சென்னை பல்லாவரத்தை அடுத்த திரிசூலத்தில் 12 லட்சம் சுவர் அவுட்.. உடனே ஊராட்சி செய்த வேலை
சென்னை: சென்னை பல்லாவரத்தை அடுத்த திரிசூலம் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கென பொது கிணறு ஒன்று அமைந்துள்ளது. அப்பகுதி பொதுமக்கள் இந்த கிணற்று நீரைத்தான் தினமும் பருகுகிறார்கள். இந்நிலையில் திரிசூலம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.12 லட்சத்தில் பொது கிணற்றின் கான்கிரீட் சுற்றுச்சுவர் கட்டப்பட்டிருந்தது. இந்த சுவர் கட்டிய வெறும் 3 ஆண்டுகளில் அடியோடு இடிந்து விழுந்தது. தரமற்ற முறையில் கட்டப்பட்டதாலேயே இடிந்து விழுந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
சென்னையில் திரிசூலம் என்ற இடத்தில் விமான நிலையம் அமைந்திருக்கிறது. பல்லாவரத்திற்கும், ஆலந்தூருக்கும் நடுவில் மீனம்பாக்கம், திரிசூலம் பகுதியில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. பல்லாவரம் தாம்பரம் மாநகராட்சியில் இருக்கிறது. அதற்கு முன்பு உள்ள திரிசூலம் தற்போது வரை ஊராட்சியாக உள்ளது. விமான நிலையம் எதிரே உள்ள திரிசூலம் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கென பொது கிணறு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதி பொதுமக்கள் இந்த கிணற்று நீரைத்தான் தினமும் தங்களது அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் திரிசூலம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 2022-ம் ஆண்டு சுமார் ரூ.12 லட்சத்து 25 ஆயிரத்தில் இந்த கிணற்றின் பக்கவாட்டு சுவர்கள் கான்கிரீட்டால் கட்டப்பட்டிருந்தது. பொது கிணற்றின் ஓரங்களில் கட்டப்பட்டு இருந்த கான்கிரீட் சுற்றுச்சுவர்கள் நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து கிணற்றின் உள்ளே விழுந்து விட்டது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த கிணற்றை ஒட்டியுள்ள ரேஷன் கடையின் சுவரும் கிணற்றின் பக்கம் சரிந்து விழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் திரிசூலம் ஊராட்சி மன்ற நிர்வாகம் அவசர அவசரமாக அந்த கிணற்றை பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணை கொட்டி மூடும் பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகிறார்கள். பொதுக்கிணற்றை சுற்றி கட்டப்பட்ட கான்கிரீட் சுற்றுச்சுவர் கட்டி முடிந்து 3 ஆண்டுகள் கூட ஆகவில்லை. அதற்குள் கிணற்றின் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதை கண்டு கோபத்தில் இருக்கிறார்கள். தரமற்ற முறையில், தரம் இல்லாத பொருட்களை கொண்டு கட்டியதாலேயே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். சேதம் அடைந்த கிணற்றை மண்ணை கொட்டி மூடுவதற்கு பதிலாக, அதனை முறையாக தூர்வாரி பராமரிக்கலாமே என்று ஊராட்சி நிர்வாகத்தை கேள்வி எழுப்பி உள்ளனர்.












Click it and Unblock the Notifications