2014ல் மோடி பேஸ்புக்கில் செய்த அதே அரசியல்.. விஜய் 2026ல் இன்ஸ்டாவில் சாதித்தது எப்படி?
சென்னை: இளைஞர்களை கவர திமுக, அதிமுக கட்சிகள் தவறிவிட்டனவா என்ற கேள்விகள் இன்றைய தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கிறது. அதேபோல் இன்ஸ்டாகிராம் அரசியலும், ட்விட்டர் அரசியலும் முற்றிலும் வேறாக இருந்துள்ளது. 18 முதல் 30 வயதிற்கு உள்பட்ட இளைஞர்கள், பெண்களிடையே ஏற்பட்ட மனமாற்றத்தை அரசியல் கட்சி கவனிக்காமல் விட்டுவிட்டன. இன்னும் தெளிவாக சொல்வது என்றால், ட்விட்டரை பின்பற்றிய அரசியல் கட்சிகள், இன்ஸ்டா பக்கம் போய் எட்டிகூட பார்க்கவில்லையே என்று தோன்றுகிறது. தவெக 110 இடங்களில் வெற்றி மற்றும் முன்னிலை வகிப்பதால் ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழகத்தின் 60 ஆண்டுகால அரசியல் பிம்பத்தை சுக்குநூறாக உடைத்து இருக்கிறது. 110 இடங்களுக்கும் மேல் முன்னிலை பெற்று தவெக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளதால் "திமுக, அதிமுக கட்சிகள் இளைஞர்களைக் கையாளத் தவறிவிட்டனவா?" என்ற கேள்வி பலமாக எழுந்திருக்கிறது குறிப்பாக, 'ட்விட்டர்' அரசியலில் மூழ்கிக் கிடந்த கட்சிகள், 'இன்ஸ்டாகிராம்' எனும் இளைஞர்களின் உலகத்தை எட்டிப்பார்க்கக்கூட இல்லை என்பதுதான் கசப்பான உண்மையாகவே இந்த வெற்றி நிலவரம் தெரிகிறது.

தமிழகத்தின் மூத்த அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் போன்ற அனைத்தும் ட்விட்டரில் (X) காரசாரமான விவாதங்களை நடத்துவதையே பெரிய அரசியலாகக் கருதின. ஆனால், 18 முதல் 30 வயதுக்குட்பட்ட 'ஜென்-இசட்' மற்றும் பெண்கள் அதிகம் உலாவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அவை கண்டுகொள்ளவே இல்லை. ட்விட்டரை பொறுத்தவரை : இது பெரும்பாலும் அறிவார்ந்த விவாதங்கள் மற்றும் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதோடு முடிந்துவிட்டது.
இன்ஸ்டா அப்படி இல்லை .. பெரிய புரட்சியே நடந்துள்ளது. இங்கேதான் விஜய்யின் தவெக ஒரு மிகப்பெரிய 'சைலண்ட்' புரட்சியைச் செய்து சாதித்து இருக்கிறது. ஒரு காலத்தில் பேஸ்புக் வளர்ந்த போது எப்படி பிரதமர் மோடி பயன்படுத்தி 2014ல் வெற்றி பெற்றாரோ, அதேபோல் விஜய் இன்ஸ்டாவில பிரச்சாரம் செய்து சாதித்துள்ளது. ஒவ்வொரு அசைவும், பாடல்களும், அவர் மாணவர்களுக்கு விருது வழங்கிய நிகழ்வுகளும் 'ரீல்ஸ்' மூலமாக மூலை முடுக்கெல்லாம் சென்றடைந்தன.
விலையில்லா பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்கள் பெண்களின் வாக்குகளைத் தக்கவைக்கும் என்று திமுக நம்பியது. ஆனால், புதிய தலைமுறைப் பெண்கள் தங்களது அடையாளமாகவும், ஒரு மாற்றமாகவும் தங்களின் சினிமா ஹீரோ விஜய்யைப் பார்த்ததை திராவிடக் கட்சிகள் கவனிக்கத் தவறிவிட்டன. தமிழகத்தின் உச்சபட்ச நடிகரன விஜய் அரசியலில் களம் இறங்கிய போதே உஷாராக இல்லாமல் போய்விட்டன.
அதேபோல் தாங்கள் வென்றால் போதும் என்று கவனம் செலுத்திய அதிமுக திமுக, மாணவர்கள், இளைஞர்கள் சினிமா மோகத்தில் மூழ்கியதை கண்டுகொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் சினிமா மோகத்தை கட்சிதமாக பயன்படுத்திய விஜய், அந்த மக்களிடம் நிஜ ஹீரோவாக மாறினார்.. அவர்கள் திமுக, அதிமுகவின் எந்த பிரச்சாரத்தையும் கண்டுகொள்ளவில்லை.. விஜய் என்ற ஒற்றை நபரின் பின்னால் அணிவகுத்தனர். அதுவும் இன்ஸ்டாவில் அணிவகுத்தனர். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட "மாற்றம் வேண்டும்" என்ற உணர்ச்சிப்பூர்வமான வீடியோக்கள், ட்விட்டரில் செய்யப்பட்ட புள்ளிவிவர விவாதங்களை விடவும் பல மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
தற்போதைய நிலவரப்படி, 110 தொகுதிகளில் வெற்றி மற்றும் முன்னிலை பெற்றுள்ள தவெக, தமிழகத்தின் அடுத்த ஆட்சிக்கட்டிலில் அமரப்போவது உறுதியாகிவிட்டது. 1977-ல் எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஒரு தனி நபரால் இவ்வளவு பெரிய வாக்கு வங்கியைத் திரட்ட முடிந்திருக்கிறது என்றால், அதற்குப் பின்னால் இருந்த "சோசியல் மீடியா மேனேஜ்மென்ட்" மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. விஜய், முதல்முறை வாக்காளர்களின் 80 சதவீத வாக்குகளை அறுவடை செய்துள்ளதாகத் தெரிகிறது.
இது வெறும் ஆரம்பம்தான். அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் பல லட்சம் இளைஞர்கள் வாக்காளர்களாக மாறப்போகிறார்கள். இன்ஸ்டாகிராமையும், தற்கால இளைஞர்களின் மனநிலையையும் புரிந்து கொள்ளாத கட்சிகள் இனி வரும் காலங்களில் காணாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ட்விட்டரில் ட்ரெண்ட் செய்த திமுக, அதிமுக கட்சிகளுக்கு, இன்ஸ்டாகிராம் மூலமாக "செக்" வைத்துவிட்டு அமைதியாகக் கோட்டைக்குள் நுழைகிறார் விஜய்.














Click it and Unblock the Notifications