1995-ல் அமேசான் விற்ற முதல் பொக்கிஷம்.. ஜெஃப் பெசோஸ் முதல் எலான் மாஸ்க் வரை.. உலகத்திற்கு ஆச்சரியம்
ன்னை: வரலாறு சில நேரங்களில் மிகவும் விசித்திரமானது. இன்று நாம் பேசிக்கொண்டிருக்கும் மிகப்பெரிய மாற்றங்களுக்கு, பல ஆண்டுகளுக்கு முன்பே எங்கோ ஒரு மூலையில் மிகச் சாதாரணமாக ஒரு விதை போடப்பட்டிருக்கும். அப்படித்தான் இணைய உலகத்தின் தொடக்கத்தையும், இன்றைய AI உலகத்தையும் இணைக்கும் ஒரு ஆச்சரியமான தகவல் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 1995-ஆம் ஆண்டு அமேசான் தளத்தில் முதன் முதலில் விற்கப்பட்ட ஒரு புத்தகம், இன்று உலகம் முழுவதும் பேசப்படும் ஒரு தொழில்நுட்பத்தைப் பற்றியது என்பதுதான் மிகவும் ஆச்சரியமான ஒன்று.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கிய எந்திரன் திரைப்படத்தில் வருவதுபோல் தான் இன்றைக்கு ஏஐக்கள் வளர்ந்துள்ளன. சொந்தமாக யோசிக்கும் அளவிற்கு புத்திசாலித்தனமாக ஏஐக்கள் உள்ளனவா என்ற சந்தேகமே வரும். ஆனால் அந்தஅளவிற்கு வளரவில்லை.. ஆனால் வளர்க்கப்படாமலும் இல்லை..

இப்போது ஒரு ஏஐ என்பது ஒரு மிகப்பெரிய நூலகத்தைப் போன்றது. நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்டால், அதற்குத் தெரிந்த கோடிக்கணக்கான தரவுகளை ஆராய்ந்து, அடுத்த வார்த்தை என்னவாக இருக்கும் என்பதை மிகத் துல்லியமாகக் கணித்துச் சொல்லும். இது ஒரு "மேம்பட்ட தட்டச்சுத் தளம்" போலத்தான் செயல்படுகிறது.
மனிதர்கள் ஒரு புதிய சூழலில், முன் அனுபவம் இல்லாமலேயே சில முடிவுகளை எடுப்பார்கள். ஆனால் ஏஐ, அதற்குப் பயிற்றுவிக்கப்பட்ட தரவுகளுக்குள் மட்டுமே சுழலும். அதற்குத் தெரியாத ஒரு புதிய விஷயத்தைக் கேட்டால், அது குழம்பிவிடும் அல்லது தவறான தகவலைக் கொடுக்கும். அதேபோல் ஏஐ-க்கு ஒரு கணக்கைப் போடத் தெரியும், ஒரு கட்டுரையைத் தொகுக்கத் தெரியும். ஆனால், "ஏன் இதைச் செய்கிறோம்?" என்ற அடிப்படை நோக்கம் அதற்குத் தெரியாது. அது வெறும் கட்டளைகளைப் பின்பற்றும் ஒரு கருவி மட்டுமே. ஆனால் இப்போதைய நிலையிலேயே ஏஐயின் தாக்கம் பல துறைகளை ஆட்டிப்படைக்கிறது.
இதற்கான விதை 30 வருடம் முன்பே போடப்பட்டிருக்கிறது என்று சொன்னால், உங்களால் நம்ப முடிகிறதா.. ஆம், நாம் காலச் சக்கரத்தை கொஞ்சம் பின்னோக்கி சுழற்றுவோம்... 1995-ம் ஆண்டு. இணையம் என்பது அப்போதுதான் மெல்ல மெல்ல தவழ ஆரம்பித்த காலம். ஆன்லைனில் ஒரு பொருளை வாங்க முடியும் என்பதே பலருக்கு மந்திரம் போலத் தெரிந்த காலமாகும். அப்படியான காலத்தில் தான், அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ஒரு கார் ஷெட்டில் ஜெஃப் பெசோஸ் 'அமேசான்' என்ற ஒரு ஆன்லைன் புத்தகக் கடையைத் தொடங்குகிறார். அப்போது அமேசான் தளத்தில் விழுந்த முதல் ஆர்டர் எது தெரியுமா?
அது ஒரு நாவலோ அல்லது சமையல் புத்தகமோ அல்ல. டக்ளஸ் ஹாஃப்ஸ்டாடர் எழுதிய 'Fluid Concepts and Creative Analogies' என்ற புத்தகம். இதன் உட்பொருள் என்னவென்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அது 'செயற்கை நுண்ணறிவு' எனப்படும் AI-யின் ஆரம்பக்கால நுணுக்கங்களைப் பற்றிய ஒரு ஆய்வுப் புத்தகம்!

இன்று 30 ஆண்டுகள் கடந்துவிட்டன. அதே அமேசான் இன்று வெறும் புத்தகக் கடை அல்ல; உலகையே ஆட்டிப்படைக்கும் ஒரு நிறுவனம். எலான் மஸ்க் முதல் ஜெஃப் பெசோஸ் வரை இன்று ஒட்டுமொத்தத் தொழில்நுட்ப உலகமும் எதைப் பற்றி விவாதிக்கிறதோ, எதை நோக்கி ஓடுகிறதோ, அந்த AI-யைத்தான் அமேசான் தனது முதல் விற்பனையாகப் பதிவு செய்துள்ளது.
சமீபத்தில் இந்தத் தகவல் மீண்டும் வைரலானபோது, ஜெஃப் பெசோஸ் ஒரு புன்னகையோடு அதை ஆமோதித்திருக்கிறார். எலான் மஸ்க், "இது ஒரு மாபெரும் சரித்திரத்தின் தொடக்கம்" என்று சிலாகித்துக் கூறியுள்ளார். ஒரு மாபெரும் நிறுவனம் எதை நோக்கி வளரப்போகிறது என்பதை, அதன் முதல் புத்தக விற்பனையே ஒரு தீர்க்கதரிசி போல அன்றே குறித்து வைத்திருக்கிறது என்பதுதான் இதில் உள்ள ஆகச்சிறந்த சுவாரசியம். அன்று அந்தப் புத்தகத்தை வாங்கிய வாடிக்கையாளருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, தான் ஒரு மாபெரும் மாற்றத்தின் முதல் புள்ளியைத் தொடுகிறோம் என்று!
எதிர்காலம் என்பது நாம் எதிர்பாராத தருணங்களில், மிகச் சாதாரணமான ஒரு புத்தக விற்பனையில் கூட ஒளிந்திருக்கலாம் என்பதற்கு அமேசானின் இந்த முதல் விற்பனை ஒரு மிகச்சிறந்த உதாரணம். அன்று புத்தகமாக விற்ற AI, இன்று அமேசான் அலெக்சாவாகவும், தானியங்கி டெலிவரி சிஸ்டமாகவும் நம் வீடுகளுக்கே வந்துள்ளது.












Click it and Unblock the Notifications