முடிவையே மாற்றும்! 1.31 கோடி பெண்கள் வாக்குகளை குறிவைத்த ஸ்டாலின்! அதிமுக, தவெகவிற்கு சிம்ம சொப்பனம்
சென்னை: இன்று அதிகாலை தமிழகத்தின் கோடிக்கணக்கான இல்லத்தரசிகளின் போன்களில் வந்த அந்த ஒரு குறுஞ்செய்தி (SMS), வெறும் வங்கி வரவு மெசேஜ் மட்டுமல்ல அது மிகப்பெரிய அரசியல் மூவ்.. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் முக்கிய அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் பொங்கல் பரிசாக 3,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. இன்று 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தின் கீழ் 5,000 ரூபாய் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. வெறும் ஒரு மாத இடைவெளியில் ஒரு குடும்பத் தலைவியின் கையில் 8,000 ரூபாய் சென்று சேர்ந்திருப்பது, 2026 தேர்தலுக்கு முன்னதாக திமுக அரசு எடுத்துள்ள ஒரு மிகப்பெரிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

பொங்கல் பரிசு மற்றும் தற்போதைய சிறப்புத் தவணை ரூ.5000 என மொத்தம் ₹8,000 வரை பெண்களின் கைகளில் நேரடியாகச் சென்று சேர்ந்துள்ளது, தமிழக அரசியல் களத்தில் இந்த ரூ.8000 பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
207 தொகுதிகளின் பெரும்பான்மை
தமிழகத்தின் தேர்தல் கணக்குகளைப் பொறுத்தவரை, இனி 'பெண் வாக்காளர்கள்' என்பவர்கள் ஒரு துணை சக்தியல்ல; அவர்களே முதன்மை சக்தி. மொத்தமுள்ள 234 தொகுதிகளில், சுமார் 207 தொகுதிகளில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனர். இவர்கள்தான் இந்த தொகுதிகளில் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் சக்தி.
கடந்த கால தேர்தல்களை உற்று நோக்கினால், குறிப்பாக 2021 தேர்தலில் 130-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பெண்களின் வாக்குப்பதிவு சதவீதம் முடிவுகளைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகித்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கொண்டு வந்த மிக்ஸி, கிரைண்டர் திட்டமாக இருக்கட்டும் அல்லது ஏழைப் பெண்களுக்கான தாலிக்குத் தங்கம் திட்டமாக இருக்கட்டும், பெண்களை மையப்படுத்திய நலத்திட்டங்களே அதிமுகவிற்கு ஒரு காலத்தில் அசைக்க முடியாத பலத்தைத் தந்தன. அதே பாணியை, 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' மூலம் திமுக கையில் எடுத்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் திமுகவிற்கு இந்த திட்டம் பெரிய பலம் கொடுத்தது.
அதோடு ஸ்டாலின் விடியல் பயணம் பேருந்து தொடங்கி பல்வேறு பெண்கள் நலத்திட்டங்கள் மூலம் பெண்களை திமுக கவர்ந்து வருகிறது.
ஒரு 'கேம் சேஞ்சர்' (Game-Changer) திட்டமா?
தற்போது தமிழகத்தில் சுமார் 1.31 கோடி பெண்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெறுகின்றனர். அதாவது, தமிழகத்தின் ஒட்டுமொத்த வாக்காளர்களில் நான்கில் ஒரு பெண் இந்தத் திட்டத்தோடு நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளார். அதாவது நீங்கள் பார்க்கும் 4 வாக்காளர்களில் 1 வாக்காளர் இந்த திட்டம் மூலம் பயன் பெறுபவர்கள்.
அரசியல் நோக்கர்களின் கணிப்புப்படி, இந்தத் திட்டம் தேர்தல் களத்தில் ஒரு தெளிவான மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இந்தத் திட்டத்தால் எத்தனை சதவீத வாக்குகள் மாறும் என்பதற்குத் துல்லியமான புள்ளிவிவரங்கள் இல்லையென்றாலும், பெண்களிடையே இது ஒரு 5% முதல் 8% வரையிலான வாக்கு மாற்றத்தை (Swing) ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
தமிழ்நாட்டில் பல தொகுதிகளில் தேர்தல் முடிவுகள் 2-3 சதவிகிதத்தில் மாற கூடியது. இழுபறியாக இருக்கும் தொகுதிகளில், இந்தச் சிறிய சதவீத மாற்றமே ஒரு கட்சியின் வெற்றியை உறுதி செய்ய போதுமானதாகும். அப்படி இருக்க பெண்கள் வாக்குகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த கூடும் .
சவால்களும் எதிர்பார்ப்புகளும்
இருப்பினும், இந்தத் திட்டம் முழுமையான வெற்றியைத் தருமா என்பது அதன் 'செயல்பாட்டிலும்' (Implementation) மக்களின் பார்வையிலும் (Perception) தான் உள்ளது. தகுதியிருந்தும் விடுபட்ட பெண்களுக்கு இத்திட்டம் சென்றடைவது ஒரு சவாலாக உள்ளது.
மறுபுறம், எதிர்க்கட்சிகள் இதனை ஒரு 'தேர்தல் கால கவர்ச்சித் திட்டம்' என விமர்சித்து வருகின்றன. எது எப்படியாயினும், 207 தொகுதிகளில் பெரும்பான்மையாக இருக்கும் பெண்கள், இந்த ₹8,000-ஐ ஒரு உரிமையாகவும் கௌரவமாகவும் பார்க்கிறார்களா அல்லது வெறும் தேர்தல் பரிசாகப் பார்க்கிறார்களா என்பதில் தான் 2026-ன் வெற்றியாளர் ஒளிந்துள்ளார். தமிழக அரசியல் வரலாற்றில் 'பெண் வாக்கு வங்கி' மீண்டும் ஒருமுறை சிம்மாசனத்தைத் தீர்மானிக்கக் காத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications