்தலைவர் காமராஜரின் 119-வது பிறந்தநாள் விழா இன்று விமரிசையாக கொண்டாடப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் காமராஜர் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்கள்.
இதேபோல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பெருந்தலைவர் காமராஜர் உருவ படத்துக்கு, சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிலையில் சென்னை காமராஜர் அரங்கத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

காமராஜர் பிறந்தநாள் விழா
இதன் ஒரு பகுதியாக காமராஜர் அரங்கில் இருந்து காமராஜர் நினைவு இல்லம் வரை காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக சென்றனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-

தொண்டர்கள் உறுதி மொழி ஏற்கணும்
சமூக நீதிக்காக இந்தியாவில் வேறு எந்த கட்சியும் உரிமை கோர முடியாது. காங்கிரஸ் கட்சிதான் சமூக நீதிக்கான உரிமையை கொண்டாட முடியும். தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியை கொண்டு வர காங்கிரஸ் தொண்டர்கள் இந்த நாளில் உறுதிமொழி ஏற்க வேண்டும்.

இது தவறில்லை
காங்கிரஸ் கட்சியினருக்கு அதற்கு குறைந்த எந்த இலக்கும் இருக்கக்கூடாது. திமுக கூட்டணியில் இருக்கும்போது எப்படி காங்கிரஸ் ஆட்சி அமைப்பது என சிலருக்கு கேள்வி எழுப்பலாம். கூட்டணியில் இருக்கலாம் தவறில்லை. அவர்கள் கொள்கையை அவர்கள் செய்வார்கள். நமது கொள்கையை நாம் செய்வோம்.

சலசலப்பு
கூட்டணியில் இருக்கக்கூடிய காரணத்தால் நாளை நாம் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில்லை. தமிழ்நாட்டில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைய தொண்டர்கள் முயற்சிக்க வேண்டும். இவ்வாறு கே.எஸ்.அழகிரி பேசினார். கே.எஸ்.அழகிரியின் இந்த பேச்சு திமுக-காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது. இரு கட்சியின் தொண்டர்களும் சமூக வலைத்தளங்களில் வாக்குவாத யுத்தம் நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications