'அப்பாடா'.. பெருமூச்சு விடும் சென்னை.. வேற லெவலில் மாறபோகும் முக்கிய சாலைகள்.. களமிறங்கிய மாநகராட்சி
சென்னையில் 300க்கும் மேற்பட்ட சாலைகளை மாநகராட்சி சீரமைத்து வருகிறது
சென்னை: சென்னையில் பெரும்பாலான இடங்களில் பல மாதங்களாக சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படாமல் இருக்கின்றன. இந்நிலையில், தற்போது மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 300க்கும் அதிகமான இடங்களில் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வடசென்னைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வாகனம் ஓட்டுவதெற்கென்றே தனியாக பயிற்சி கொடுக்கப்பட வேண்டும் என்று அடிக்கடி நெட்டிசன்கள் சொல்வதுண்டு. அந்த அளவுக்கு சாலைகளின் தரம் மோசமாக இருக்கும். அதுவும் மழை நாட்களில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் எது பள்ளம் எது சாலை என்றே கண்டுபிடிக்க முடியாது. இப்படி குழப்பத்தில் பள்ளத்தில் விழுந்து பலி ஆகும் பொதுமக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பருவமழை காலங்களிலும் அதிகரித்து வருகிறது.
அதேபோல மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் இடங்களிலும் சாலை மோசமடைந்துள்ளது. எனவே இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. அதன்படி ரூ.43.19 கோடி மதிப்பீட்டில் சுமார் 300க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை அமைப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் படி வடசென்னைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வடசென்னையில் மட்டும் 200க்கும் அதிகமான இடங்களில் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

வடசென்னைக்கு முக்கியத்துவம்
குறிப்பாக மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர் ஆகிய மண்டலங்களில் இந்த சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தவிர பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட 117 இடங்களில் ரூ.9.3 கோடி மதிப்பில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், கோடம்பாக்கம், கே.க.நகர், நுங்கம்பாக்கம், வளசரவாக்கம், சேத்துப்பட்டு, எழும்பூர் ஆகிய என மொத்தம் 319 இடங்களில் சாலைகள் புதியதாக அமைக்கப்பட்டும், சீரமைக்கப்பட்டும் வருகிறது. இது அல்லாமல் மற்றொரு திட்டத்தின் கீழ் 249 இடங்களில் ரூ.22.9 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

சாலை அமைக்கும் பணிகள்
இது குறித்து பேசிய மாநகராட்சி அதிகாரிகள், "சென்னையில் மெட்ரோ பணிகள் ஒருபுறம் நடந்து வந்தாலும் மறுபுறம் சிங்கார சென்னை 2.o திட்டமும் அதே வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளின் ஒரு அங்கம்தான் இந்த சாலை சீரமைப்பு பணி. சென்னையில் மட்டும் சுமார் 387.35 கி.மீ தொலைவுக்கு பேருந்து சாலைகளும், 5,623 கி.மீ உட்புற சாலைகளும் இருக்கின்றன. இதில் மாநகராட்சியின் பேருந்து போக்குவரத்து வசதிக்காக உருவாக்கப்பட்ட பேருந்து சாலைகள் ஐந்தாண்டுக்கு ஒரு முறை 'பேவர்' மூலம் மேம்படுத்தப்படுகின்றன. இந்த பணிகள் அனைத்தும் இரவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னையின் சாலைகள்
ஏற்கெனவே உள்ள சாலை மீது மீண்டும் சாலையை போடுவது என்பது சாலையின் உயரத்தை அதிகரிக்கும். எனவே இதனை சமன் செய்ய 2008ம் ஆண்டு முதல் 40 மி.மீ ஆழத்திற்கு ஏற்கெனவே போடப்பட்ட சாலைகளை தோண்டி எடுக்கப்படுகிறது. பின்னர் அதே 40 மி.மீ கணத்திற்கு புதிய சாலைகள் அமைக்கப்படுகின்றன. இது தவிர மழை, மின்வாரியத்துறை, குடிநீர் வாரியம் போன்றவற்றால் உருவாக்கப்படும் பள்ளங்களையும் மாநகராட்சி சீர் செய்து வருகிறது. இதற்கு சேத்துப்பட்டில் உள்ள தார் கலவை நிலையத்தில் தயாரிக்கப்பட்ட தார் பயன்படுத்தப்படுகிறது. இதே பாணியில்தான் தற்போதும் சாலைகளை சீரமைத்து வருகிறோம்" என்று கூறியுள்ளார்.

சிமெண்ட் சாலை
சென்னையில் தார் சாலைகள் தவிர சிமெண்ட் சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு செலவு கூடுதல் ஆகும் என்பதால் எல்லா இடங்களிலும் இது அமைக்கப்படுவதில்லை. தற்போது சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 1296.22 கி.மீ நீளத்திற்கு சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications