பெரம்பூரில் விஜய் போட்டியிட விரும்புவதன் பின்னணி? திமுகவை அசரடிக்கும் செல்வாக்கு உள்ளதா?
சென்னை: சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற போகிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக,தவெக. நாம் தமிழர் என 4 முனை போட்டி உறுதியாகி உள்ளது. இதில் தவெக முதல் முறையாக களம் இறங்குகிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூரில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பெரம்பூரை பொறுத்தவரை திமுகவின் கோட்டைகளில் ஒன்று.. இங்கு போட்டியிட முடிவு செய்திருப்பதன் பின்னணியில் சுவாரஸ்மான காரணங்கள் உள்ளதாம். தொழிலாளர்கள், பெண் வாக்காளர்கள் நிறைந்த பெரம்பூர் தொகுதியில் தவெகவின் பலம் என்ன.. விஜய்க்கு எப்படி கொடுக்கும் என நினைக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
2024ல் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். அக்கட்சி முதல்முறையாக 2026 சட்டசபை தேர்தலில் களம் காண்கிறது. விஜய்யின் த.வெ.க. 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது. த.வெ.க. முக்கிய நிர்வாகிகள் தலைநகர் சென்னையில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொகுதியை விஜய் தேர்வு செய்வதற்கு தவெகவின் பலம் தான் காரணம் என்கிறார்கள். ஏனெனில் பெரம்பூரில் தவெகவுக்கு 45 ஆயிரம் பேர் அடிப்படை உறுப்பினர்களாக இருக்கிறார்களாம்.

பெரம்பூர் எப்படி
பெரம்பூரை பொறுத்தவரை தொழிலாளர்கள், ஏழை, எளிய மக்கள் அதிகமாக வசிக்கும் இந்த தொகுதியில், மூலக்கடை, கொடுங்கையூர், கண்ணதாசன் நகர், மகாகவி பாரதியார் நகர், வியாசர்பாடி, பார்வதி நகர் பகுதிகள் இடம் பெற்றுள்ளன. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கு பிறகு இந்த தொகுதியில் இதில் ஆண்கள் 1 லட்சத்து 7 ஆயிரத்து 995 பேரும், பெண்கள் 1 லட்சத்து 14 ஆயிரத்து 726 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 71 பேரும் உள்ளனர். ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 22 ஆயிரத்து 792 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
ஆர்டி சேகர் வெற்றி
கடந்த காலங்களில் இந்த தொகுதியில் (1967-க்கு பிறகு) தி.மு.க. 9 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 3 முறையும், அ.தி.மு.க. 2 முறையும் வெற்றி பெறுள்ளன. 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் ஆர்.டி.சேகரும், அ.தி.மு.க. சார்பில் கூட்டணி வேட்பாளராக என்.ஆர்.தனபாலனும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் 1 லட்சத்து 5 ஆயிரத்து 267 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். வாக்கு வித்தியாசம் சுமார் 54000 ஆகும். ஆனால் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் என்.ஆர்.தனபாலன் 50 ஆயிரத்து 291 வாக்குகளையே பெற்றார். நாம் தமிழர் கட்சி 19,821 பெற்றது. மக்கள் நீதி மய்யம் 17,072 வாக்குகளையும் பெற்றது. கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிவேல் 79 ஆயிரத்து 974 வாக்குகளும், தி.மு.க. சார்பில் போட்டியிட்ட என்.ஆர்.தனபாலன் 79 ஆயிரத்து 455 வாக்குகளையும் பெற்றார்கள்.
வெற்றிவேல் அதிமுக
அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றிவேல் மறைவை தொடர்ந்து, 2019-ம் ஆண்டு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 394 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் 38,371 வாக்குகளை பெற்று, 2-ம் இடத்தை பிடித்தார். பெரம்பூர் தொகுதியை பொறுத்தவரையில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிகளை பொறுத்தே வெற்றி பெற்றுள்ளன.
விஜய் தேர்வு செய்தது ஏன்
நடந்த தேர்தல் வரலாற்றையும்,முடிவையும் வைத்து பார்க்கும்போது பெரம்பூர் தொகுதி திமுக - அதிமுகவுக்கு சாதகமாகவே இருந்து வந்திருக்கிறது. எனினும் திமுக நேரடியாக களம் கண்டு அதிக முறை வென்றுள்ளது. திமுகவின் செல்வாக்கு அதிகம் உள்ள பெரம்பூர் தொகுதியை விஜய் தேர்வு செய்ய காரணம், அது தொழிலாளர்கள், பெண் வாக்காளர்கள் நிறைந்த தொகுதியாகும். பெண்கள் மற்றும் இளைஞர்கள் விஜய்க்கு ஓட்டுப்போடுவார்கள் என தவெக நம்புகிறது.
தவெக உள்கட்டமைப்பு அதிகம்
தமிழ்நாட்டிலேயே பெரம்பூரில் தவெகவிற்கு உள்கட்டமைப்பு அதிகம் ஆகும். சுமார் 50 ஆயிரம் நிர்வாகிள் உள்ள தொகுதியாம். குடும்பத்தினர் வாக்கு மற்றும் இரண்டு வாக்குகளை போட வைத்தாலும் ஒன்றரை லட்சம் வாக்குகளை எளிதாக பெற்றுவிட முடியும் என்று தவெக நம்புகிறதாம். அதுமட்டுமல்ல விஜய்யின் நட்சத்திர அந்தஸ்தும் கைகொடுக்கும் என தவெக நம்புகிறது. பெரம்பூரை பொறுத்தவரை வன்னியர் சமூக மக்கள் அதிகளவில் இருக்கின்றனர். அவர்கள் தான் வெற்றியை நிர்ணயிக்கும் காரணிகளாக இருப்பார்கள் என கூறப்படுகிறது.
சிட்டிங் எம்எல்ஏ
அதேசமயம் சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஆர்.டி.சேகர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் இருக்கிறார். 1988ல் எழும்பூர் மாணவரணி அமைப்பாளர், அதன்பின் வடசென்னை திமுக மாணவரணி அமைப்பாளர், தொடர்ந்து வட சென்னை இளைஞரணி அமைப்பு செயலாளராக இருந்திருக்கிறார்.
ஆர்டி சேகர் யார்
மேலும் 2006 முதல் 2011ம் ஆண்டு வரை சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஆக இருந்துள்ளார். , 2011 முதல் 2014ம் ஆண்டு வரை வடசென்னை திமுக மாவட்ட செயலாளர், 2015ல் திமுக இளைஞரணி துணைச் செயலாளர் என ஆர்.டி.சேகர் பணியாற்றி உள்ளார். 2019 இடைத்தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் அவருக்கு வாய்ப்பு அளித்தார். விஜய்க்கு நட்சத்திர அஸ்தஸ்து மற்றும் இளம் தலைமுறையினர் வாக்குகள் மற்றும் ஆதரவு இருப்பதால், திமுக சார்பில் யார் களம் இறங்கபோகிறார்கள் என்பது தெரியவில்லை.. நிச்சயம் வலுவான வேட்பாளரை திமுக களம் இறக்கும் என்றே கூறுகிறார்கள்.
திமுகவின் கோட்டையில் ஓட்டையாகும்
ஒருவேளை பெரம்பூரில் விஜய் வென்றால், அது திமுகவின் கோட்டையில் விழுந்த ஓட்டையாகவே பார்க்கப்படும்.. ஏனெனில் பக்கத்து தொகுதிகளான கொளத்தூரில் தான் ஸ்டாலின் போட்டியிடுகிறார். வில்லிவாக்கத்தில் எல்லாம் திமுகவை ஜெயிப்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது.அப்படிப்பட்ட இடத்தில் விஜய் நேரடியாக பெரம்பூரில் களம் இறங்கி உள்ளதால் திமுகவின் வியூகம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது












Click it and Unblock the Notifications