எம்ஜிஆர் செய்து காட்டியது விஜய்க்கு சாத்தியமில்லை.. தவெக கட்டமைப்பில் பிரச்சனை.. திருமாவளவன் பேட்டி!
சென்னை: நடிகர் விஜய்யின் தவெக இன்னும் முழுமையான ஒரு அரசியல் இயக்கமாக மாறவில்லை என்பதால், அவரால் 2026 சட்டசபைத் தேர்தலில் ஆட்சியை பிடிக்க முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தவெகவின் அடிப்படை கட்டமைப்பு பலவீனமாக இருப்பதாக கூறிய திருமாவளவன், திமுக கூட்டணிக்கு சாதகமான சூழல் நிலவுவதாக கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், திமுக கூட்டணி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் கருத்து வேறுபாடு எழுந்த நிலையில், விசிக, சிபிஎம், சிபிஐ, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை. இதனிடையே திமுக கூட்டணியில் ராமதாஸ் தரப்பு பாமக இணைய உள்ளதாக கூறப்பட்டது.

இதுதொடர்பாக திருமாவளவன் பேசும் போது, 14 ஆண்டுகளுக்கு முன் எடுத்த முடிவில் விசிக உறுதியாக உள்ளது. ராமதாஸ் கூட்டணிக்கு வந்தால், விசிக வெளியேறிவிடும் என்று கூறி இருந்தார். அதேபோல் திருமாவளவனுடன் திமுக தலைமை மிகவும் இணக்கம் காட்டி வருகிறது. அதிமுக கூட்டணியில் அன்புமணி தரப்பு பாமக இணைந்திருப்பதால், தலித் வாக்குகளை முழுமையாக கைப்பற்ற திமுக தீவிரமாக உள்ளது.
விஜய் களத்திற்கு வந்துள்ளதால், தலித் வாக்குகளை அவர் கைப்பற்றலாம் என்று கணிக்கப்படுகிறது. இப்படியான சூழலில் திருமாவளவனை கூட்டணியில் இருந்து இழக்க திமுக தயாராக இல்லை. இந்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்காணலில், இந்த தேர்தலில் புதிதாக விஜய் தலைமையிலான தவெக.
விஜய் ஒரு புகழ்பெற்ற ஹீரோ. அதனால் அவர் வெல்வார், முதல்வராகிவிடுவார் என்று ஒரு தரப்பில் விவாதிக்கப்படுகிறது. என்னதான் புகழ்பெற்ற ஹீரோ, ஹீரோயின் வந்தாலும், எடுத்த எடுப்பிலேயே அவர்களால் ஆட்சியை கைப்பற்ற முடிந்ததில்லை. அது எம்ஜிஆராக இருந்தாலும் சரி.. எம்ஜிஆர் அண்ணா மற்றும் கருணாநிதியுடன் களம் பயின்றவர். இவற்றுடன் விஜய் கட்சியுடன் ஒப்பிடும் போது, அது உடனடியாக சாத்தியப்படாத ஒன்று.
மக்களை சந்தித்து வாக்குகளை சேகரிப்பது, தங்களுக்கு சாதகமான வாக்குகளை வாக்குச்சாவடிக்கு கொண்டு வருவது போன்ற நடைமுறைகளில் தவெகவால் வெற்றிகரமாக இயங்க முடியுமா என்ற கேள்வி உள்ளது. அதற்கு பெரும்பாலும் வாய்ப்பில்லை என்றுதான் சொல்ல முடியும். இந்த தேர்தலில் அதிமுக வலுவான கூட்டணியாக உருவாகவில்லை. விஜய் இன்னும் முழுமையான அரசியல் இயக்கமாக மாறவில்லை. இதனால் திமுகவுக்கு சாதகமான சூழல் உள்ளது என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications