திமுகவை மட்டும் விடவே மாட்டேன்..திருமாவை சந்தித்த ஆதவ் அர்ஜுனா! பின்னணியில் இருக்கும் அரசியல் மெசேஜ்
சென்னை: தவெகவில் இன்று இணைந்து முக்கிய பதவியை பெற்ற கையோடு ஆதவ் அர்ஜுனா, விசிக தலைவர் திருமாவளவனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின் பின்னணியில் ஆதவ் அர்ஜுனா, திமுகவுக்கு முக்கிய அரசியல் மெசேஜை அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார். அவரது கட்சியில் முக்கிய தலைவர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இதற்கிடையேதான் இன்று பிற கட்சியில் பிரமுகர்களாக இருந்த 2 பேர் தவெகவில் இணைந்தனர்.

விசிகவில் துணை பொதுச்செயலாளராக செயல்பட்டதோடு அதில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா மற்றும் அதிமுகவில் சமூக வலைதள பிரிவு இணை செயலாளராக செயல்பட்டு வந்த சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் இன்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.
இவர்கள் 2 பேரும் கட்சியில் இணைந்த உடன் விஜய் முக்கிய பொறுப்புகளை வழங்கி உள்ளார். தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் பதவி ஆதவ் அர்ஜுனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் சிடிஆர் நிர்மல் குமாருக்கு தவெகவில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தவெகவில் இணைந்து பதவியை பெற்ற கையோடு இன்று இரவு சென்னையில் உள்ள விசிக அலுவலகத்தில் அந்த கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை, ஆதவ் அர்ஜுனா சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்துள்ளதாக ஆதவ் அர்ஜுனா மற்றும் தொல் திருமாவளவன் தரப்பில் கூறப்படுகிறது. ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகு அவர் தவெகவில் இணைந்த நிலையில் திருமாவளவன் மீது கொண்ட அன்பால் அவர் ஆசீர்வாதம் பெற்றதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த சந்திப்பின் பின்னணியில் திமுகவுக்கு பெரிய அரசியல் மெசேஜ் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சொல்கின்றனர். ஏனென்றால் திமுக கூட்டணியில் விசிக உள்ளது. விசிகவில் இருந்த ஆதவ் அர்ஜுனா, சென்னையில் நடந்த 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் விஜயுடன் மேடையை பகிர்ந்து கொண்டார்.
இந்த விழாவில் ஆதவ் அர்ஜுனா, ‛‛தமிழகத்தில் இனி மன்னர் ஆட்சிக்கு இடம் இல்லை. 2026 தேர்தலில் தமிழகத்தில் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும். பிறப்பால் ஒரு முதலமைச்சர் தமிழகத்தில் உருவாக்கப்பட கூடாது. கருத்தியல் உள்ளவர் தான் தமிழகத்தில் முதல்வராக வேண்டும்’’ என்று முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக விமர்சனம் செய்தார். இது சர்ச்சையானது.
அதன்பிறகும் கூட விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை முதல்வராக்குவது தான் எங்களின் நோக்கம். நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த உடனே ஒருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுகிறது. அவர் துணை முதல்வராகும்போது தொல் திருமாவளவனுக்கு அந்த தகுதி இல்லையா? என்பது போல் தொடர்ந்து திமுக மற்றும் உதயநிதி ஸ்டாலினை சீண்டினார்.
இதையடுத்து தான் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக கூறி திருமாவளவன், ஆதவ் அர்ஜுனை விசிகவில் இருந்து தற்காலிகமாக நீக்கும் வகையில் சஸ்பெண்ட் செய்தார். அதன்பிறகு சிறிது காலம் ஒதுங்கி இருந்த ஆதவ் அர்ஜுனா இன்று விஜயின் தவெகவில் இணைந்த கையோடு திருமாவளவனை சந்தித்துள்ளார். இதன்மூலம் திமுகவை விடமாட்டோம். எனக்கு இன்னும் திருமாவளவனுடன் நல்ல உறவு என்பது உள்ளது. திமுக கூட்டணியில் விசிகவின் எதிர்பார்பார்ப்பை பூர்த்தி செய்யாவிட்டால் அவரை தவெக கூட்டணிக்கு அழைப்போம் என்ற மெசேஜை தான் அவர் திமுகவுக்கு இந்த சந்திப்பின் மூலம் ‛பாஸ்’ செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மேலும் இந்த சந்திப்பு என்பது திருமாவளவனின் அனுமதியின்றி நடந்து இருக்க வாய்ப்பில்லை. அப்படியென்றால் ஆதவ் அர்ஜுனா மீது இன்னும் திருமாவளவனுக்கு நல்ல எண்ணம் உள்ளது. அதேவேளையில் வேங்கை வயல் சம்பவம் உள்பட சில விவகாரங்களில் திமுக தலைமையின் செயல்பாடு மீது திருமாவளவனுக்கு திருப்தி இல்லை என்பதை அவரே பல முறை வெளிப்படுத்தி உள்ளார். இதனால் வரும் 2026 சட்டசபை தேர்தலில் விசிகவுக்கு கூடுதல் இடங்களை திருமாவளவன் திமுக கூட்டணியில் கேட்கலாம். இந்த கூட்டணி பேரத்துக்கு இதுபோன்ற சந்திப்புகள் அவசியம் என்று திருமாவளவனும் கூட நினைத்து இருக்கலாம். இதனால்தான் ஆதவ் அர்ஜுனை, அவர் சந்தித்து இருக்கலாம் என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications