RAC பயணிக்கு பதில் வெயிட்டிங் லிஸ்டில் இருந்தவருக்கு சீட் தந்த டிடிஆர்.. பயணி வீடியோ
டெல்லி : லூதியானாவில் இருந்து வாரணாசி சென்ற ரயிலில் RAC டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார் இளைஞர். ஆர்ஏசியில் பயணிப்பவர்கள், காலியாக உள்ள படுக்கையில் பயணிக்க முன்னுரிமை உண்டு. ஆனால் ஆர்ஏசியில் பயணித்த இளைஞருக்கு காலியாக படுக்கை வசதி இருக்கை இருந்தும் டிடிஆர் அவரை அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் ரயிலில் பயணித்த படி வீடியோ எடுத்து புகார் தெரிவித்துள்ளார். அவரது வீடியோ வைரலான நிலையில், நடவடிக்கை எடுப்பதாக ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.
வாரணாசி ரயிலில் பயணித்த இளைஞருக்கு நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம். லூதியானாவில் வாரணாசி சென்ற ரயிலில் S7 பெட்டியில் 3 படுக்கைகள் காலியாக இருந்தன.

அந்த இளைஞர் அங்கிருந்த டிடிஆரிடம் சென்று, "காலியாக உள்ள படுக்கையைத் தனக்கு முழுமையாக உறுதிசெய்து தருமாறு" கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், அந்த TTE "அப்புறம் பார்க்கலாம்" என்று கூறி அலட்சியப்படுத்தினாராம். ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு, காத்திருப்போர் பட்டியலில் இருந்த பயணிகளிடம் லஞ்சம்/கூடுதல் கட்டணம் பெற்றுக்கொண்டு, அந்த 3 காலி படுக்கைகளையும் TTE அவர்களுக்கு ஒதுக்கியதை இவர் அறிந்துகொண்டாராம்.
இதையடுத்து அந்த இளைஞர் கோபத்துடன் வீடியோ வெளியிட்டார். அதில் RAC பயணி வண்டியில் இருக்கும்போது, காலி படுக்கைகள் இருந்தால் முன்னுரிமை RAC பயணிக்குத்தானே வழங்கப்பட வேண்டும்? காத்திருப்போர் பட்டியல் நபர்களுக்கு எப்படி ஒதுக்கலாம்?
அந்தப் குறிப்பிட்ட TTE-ன் படுக்கை ஒதுக்கீடு பதிவேடுகள் மற்றும் அவர் வசூலித்த அபராத ரசீதுகளை ஆய்வு செய்து, அந்த TTE மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ரயில்வே விதி என்ன
அந்த இளைஞர் கூறியபடியே இது முற்றிலும் விதிமீறலாகும். இந்திய ரயில்வே சட்ட விதிகளின்படி, வண்டியில் படுக்கைகள் காலியாகும்போது முதல் முன்னுரிமை RAC பயணிகளுக்குத்தான் வழங்கப்பட வேண்டும். RAC பயணிகள் அனைவருக்குமே முழு படுக்கை ஒதுக்கப்பட்ட பிறகே, மீதமுள்ள படுக்கைகளை Waiting List பயணிகளுக்குக் கட்டணம் வசூலித்து TTE ஒதுக்க வேண்டும். TTE மீது தவறு இருப்பது உறுதியானால் இந்த PNR எண்ணை வைத்து இரயில்வே நிர்வாகம் விசாரணை நடத்த அதிக வாய்ப்புள்ளது. மேலும் டிடிஆர் மிது நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு உள்ளது. நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
