உதயநிதி கேட்டதில் தவறு இல்லை.. முதல்வரிடம் நானும் வலியுறுத்துவேன்.. டிஆர் பாலு என்ன சொன்னார் பாருங்க
சென்னை: லோக்சபா தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என்று உதயநிதி கேட்டதில் தவறு இல்லை. இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நானும் முதல்வரிடம் கூறுவேன் என்று திமுக எம்பி டிஆர் பாலு கூறினார்.
லோக்சபா தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் காங்கிரஸ் கட்சி இன்று பேச்சு வார்த்தை நடத்தியது. அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியது. காங்கிரஸ் தரப்பில் முகுல் வாஸ்னிக், கேஎஸ் அழகிரி உளிட்டோர் பங்கேற்றனர்.

திமுக தரப்பில் டிஆர் பாலு தலைமையில் கேஎன் நேரு, ஐபெரியசாமி, பொன்முடி, ஆ ராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த முதல் கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு திமுக எம்பி டிஆர் பாலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தின் போது இந்தியில் தான் பேச வேண்டும் என்று நிதிஷ் குமார் கூறினார். நாங்கள் அப்போதும் கூட கூட்டணி நலனுக்காக சகித்துக்கொண்டோம். காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை பற்றி கேட்கிறீர்கள். எல்லா கட்சியும் அதிகமான இடங்களில்தான் நிற்க வேண்டும் என விரும்பும்.
நான் கூட திமுக 40 இடங்களிலும் நிற்க வேண்டும் என விரும்புவேன். பேச்சுவார்த்தை என்று வரும் போது அனைவருடன் இணைந்து செல்ல வேண்டும். அதுதான் கூட்டணி. திமுக 20 க்கும் மேற்பட்ட இடங்களில் நிற்க வேண்டும் என நான் விரும்புகிறேன். கட்சித் தலைமையும் அதைத்தான் விரும்பும்.
இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என்று உதயநிதி கேட்டதில் தவறு இல்லை. இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நானும் முதல்வரிடம் கூறுவேன். மக்கள் கூட்டணி மய்யம் கூட்டணியில் இணைய உள்ளதா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நிதிஷ்குமார் பிரதமராக வேண்டும் என்று சொல்லவே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications