பஞ்சாயத்து ஓவர்.. பாய்ச்சலுக்கு தயாராகும் தளபதி விஜய்! தவெக மாநில மாநாட்டில் மாஸ் காட்ட மெகா திட்டம்
சென்னை: நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் தற்போது உற்சாகத்தில் இருக்கிறார். கோட் படம் சிறப்பாக வந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் , கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கு நிலவி வந்த சிக்கலும் தீர்ந்துள்ளதால் மாநாட்டில் மாஸ் காட்ட வேண்டும் என நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். இதை அடுத்து 10 லட்சம் பேர் வரை திரட்ட வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு பறந்திருக்கிறது.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருந்து தற்போது அரசியல் தலைவராக அவதாரம் எடுத்திருக்கிறார் தளபதி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விஜய். தி கோட் படத்திற்கு பிறகு முழு அரசியலில் அவர் ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த பல ஆண்டுகளாகவே விஜய் அரசியல் ஆர்வத்தில்தான் இருக்கிறார். அதற்கு அச்சாரமாக தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். தொடர்ந்து அந்த இயக்கத்தின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அவரது அமைப்பு, அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அன்றே கட்சியின் பெயரை அறிவித்தார். தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை தொடங்க உள்ளதாகவும் விரைவில் அதன் கொள்கைகள் அறிவிக்கப்படும் எனக் கூறியிருந்தார்.
மேலும் முழு அரசியலில் ஈடுபடும் பொருட்டு படங்களில் இனி நடிக்கப் போவதில்லை என தெரிவித்து இருந்தார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டு இடைவெளியே இருக்கும் நிலையில் சினிமாவில் இனி நடிப்பது சிரமம் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். இதற்கிடையே மாணவர்கள் சந்திப்பு ட்விட்டரில் வாழ்த்து அரசியல் என பிசியாக இருந்த விஜய் தீவிர அரசியலில் ஈடுபட முடிவெடுத்திருக்கிறார். செப்டம்பர் மாதத்தில் அவரது முதல் மாநில மாநாடு நடக்கும் எனக் கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து மண்டலம் மாநாடுகள், தொகுதி வாரியாக மக்களைச் சந்திக்கும் பயணம் உள்ளிட்டவற்றை நடத்த திட்டமிட்டு இருக்கிறார். கட்சியின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தி இருக்கும் நிலையில் விஜய்யின் முதல் அரசியல் மாநாடு எங்கு நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. திருச்சி, சேலம், ஈரோடு, மதுரை, கோவை உள்ளிட்டவை அந்த பட்டியலில் இருந்தன. ஈரோடு கோவை உள்ளிட்ட பகுதிகளில் மாநாடு நடத்தினால் போதிய அளவில் இடம் இருக்காது என நிர்வாகிகள் கருதினர்.
இதை அடுத்து மதுரை அல்லது திருச்சியில் விஜய் மாநாடு நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் நடிகர் விஜய் மாநில மாநாட்டை நடத்துவதற்கு ஆரம்பத்திலேயே சிக்கல் எழுந்தது. மாநாட்டுக்காக இடம் தருவதாக ஒப்புக்கொண்ட உரிமையாளர்கள், பிறகு ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தட்டிக் கழித்து வருவதாக கூறப்பட்டது.
பிரபல அரசியல் கட்சி ஒன்றில் மூத்த நிர்வாகிகள் விஜய்க்கு மாநாடு நடத்த இடம் தரக் கூடாது என நேரடியாகவே சொன்னதாகவும், அது மட்டுமல்லாமல் பல்வேறு வகைகளிலும் நெருக்கடி வரும் என உரிமையாளர்கள் நிலம் தர மறுக்கிறார்கள் என தகவல்கள் வெளியாகின.
இதனால் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கடும் இருந்தனர். இந்த நிலையில் நடிகர் விஜய் தரப்பு நேரடியாக அந்த கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களை தொடர்பு கொண்டு பேசியதாகவும் நாங்கள் அவ்வாறெல்லாம் கூறவில்லை என சொல்லியதாக கூறப்படுகிறது. இதை அடுத்து மாநாடு நடத்தும் இடம் தொடர்பான சிக்கல் தீர்ந்திருக்கிறது.
இதனால் மாநாட்டுப் பணிகளை துரிதமாக செயல்படுத்த நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். அது மட்டும் அல்லாமல் ஏற்கனவே குறிப்பிட்டது போல பத்து லட்சம் தொண்டர்கள் வரை மாநாட்டுக்கு அழைத்து வரவேண்டும் என உத்தரவு பறந்திருக்கிறது. இதற்கான வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications