திருச்சி போலீஸ் ஸ்டேஷனில் தாக்குதல் நிகழ்வு! சட்டசபையில் புயலை கிளப்ப அதிமுக திட்டம்!
சட்டசபையில் பல்வேறு பிரச்சனைகள் பற்றி பேசி புயலை கிளப்ப அதிமுக திட்டம்.
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் நாளை தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே திருச்சியில் போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலை மையமாக வைத்து பேரவையில் புயலை கிளப்ப திட்டமிட்டுள்ளது அதிமுக.
இதனிடையே இந்த விவகாரத்தை நிச்சயம் அதிமுக கையெலெடுக்கும் என்பதை முன் கூட்டிய அறிந்துள்ள ஆளும் தரப்பும் அதற்குரிய நடவடிக்கைகளை விளக்க தயாராகவே இருக்கிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர்
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்கவுள்ளதால் அது தொடர்பான எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. பட்ஜெட் அறிவிப்புகளில் புதிதாக என்னவெல்லாம் இடம்பெறும் என விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே சட்டசபையில் சட்டம் ஒழுங்கு விவகாரத்தை வைத்து புயலை கிளப்ப அதிமுக திட்டமிட்டுள்ளது. குறிப்பாக முதலமைச்சர் வசம் உள்ள காவல்துறை செயல்பாடுகள் குறித்தும் அண்மையில் திருச்சியில் நிகழ்ந்த திமுகவினரிடையேயான மோதலில் காவல் நிலையத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது குறித்தெல்லாம் பஞ்சாயத்து இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

புயலை கிளப்ப திட்டம்
இதனிடையே கண்டிப்பாக திருச்சி போலீஸ் ஸ்டேஷன் விவகாரத்தை அதிமுக சட்டசபையில் பேசும் என்பதை முன் கூட்டியே அறிந்து வைத்துள்ள ஆட்சி மேலிடம் தக்க பதிலடி கொடுக்கவும் தயாராகவே இருக்கிறது. அதிமுக ஆட்சிக்காலங்களில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஒரு பெரிய பட்டியல் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல திருச்சி போலீஸ் ஸ்டேஷன் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள கைது நடவடிக்கை குறித்தும் விளக்கம் அளிக்க ஆட்சி மேலிடம் தயாராக உள்ளது.

ஆளும் தரப்பு பதிலடி
அதேபோல் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தையும் இந்த முறை பெரிதுபடுத்த திட்டமிடுகிறது அதிமுக. ஓ.பன்னீர்செல்வம் இருக்கையில் ஆர்.பி.உதயகுமாரை அமர வைப்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மொத்தத்தில் இந்தக் கூட்டத் தொடர் சற்று விறுவிறுப்பாக இருக்கும் எனத் தெரிகிறது. இதனிடையே பட்ஜெட்டில் சில வெயிட்டான அறிவிப்புகளை வெளியிடுவதன் மூலம் அதிமுகவின் புயலை கிளப்பும் திட்டத்தை முறியடிக்க முடியும் என நம்புகிறது ஆளும் தரப்பு.

பொதுமக்கள் எதிர்பார்ப்பு
அதிமுக, திமுக இடையேயான அரசியல் ஸ்டண்ட் ஒரு பக்கம் நடைபெற்றாலும் கூட பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகக் கூடும் என்பதை அறிந்துகொள்ள பொதுமக்கள் ஆர்வமாக இருப்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications