சென்னை வேப்பேரி லாட்ஜில் தங்கிய காதல் ஜோடி.. விடுதியில் காதலியும், வீட்டில் காதலனும் இருந்த கோலம்
சென்னை: சென்னை அண்ணா நகர் மேற்கு மேல்நடுவங்கரையைச் சேர்ந்த திரிஷா என்ற இளம் பெண்ணும், செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ராபின் என்ற இளைஞரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் விடுதியில் ஒரே அறையில் தங்கியிருந்தபோது காதல் ஜோடிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் இளம்பெண் விடுதியிலும், காதலன் வீட்டிலும் எடுத்த முடிவு, அவர்களது உறவினர்களை ஆடிப்போக வைத்துள்ளது.
சென்னை அண்ணா நகர் மேற்கு மேல்நடுவங்கரை பஜனை கோவில் தெருவை சேர்ந்த காளிதாஸ் என்பவருடைய மகள் திரிஷாவுக்கு 20 வயது ஆகிறது.இவர் அண்மையில் தான் பட்டப்படிப்பு முடித்துள்ளார். சென்னை திருமங்கலத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் செங்குன்றம் அருகேயுள்ள எடப்பாளையத்தை சேர்ந்த 23 வயதாகும் ராபின் என்பவர் வேலை செய்து வந்துள்ளார. ராபினும் திரிஷாவும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்கள். இதுகுறித்து இரு வீட்டாருக்கும் தெரியவந்த நிலையில், திருமணத்திற்கு முதலில் பெற்றோரிடம் எதிர்ப்பு இருந்தாலும் பின்னர் 2 பேரிடமும் பேசி சம்மதம் வாங்கியிருக்கிறார்கள்.

தனியார் விடுதியில் காதலர்கள்
இதையடுத்து காதலர்கள் இருவரும் ஜோடியாக பல இடங்களில் சுற்றினார்களாம். இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை சென்னை வேப்பேரி டவுட்டன் மேம்பாலம் அருகே உள்ள தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கினார்களாம். நேற்று காலை அறையை விட்டு வெளியே சென்ற ராபின் வரும்போது சில பொருட்களை வாங்க சென்றுள்ளாராம். பின்னர் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
திரிஷா வேப்பேரி விடுதியில்
அப்போது ராபின் கோபமாக அறையை விட்டு வெளியேறி கதவையும் வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு தனியார் விடுதியை விட்டு வேகமாக புறப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் ராபின், திரிஷாவின் உறவினர்களை தொடர்பு கொண்டு 'அவள் உங்களிடம் பேச வேண்டும்' என்றும் 'திரிஷா வேப்பேரியில் உள்ள விடுதி ஒன்றில் இருக்கிறாள்' என்றும் கூறினாராம். இதுதொடர்பாக திரிஷாவை அவர்கள் தொடர்புகொண்டபோது அவரும் அழைப்பை எடுக்கவில்லை. மேலும் ராபினுக்கு அழைத்தபோது அவரும் அழைப்பை ஏற்கவில்லை.
திரிஷா இருந்த நிலை
இதனால் சந்தேகமடைந்த அவர்கள் சம்பந்தப்பட்ட விடுதிக்கு தொடர்புகொண்டு, நடந்த சம்பவத்தை கூறினர். பின்னர் விடுதி ஊழியர் மற்றொரு சாவியால் அறையை திறந்து பார்த்துள்ளார். அங்கு திரிஷா தூக்கில் தொங்கியபடி கிடந்தார். இதை பார்த்து அலறிய அந்த ஊழியர் ஆடிப்போனர். இதுகுறித்து தகவலறிந்த வேப்பேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
ராபின் பூட்டியது தெரிந்தது
திரிஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விடுதியின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரித்தனர். விசாரணையில் அந்த அறையின் கதவை கடைசியாக ராபின் வெளிப்புறமாக பூட்டிவிட்டு சென்றது தெரியவந்தது.
ராபினும் தவறான முடிவு
இந்த நிலையில், நேற்று காலை செங்குன்றத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற ராபின், அறைக்குள் சென்று உள்தாழ்ப்பாள் போட்டு கொண்டு நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் அறையின் கதவை தட்டியுள்ளார்கள். ஆனாலும் கதவை திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மகன் ராபின் தூக்கிட்டிருந்தார்.இதை கண்டு அதிர்ச்சியில் பெற்றோர் கதறி அழுதனர்.
காதலன் காதலி தவறான முடிவு
இதுகுறித்து தகவலறிந்த சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராபின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலி உயிரைவிட்ட சில மணி நேரத்தில் காதலனும் வாழ்க்கையை முடித்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications