'இது காட்டுமிராண்டித்தனம்'.. ரஜினி ரசிகர்கள் செயலுக்கு பால் முகவர்கள் சங்கம் கடும் கண்டனம்!
சென்னை: தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அவருடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இதனை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இதனை கொண்டாடும் விதமாக ரஜினியின் ஒரு சில ரசிகர்கள் ஒரு ஆட்டின் தலையை கொடூரமாக வெட்டி பலி கொடுத்து அதன் ரத்தத்தை பேனரில் இருந்த ரஜினியின் படத்தின் முன்பு தெளித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

ரஜினி ரசிகர்களின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கமும் ரஜினி ரசிகர்கள் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நடிகர் ரஜினிகாந்த நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்திற்கு பொதுவெளியில் வைக்கப்பட்டுள்ள கட்அவுட்டிற்கு பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் முன்னிலையில் ஆட்டை பலி கொடுத்து அவரது ரசிகர்கள் ரத்தாபிஷேகம் செய்த காட்டுமிராண்டித்தனம் அரங்கேறிய காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியளிக்கிறது.
கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தது போய் தற்போது ஆட்டை பலி கொடுத்து ரத்தாபிஷேகம் செய்கிற நடிகர் ரஜினிகாந்த ரசிகர்களின் காட்டுமிராண்டித்தனத்தை வன்மையாக கண்டிக்கிறோம். நடிகர் ரஜினிகாந்த அவர்களின் அண்ணாத்த கட்அவுட்டிற்கு ஆட்டை பலி கொடுத்து ரத்தாபிஷேகம் செய்த சம்பந்தப்பட்ட ரசிகர்கள் மீது தமிழக காவல்துறை உடனடியாக வழக்குப்பதிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கனவே கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்கிற கலாச்சாரத்தை தடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் ரஜினிகாந்த் அவர்களுக்கு நேரிலும், பதிவு தபால் மூலமும் பலமுறை கோரிக்கை முன் வைக்கப்பட்டது. தனது ரசிகர்களை கண்டித்து நல்வழிப்படுத்த தவறிய அவர் இவ்விகாரத்திலாவது உடனடியாக விழித்துக் கொள்ள வேண்டும். தவறான கலாச்சாரம் தமிழகத்தில் அரங்கேற அவர் காரணமாக இருக்க கூடாது என ரஜினிகாந்த்தை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் கேட்டுக் கொள்கிறது.












Click it and Unblock the Notifications