தங்கம் விலை உயர்வா? என் பழைய ரெக்கார்டை எடுத்துப் பாருங்க! தவிக்க வைக்கும் தக்காளி விலை! என்ன காரணம்?
சென்னை: தமிழகம் மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் தக்காளி விலை கடுமையான உயர்வைச் சந்தித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனையான தக்காளி தற்போது 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனையாவது இல்லத்தரசிகளை கவலை கொள்ள வைத்துள்ளது.
கடந்த ஆண்டின் தென்மேற்குப் பருவ மழை காரணமாக தமிழகத்தில் தக்காளி விலை உச்சம் அடைந்தது. ஒரு கிலோ 100 முதல் அதிகபட்சமாக 140 ரூபாய் வரை அதிகரித்ததால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். வெங்காயத்தை பின்னுக்குத் தள்ளி விலை உயர்வில் முதலிடத்தை பெற்றது.

இதனையடுத்து அரசின் முயற்சியால் நியாய விலைக் கடைகளில் தக்காளி 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், விலை படிப்படியாகக் குறைந்தது. இதனையடுத்து வரத்து அதிகரிக்க அதிகரிக்க விலை சிறிது சிறிதாக சரிவைச் சந்தித்தது.
இந்நிலையில் இந்தாண்டு தொடக்கத்தில் வரத்து அதிகாரித்ததால் தக்காளி விலை அதளபாதாளத்திற்குச் சென்றது. அதிகளவில் வரத்து இருந்ததால் ஒரு கிலோ தக்காளி 2 ரூபாய் அளவுக்குச் சரிந்தது. இதனால் ஆட்கூலிக்கு கூட பணம் கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் தக்காளி விலை உச்சத்தை தொட ஆரம்பித்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.
பொதுவாக தென்மேற்கு பருவமழை காலத்தில் கனமழை காரணமாக தக்காளி, வெங்காயம் ஆகியவற்றின் விலை உயர்ந்தே இருக்கும். குறிப்பாக ஜூலை மாதத்தில் இருந்து மழை அதிகமாக இருக்கும் என்பதால் இரு காய்களின் விலையும் அதிகரிப்பது இல்லத்தரசிகளை கவலை கொள்ள வைத்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் தக்காளியின் விலை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய் வரை விற்பனையாகிறது.
இதனால் அதனை வாங்கி விற்கும் சில்லறை விற்பனை கடைகளில் 100 ரூபாய் வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் 30 முதல் 40 ரூபாய் வரையே தக்காளி விலை இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் ரூபாய் 30 முதல் 40 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால் வெளி மார்க்கெட் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் 90 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனையானது.
தக்காளியை போலவே பச்சை மிளகாய், பீன்ஸ் ஆகியவற்றின் விலையும் அதிகரித்தது. நேற்று 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட பச்சை மிளகாய் இன்று 90 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதேபோல கேரட், முருங்கைக்காய், பீன்ஸ் ஆகியவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. வரும் காலங்களில் மழை பொழிவு அதிகமாக இருக்கும். இதனால் வரத்து குறைவாக தக்காளி உள்ளிட்ட காயிகளின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications