தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகிறது வேட்பாளர் பட்டியல்
சென்னை: லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. ஆனால், தமிழகத்தில் தற்போது வரை காங்கிரஸ் தனது வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இன்று வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று இருந்த நிலையில், நாளை வெளியிடப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
நாடு முழுவதும் கடந்த 2019ம் ஆண்டை போலவே, 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றாக வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. காங்கிரஸை பொறுத்த அளவில் இரண்டு கட்டங்களாக ஏற்கெனவே வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரிக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது.

இந்த முறை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9+1 என 10 தொகுதிகளில் காங்கிரஸ் களமிறங்கியுள்ளது. கடந்த முறை காங்கிரஸ் வென்ற ஆரணி, திருச்சி மற்றும் தேனிக்கு பதிலாக திருநெல்வேலி, மயிலாடுதுறை மற்றும் கடலூர் உள்ளிட்ட தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கிறது. எனவே வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம் நீடிப்பதால், வேட்பாளர் அறிவிப்பு தாமதமாகி வருகிறது.
கன்னியாகுமரி: காங்கிரஸ் வலுாக உள்ள தொகுதிகளில் கன்னியாகுமரி முக்கியமானது. தேசிய அரசியலை நேரடியாக பிரதிபலிக்கும் ஒருசில தொகுதிகளில் இதுவும் ஒன்று என்பதால் இந்த முறையும், இந்த தொகுதியை கைப்பற்றிவிட வேண்டும் என காங்கிரஸ் தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. கன்னியாகுமரியின் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜய தாரணி சமீபத்தில் பாஜகவில் ஐக்கியமானார். இதனால் காங்கிரசுக்கு கன்னியாகுமரி தொகுதி கவுரவ பிரச்னையாக மாறியுள்ளது.
தொகுதி நிலவரத்தை பொறுத்த அளவில் சிறுபான்மையினர் மற்றும் நாடார் சமூகத்தை சேர்நத் வாக்குகள் அதிகமாக இருக்கின்றன. இந்த முறை பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அதேபோல அதிமுக சார்பிலும் வேட்பாளர் களம் இறங்கியுள்ளார். எனவே, சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவுக்கும், இந்து சமூக வாக்குகள் பாஜகவுக்கும் பிரிய வாய்ப்பிருக்கிறது. எனவே இதை தடுக்கும் வகையில் வேட்பாளர்களை அறிவிக்க காங்கிரஸ் தீவிரமாக முயன்று வருகிறது.
இந்த முறை விஜய் வசந்துக்கு பதில், பீட்டர் அல்போன்ஸை நிற்கவைத்தால் சிறுபான்மையினர் வாக்குகளை அல்லலாம் என்பது கட்சியின் யோசனையாக இருந்து வருகிறது. இருப்பினும், வேட்பாளர்கள் இறுதி செய்யப்படவில்லை.
அதேபோல, மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் வன்னியர் சமூகத்தின் வாக்குகள் அதிகம். ஆனால், மயிலாடுதுறையில் மனிசங்கர் ஐயர் தனது மகளுக்கு சீட் கொடுக்க வேண்டும் என்று கட்சியை நெருக்கி கொண்டிருக்கிறார். அதேபோல, கடலூரில் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவரை வேட்பாளராக நிற்க வைக்க வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். எனவே வேட்பாளர்களை இறுதி செய்வதில் காங்கிரஸில் குழப்பம் நீடித்து வருகிறது. இதனால்தான் இன்று வெளியிடப்பட இருந்த வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
தமிழகத்தில் திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி என 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.












Click it and Unblock the Notifications