ஓபிஎஸ் Vs எடப்பாடி..! இரண்டு இரண்டாக உடையும் மாவட்டங்கள்! ஓபிஎஸ்க்கு இத்தனை பேர் ஆதரவா? பரபர அதிமுக!
சென்னை : அதிமுகவில் அதிகார மோதல் உச்சத்தை அடைந்து இருக்கும் நிலையில் தனக்கு பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் ஆதரவு இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கருதி வரும் நிலையில், கட்சியின் சில மூத்த நிர்வாகிகள் பல்வேறு மாவட்டங்களில் செயலாளர்களும் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக உள்ளது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு சென்னை வானகரத்தில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த இரு நாட்களுக்கு முன்பு சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் பொதுக்குழு கூட்டத்தை எவ்வாறு நடத்துவது சசிகலாவுக்கு ஆதரவான குரல்கள் வந்தால் எப்படி சமாளிப்பது மற்றும் பொதுக்குழுவுக்கு யார் யாரை அழைப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

அதிகார மோதல்
சுமார் 4 மணி நேரம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வந்த நிலையில் கூட்டத்திற்கு வெளியே சாலையில் காத்திருந்த தொண்டர்களுக்கும் திடீர் மோதல் வெடித்தது. அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர்களாக ஓபிஎஸ் இபிஎஸ் ஆகியோரது ஆதரவாளர்கள் இரு தரப்பினர் பிரிந்து முழக்கமிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. தொடர்ந்து இந்த விவகாரம் சமூக வலைதளங்களிலும் வெடிக்கத் தொடங்கியது. ஊடகங்களிலும் இந்த செய்தி வெளியான நிலையில் தொடர்ந்து கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த நிர்வாகியுமான ஜெயக்குமார் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து ஆரோக்கியமான ஜனநாயக பூர்வமான விவாதம் நடைபெற்றது என்றார்.

ஒற்றை தலைமை விவகாரம்
ஆனால் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து பொது ஊடகங்களில் யாரும் பேச வேண்டாம் என ஓபிஎஸ் இபிஎஸ் கூறி இருந்ததாக கூறப்படுகிறது. அதனையும் மீறி ஜெயகுமார் பேசியதால் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டு விவகாரம் பெரிதானது. தொடர்ந்து அதிலிருந்து ஓபிஎஸ் தனது ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டு நிலையில் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்றன நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், தற்போது அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தேவையில்லை எனக் கூறினார்.

ஓபிஎஸ் ஆதரவு
அதோடு விவகாரம் முடிந்து விட்டதாக அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, மன்னார்குடி, தஞ்சாவூர் , சென்னையின் சில பகுதிகளில் ஆங்காங்கே ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் மோதல் போக்கைக் கையாண்டு வருகின்றனர். மேலும் தற்போது எடப்பாடிக்கு ஆதரவாக ஆங்காங்கே போஸ்டர்களும் முளைக்கத் தொடங்கியுள்ளன.

இபிஎஸ் திட்டம்
கடந்த முறை ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியபோது அவருக்கு ஆதரவாக இருந்த பெரும்பாலானோர் எடப்பாடி பக்கம் தாவி விட்டாலும் இன்னும் சில முக்கிய நிர்வாகிகளும் சில ஒன்றிய செயலாளர்களும் மாவட்ட செயலாளர்களும் ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது சிலர் ஓபிஎஸ் பக்கம் வந்து இருக்கும் நிலையில் மேலும் சிலர் அவருக்கு ஆதரவாக திரும்ப உள்ளதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறியுள்ளனர். அதே நேரத்தில் தனக்கு ஆதரவாக இருக்கும் மாவட்ட செயலாளர்கள், மூத்த நிர்வாகிகளை தக்க வைப்பதோடு ஓபிஎஸ் பக்கம் இருக்கும் நிர்வாகிகளையும் தங்கள் பக்கம் இழுக்க இபிஎஸ் தரப்பு திட்டமிட்டு வருவதால் பல்வேறு மாவட்டங்களில் கட்சி இரண்டாக உடைந்துள்ளதாகவே கூறுகின்றனர் மூத்த ரரக்கள்..

அமைதி காக்கும் நிர்வாகிகள்
அதே நேரத்தில் பொறுத்திருந்து பார்ப்போம் யார் கை ஓங்குகிறது அவர் பக்கம் சாய்ந்து விடலாம் என திட்டமிட்டு சில நிர்வாகிகள் இரு தரப்பினருக்குமே ஆதரவு தெரிவிக்காமல் அமைதியாக இருந்து வருகின்றனர். அதாவது அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் அல்லாமல் சார்பு அணி நிர்வாகிகளாக உள்ள தகவல் தொழில்நுட்ப பிரிவு, இளைஞர் இளம்பெண்கள் பாசறை, மகளிரணி, எம்ஜிஆர் இளைஞரணி, இலக்கிய அண் உள்ளிட்ட பிரிவுகளின் மாநில , மாவட்ட, ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் தங்கள் மாவட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதற்கேற்றார்போல் செயல்படலாம் என தீர்மானித்து அமைதி காக்கின்றனர். எது எப்படியாகினும் அதிமுகவில் வெடித்துள்ள அதிகார மோதல் பொதுக்குழு நடைபெறும் நாள் அன்று பூதாகரமாக வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications