இங்கு மன்னர் ஆட்சி நடக்கல.. ஜனநாயக நாடு.. ஆளுநருக்கு 5 கோடி நிதி வழங்க முடியாது.. பிடிஆர் அதிரடி
சென்னை: இங்கு மன்னர் ஆட்சி நடக்கவில்லை; இது ஜனநாயக நாடு, எனவே ஆளுநருக்கு ரூ.5 கோடி நிதி வழங்க முடியாது என்று சட்டசபையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான துறைவாரியான விவாதம் நடந்து வருகிறது. வியாழக்கிழமை மாலை சட்டசபையில் நடைபெற்ற விவாதத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி உறுப்பினர் தி.வேல்முருகன் (பண்ருட்டி), ஆளுநருக்கு வழங்கப்படும் நிதி குறித்து பேசினார்.
அதற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், "ஆளுநரின் செலவு பற்றி 5 கவன ஈர்ப்புகள் என்னிடம் வந்திருக்கிறது. அதை, எஸ்.எஸ்.பாலாஜி, முகமது ஷானவாஸ், எழிலன், டி.ஆர்.பி.ராஜா, வேல்முருகன் ஆகியோர் கொடுத்திருக்கிறார்கள். ஆளுநரின் செயல்பாட்டை தொடாமல், நிதி மேலாண்மை பற்றி மட்டும் பேசுகிறேன்.

நிதி கேட்டு கடிதம்: கடந்த ஆட்சி காலத்தில் ஆளுநரின் செயலாளர் நிதி கேட்டு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை முறையில்லாத கடிதம் என்றே நான் சொல்வேன். இது எப்படி ஜனநாயக நாட்டில் செல்லும். காரணமில்லாமல் ரூ.5 கோடி செலவுக்கு எப்படி வழங்க முடியும்.
அமைச்சர் கையெழுத்து இல்லை: ஜனவரி முதல் மார்ச் வரை 2 மாத செலவுக்கு ரூ.2 கோடி கேட்டிக்கிறார். அமைச்சர் கையெழுத்து இல்லாமல், அன்றைய நிதித் துறை செயலாளரே முடிவெடுத்து அந்த தொகையை வழங்கியுள்ளார். கொள்கை முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
ரூ.1 லட்சத்து 56 ஆயிரம் தொகை ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த ஆண்டு ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அட்சய பாத்திரம் திட்டத்துக்கு என்று சொல்லி, ஆளுநரின் வீட்டு கணக்குக்கு நிதி போயிருக்கிறது. அந்த திட்டத்துக்கு ரூ.4 கோடியே 49 லட்சம் கொடுக்கப்பட்டதாக கவர்னரின் செயலாளர் சொல்கிறார். ஆனால், அதற்கான கோப்புகள் இல்லை.
எந்த மாநிலத்திலும் இல்லாததது: 2021-ம் ஆண்டு புதிய ஆளுநர் வந்தபிறகு, 17 கோப்புகளின் அடிப்படையில் நாம் நிதி ஒதுக்கி உள்ளோம். சுதந்திர தின விழாவுக்கு ரூ.25 லட்சம், சுற்றுப் பயணத்துக்கு ரூ.15 லட்சம், அமைச்சர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு ரூ.10 லட்சம், கிறிஸ்துமஸ் விழாவுக்கு ரூ.25 லட்சம், குடியரசு தினவிழாவுக்கு ரூ.20 லட்சம் என நிதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் எந்த மாநிலத்திலும் உள்ள கவர்னர்களுக்கு இவ்வளவு நிதியும், கூடுதல் சலுகையும் வழங்கப்படவில்லை. எந்த துறைக்கும் ஒதுக்கப்பட்ட நிதியை ஓராண்டுக்குள் செலவு செய்யாவிட்டால், அடுத்த ஆண்டு அந்த தொகையை கேட்கக்கூடாது என சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆளுநர் ரூ.3 கோடிதான் செலவு செய்து உள்ளார். எனவே, ரூ.5 கோடி வழங்கப்படாது. லண்டனில்தான் மன்னர் ஆட்சி உள்ளது. அங்கு மன்னர்களின் செலவுக்கான நிதியை என்ன செய்தார்கள்? என்று கேட்க முடியாது. ஆனால் இது ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டில் விதிமுறைகளின் படிதான் செலவு செய்ய முடியும். மேலும் முதல் 2 நிதியாண்டுகளை தவிர அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வருவாய் பற்றாக்குறை குறைக்கப்படவில்லை " இவ்வாறு சட்டசபையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விவாதத்தின் போது பேசினார்.












Click it and Unblock the Notifications