என்ன ஒரே குழப்பமா இருக்கே!.. யார் சொல்றதை நம்புறது.. வயதில் சீனியரையா?.. இல்லை கட்சியில் சீனியரையா?
சென்னை: ஒரு தகவலை ஆளாளுக்கு மாத்தி சொன்னா குழப்பம் வருமா இல்லையா? அப்படித்தான் போய்கிட்டிருக்கு தமிழக தேர்தல் களம்!
தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக ஆகியவை போட்டியிடுகின்றன. புதிய நீதி கட்சி அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது. அது போல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.
கடந்த 10 நாட்களாக தேமுதிகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே நடந்து வந்த பேச்சுவார்த்தையில் சுமூக நிலை எட்டப்படாததால் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியது.

தகவல்கள்
கேட்ட தொகுதிகள் கிடைக்காததால் கூட்டணியிலிருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகின. விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷும் மகன் விஜய பிரபாகரனும் சரமாரியாக அதிமுகவை விமர்சனம் செய்தனர். தேமுதிக விலகல் குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

ஜெயக்குமார்
அப்போது அவரிடம் தேமுதிக தனது முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் அதிமுக கூட்டணிக்கு வந்தால் வரவேற்பீர்களா என கேட்கப்பட்டது. அதற்கு ஜெயக்குமார், தேமுதிகவை வெளியேறுமாறு நாங்கள் சொல்லவில்லை. உடன்பாடு எட்டாததால் வெளியேறியது அவர்கள்தான். அவர்கள் தொண்டர்களுடன் பேசி என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை பார்த்துவிட்டுதான் அதிமுக தலைமை முடிவு செய்யும் என்றார்.

சீனியர்
அது போல் விஜயபிரபாகரனிடம் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பிருக்கா என கேட்டதற்கு நிச்சயமாக கிடையாது என்றார். மேலும் அமமுகவுடனும் மக்கள் நீதி மய்யம் கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவீர்களா என கேட்டதற்கு கட்சி தொடங்கியதில் நாங்கள்தான் சீனியர். நாங்கள் ஏன் புதுசா வந்தவங்ககிட்ட போகணும் என செய்தியாளர்களையே திருப்பி கேட்டார்.

குழப்பம்
இந்த நிலையில் நேற்றைய தினம் டிடிவி தினகரன் கூறுகையில் தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது உண்மைதான். விரைவில் கூட்டணி குறித்து நல்ல முடிவு வெளியாகும் என்றார். இரு வேறு தகவல்களால் தொண்டர்களுக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. கட்சி தொடங்கியதில் சீனியரான தேமுதிக சார்பில் பேசும் விஜய பிரபாகரன் கூறுவதை ஏற்பதா இல்லை, வயதில் சீனியரான (விஜய பிரபாகரனை விட) டிடிவி தினகரன் சொல்வதை ஏற்பதா? என்னவோ எதையோ பேசிட்டு சட்டுபுட்டுனு அறிவிச்சிடுங்கப்பா!












Click it and Unblock the Notifications