விஜய்யின் வெற்றி.. திமுகவின் எதிர்காலம்.. திருமாவளவன் எடுக்கும் முடிவில் இருக்கும் ரகசியம்
சென்னை: தமிழக அரசியல் வரலாறு இதுவரை கண்டிராத ஒரு விசித்திரமான சூழல் நிலவுகிறது. தவெகவிற்கு ஆதரவு அளிக்கும் விஷயத்தில் திருமாளவன் தடுமாறுகிறார். ஒரு வேளை தவெகவிற்கு ஆதரவளிக்க மறுத்தால்.. விசிகவிற்கு மட்டுமல்ல.. திமுகவிற்குமே பெரிய சிக்கல் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். விசிக-வும் இடதுசாரிகளும் இப்போது எடுக்கும் முடிவுதான், திமுக-வின் எதிர்காலத்தையும், விஜய்யின் வெற்றியையும் தீர்மானிக்கப் போகிறது. இந்தச் சதுரங்க ஆட்டத்தில் இப்போது 'கிங் மேக்கர்' இடத்தில் இருப்பது விசிக மற்றும் இடதுசாரி இயக்கங்கள் தான்.
இன்று 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக நிற்கும் விஜய்யின் தவெக-விற்கு வெறும் 6 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதில் விஜய் தனக்கு ஆதரவு தருமாறு விடுதலை சிறுத்தைகள், சிபிஎம், சிபிஐ கட்சிகளிடமே கேட்டுள்ளார். அந்த பக்கம் அதிமுக, பாமக, அமமுக, பாஜகவிடம் கேட்கவில்லை.. மாறாக திமுக கூட்டணியிடமே விஜய் கேட்கிறார். ஏற்கனவே காங்கிரஸ் வந்தது போல், மற்ற கட்சிகளும் விஜய் பக்கம் வருமா என்பத பெரும் கேள்வியாக உள்ளது.

விசிக தலைவர் திருமாவளவன் தற்போது ஒரு மிகப்பெரிய அரசியல் தர்மசங்கடத்தில் சிக்கியிருக்கிறார். "ஆட்சி அதிகாரத்தில் பங்கு" என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் பல தசாப்த கால கனவாக இருக்கிறது.. இதுவரை திமுகவோ, அதிமுகவோ இவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்து அதிகாரம் வழங்கியது கிடையாது . அதனை கேட்டால் இரு இயக்கங்களுமே ஏளனமாக பேசிய காலங்களும் இருக்கின்றன.
தற்போத விஜய் ஒருவேளை "துணை முதல்வர்" அல்லது "முக்கிய அமைச்சகங்கள்" என்ற துருப்புச் சீட்டை விசிக-விற்கு நீட்டினால், அதைத் திருமாவளவனால் மறுக்க முடியுமா? மறுத்தால், தன் சமூகத்திற்கு அதிகாரத்தைப் பெற்றுத் தரும் ஒரு பொன்னான வரலாற்று வாய்ப்பை அவர் இழந்தவராக கருதப்படும்.
அதேபோல் விஜய் ஆட்சியமைப்பதை தடுக்க திமுகவும் அதிமுகவும் கைகோர்ப்பதாக வரும் செய்திகள் அந்த கட்சிகளுக்கு கிட்டத்தட்ட தற்கொலை முயற்சிக்கு சமமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஒருவளை இரு கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து ஆட்சியமைத்தால், வலுவான எதிர்க்கட்சி விஜய் அமருவார். அடுத்து தேர்தல் நடந்தால், நிச்சயம் விஜய்க்கு சாதகமாக மாறும். மொத்தமாக திமுக, அதிமுகவிற்கு பாதகமாகிவிடும்.
அத்துடன் விஜய்யைத் தடுக்க அதிமுக-விடம் சரணடைந்தால், திமுக தனது 'சுயமரியாதை' பிம்பத்தை முற்றிலுமாக இழக்கும். இது அடுத்த தேர்தலில் திமுக-வை வாஷ்-அவுட் செய்ய வழிவகுக்கும் என்று அரசியல் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். எம்.ஜி.ஆர் எப்படித் தனது திரை பிம்பத்தின் மூலம் ஒரு மாபெரும் அரசியல் புரட்சியைச் செய்தாரோ, அதையே இன்று விஜய் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். அதிமுக-வின் வாக்கு வங்கியில் கைவைத்து, அந்தக் கட்சியை 100 இடங்களில் டெபாசிட் வாங்க முடியாத அளவிற்கு வளர்ந்த விஜய்யின் வேகம், திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுகால சாம்ராஜ்யத்திற்குச் சவாலாக மாறியுள்ளது.
விசிக-வும் இடதுசாரிகளும் இப்போது எடுக்கும் முடிவுதான் தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. விஜக்கு ஆதரவு அளித்தால் தமிழகத்தில் ஒரு புதிய கூட்டணி ஆட்சி மலரும். விசிக வரலாற்றில் முதல்முறையாக அதிகாரத்தில் அமரும்.
ஆதரவளிக்க மறுத்தால், விஜய் வேறு வழியின்றி அதிமுக பக்கம் சாயக்கூடும். அப்படி நடந்தால் காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறும். அதன் விளைவாக, திமுக-வும் விசிக-வும் அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்தப்படும். திருமாவளவன் எடுக்கும் அந்த ஒரு 'முடிவு', திமுக-வின் எதிர்காலத்தையும் விஜய்யின் வெற்றியையும் ஒருசேரத் தீர்மானிக்கும் சக்தியாக மாறியிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.













Click it and Unblock the Notifications