எல்லா திட்டத்திற்கும் வெற்றி என பெயர் வைத்த விஜய்! ஜோசியர் ராதன் "வெற்றி"வேல் ஐடியா?
சென்னை: தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் தவெக புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, கோட்டை வட்டாரத்தில் நிர்வாக ரீதியாகப் பல்வேறு அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, பல்வேறு முக்கிய அரசுத் துறைகளின் கீழான நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் அனைத்திற்கும் 'வெற்றி' என்ற ஒற்றைப் பெயரையே முதன்மை அடையாளமாக சூட்டி அரசு உத்தரவிட்டு வருகிறது.
கல்வி, உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு என அனைத்துத் துறைகளிலும் 'வெற்றி' முத்திரை தீவிரமாகப் பதிக்கப்பட்டு வரும் அதே வேளையில், இந்தத் தொடர் பெயர் மாற்றங்களுக்குப் பின்னால் முதல்வரின் ஆன்மிக ஆலோசகரும் ஜோதிடருமான ராதன் பண்டிட் வெற்றிவேலின் பின்னணி உள்ளதா என்ற விவாதமும் அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.

அரசு அறிவித்துள்ள முக்கிய 'வெற்றி' திட்டங்களின் முழு விவரம்
வெற்றி தமிழகம் தொலைநோக்கு கட்டமைப்பு (Vetri Tamizhagam Vision Framework): தமிழகத்தின் 35 அரசுத் துறைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக 436 இலக்குகளை உள்ளடக்கிய முதன்மை நிர்வாகக் கொள்கையாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
வெற்றி மடிக்கணினி திட்டம் : கல்லூரி மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு நவீன தொழில்நுட்ப மடிக்கணினிகளை வழங்கும் திட்டம் புத்துயிர் பெற்று இவ்வாட்சி முறையில் செயல்படுத்தப்படுகிறது.
வெற்றி வீட்டுவசதி திட்டம் : பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய குடும்பங்களுக்குப் பாதுகாப்பான, நிரந்தர கான்கிரீட் வீடுகளைக் கட்டித் தரும் நோக்கில் இத்திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளது.
வெற்றி திறன் பயிற்சித் திட்டம்: லட்சக்கணக்கான படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குத் தனியார் துறை வேலைவாய்ப்புகளுக்குத் தேவையான அதிநவீன தொழிற்பயிற்சிகளை வழங்கும் திட்டம்.
டிஎன்-வெற்றி திட்டம்: கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் விநியோகம், சாலை இணைப்பு, திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்தும் வருடாந்திர உட்கட்டமைப்பு இயக்கம்.
வெற்றி 150 திட்டம்: ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பை உறுதிசெய்து, ஆண்டுக்கு 150 நாட்கள் வரை உத்தரவாத ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பை வழங்கும் திட்டம்.
வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்: விளிம்புநிலை பெண்கள் மற்றும் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் விலையில்லா ஆடுகள் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் திட்டம்.
வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு : உள்நாட்டு மற்றும் சர்வதேச தொழில் நிறுவனங்களின் மூலதனத்தை ஈர்த்து தொழில்வளர்ச்சியைப் பெருக்கும் சர்வதேச முதலீட்டு மாநாடு.
ஆஸ்தான ஜோதிடர் ராதன் பண்டிட் கேள்விகள்:
ஆளும் கட்சிகள் தங்கள் கட்சியின் பெயரையோ தலைவர்களின் பெயரையோ திட்டங்களுக்குச் சூட்டுவது தமிழக அரசியலில் புதிதல்ல என்றாலும், தற்போது அனைத்துத் திட்டங்களிலும் 'வெற்றி' என்ற சொல் நீக்கமற நிறைந்திருப்பது அரசியல் நோக்கர்களிடையே ஆழமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் விஜய்யின் அரசியல் நகர்வுகளுக்குப் பின்னால், அவரது ஆஸ்தான ஜோதிடரும் எண் கணித நிபுணருமான ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலின் பங்களிப்பு வெளிப்படையாகப் பேசப்பட்டு வருகிறது. ஈரோட்டைச் சேர்ந்த இவர், தொடக்கத்தில் 'பண்டிட் வெற்றிவேல்' என்ற பெயரிலேயே அறியப்பட்டு வந்தார். பின்னர் டெல்லி மற்றும் வெளிநாடுகளில் தனது ஆன்மிக ஆலோசனையை விரிவுபடுத்தியபோது 'ராதன் பண்டிட்' என மாற்றிக்கொண்டார்.
கட்சியின் பெயர் உருவாக்கத்தின் போதே, விஜய்யின் ஜாதக அமைப்பிற்கும் பெயரின் எழுத்துக்களுக்கும் உரிய எண் கணிதப் பொருத்தத்தை கணித்துக் கொடுத்தவர் ராதன் பண்டிட் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டது. இந்நிலையில், அவரது சொந்த பெயரான 'வெற்றிவேல்' என்பதில் உள்ள 'வெற்றி' என்ற சொல்லையே கட்சிக்கும், தற்போது அரசின் ஒட்டுமொத்த அரசு நலத்திட்டங்களுக்கும் விஜய்யின் அரசு தொடர்ச்சியாகச் சூட்டி வருகிறதா என்ற கேள்விகள் எழுகின்றன.
கட்சித் தரப்பில் இக்குற்றச்சாட்டுகளை மறுத்து, 'வெற்றி' என்பது மக்களின் உரிமைகளுக்கான அரசியல் இலக்கையே குறிக்கிறது என்று விளக்கம் அளித்தாலும், நிர்வாகத் திட்டங்கள் அனைத்திலும் ஒரே குறிப்பிட்ட பெயர் ஆதிக்கம் செலுத்துவது அரசியல் விமர்சகர்களின் விவாதத்திற்கு ஆளாகியுள்ளது.


Click it and Unblock the Notifications
