ஒவ்வொரு வீடியோவும் இடி! விஜய்க்கு சிம்ம சொப்பனமாக மாறிய சாட்டை துரைமுருகன்! தவெக நினைக்காத மோதல்
சென்னை: தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரையுலகில் இருந்து அரசியல் எண்ட்ரி கொடுத்த 'தளபதி' விஜய்க்கு எதிர்பாராத திசையிலிருந்து கடும் சவால்கள் முளைக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகனின் அதிரடி பேச்சுகளும், இணையத்தில் வைரலாகும் அவரது 'ரோஸ்ட்' வீடியோக்களும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளன.

திரைக்கதையை சிதைக்கும் 'சாட்டை'
சினிமா பிம்பத்தோடு அரசியலுக்கு வந்த விஜயை, ஒரு அரசியல்வாதியாக எதிர்கொள்வதை விட, அவரது பாணியிலேயே கிண்டலும் கேலியுமாக துரைமுருகன் முன்வைக்கும் விமர்சனங்கள் இளைஞர்கள் மத்தியில் வேகமாகப் பரவி வருகின்றன. விஜய்யின் அரசியல் மாநாடுகள் மற்றும் மேடைப் பேச்சுகளை மிக நுணுக்கமாக கவனித்து, அதில் உள்ள குறைகளை நகைச்சுவை கலந்து அவர் விமர்சிப்பது தவெக தொண்டர்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது.
"விஜய் பேசுவது அரசியல் கொள்கை அல்ல, அது மனப்பாடம் செய்யப்பட்ட சினிமா வசனங்கள்" என்று துரைமுருகன் முன்வைக்கும் வாதம் இணையத்தில் பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக 'அங்கிள்' மற்றும் 'ஆண்டி' குறித்த இவரது நையாண்டிப் பேச்சுகள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவின.
தேனியில் வெடித்த மோதல்
இணையத்தில் நீறுபூத்த நெருப்பாக இருந்த இந்த மோதல், கடந்த வாரம் தேனி மாவட்டத்தில் நடைபெற்ற நாம் தமிழர் பொதுக்கூட்டத்தில் வன்முறையாக வெடித்தது. சாட்டை துரைமுருகன் மேடையில் விஜயை விமர்சித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு திரண்ட தவெக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துக் கூச்சலிட்டனர்.
இந்த வாக்குவாதம் முற்றியதில், தவெக நிர்வாகி ஒருவரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் மாநில அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. "கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாதவர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்" என துரைமுருகன் இதை ஒரு அரசியல் ஆயுதமாக மாற்றி, அடுத்தடுத்த வீடியோக்களில் விஜயை மேலும் சீண்டி வருகிறார்.
டிஜிட்டல் அரசியலின் புதிய சவால்
தமிழக அரசியலில் இதுவரை திமுக - அதிமுக என்ற இரு துருவப் போரே பிரதானமாக இருந்து வந்தது. ஆனால், இப்போது தவெக - நாதக இடையிலான இந்த 'டிஜிட்டல் போர்' 2026 தேர்தலின் போக்கையே மாற்றும் எனக் கருதப்படுகிறது.
அப்படியே விஜய் மாடுலேஷன் எடுப்பது.. விஜயின் முந்தைய தவறுகளை சுட்டிக்காட்டுவது.. விஜய்க்கு எதிராக கடுமையான கருத்துக்களை சொல்வது.. தவெக நிர்வாகிகளை வெறி ஏற்றுவது என்று விஜய் ரசிகர்களை எது கோபத்திற்கு உள்ளாக்கும் என்று பல்ஸ் பார்த்து அடிக்கிறார் சாட்டை துரைமுருகன். விஜய்யின் மௌனத்தை ஒரு பலவீனமாகச் சித்தரிப்பதில் சாட்டை துரைமுருகன் ஓரளவிற்கு வெற்றி பெற்றுள்ளார் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஒவ்வொரு வீடியோவிலும் ஒரு புதுவிதமான விமர்சனத்தை முன்வைத்து, தவெக-வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவை (IT Wing) எப்போதும் தற்காப்பு நிலையிலேயே (Defensive mode) இருக்கச் செய்துள்ளார்.
கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட ஒரு சூப்பர் ஸ்டாரை, தனது ஒற்றை கேமரா மற்றும் மைக்கின் மூலம் அசைத்துப் பார்க்கும் துரைமுருகனின் இந்த ' nightmare'.. விஜய் தரப்பை கொஞ்சம் அசைத்துதான் பார்த்துள்ளது. இதற்கு விஜய் தரப்பிலிருந்து முறையான அரசியல் பதிலடி வருமா அல்லது அமைதி காப்பதன் மூலம் இந்த அலை ஓய்ந்துவிடும் என்று தவெக காத்திருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications