“தடுமாறுகிறோமா..? எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்!” - திருமாவளவன்
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி, தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து தடுமாறுகிறது என்று பலரும் விமர்சிப்பதாகவும், ஆனால் கட்சி உறுதியாக இருக்கிறது என்றும் அதன் தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.
'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடந்தது. இதில் நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய், அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே, சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சந்துரு உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். இதில் திருமாவளவனும் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் அவர் நிகழ்ச்சிக்கு வரவில்லை. எனவே இது அரசியல் தளத்தில் விவாதமாக வெடித்தது.

பலரும், திருமா சார்ந்திருக்கும் கூட்டணி கட்சிகளின் அழுத்தத்தால்தான் விஜய் உடன் ஒரே மேடையில் அவர் பங்கேற்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்நிகழ்ச்சியில் பேசிய விஜய்யும் இதையேதான் கூறியிருந்தார். அதாவது, "விசிக தலைவர் திருமாவளவனால் இன்று வர முடியாமல் போய்விட்டது. அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கூட கலந்துகொள்ள முடியாத அளவிற்கு அழுத்தம் இருப்பதை என்னால் யூகிக்க முடிந்தாலும் அவர் மனசு முழுக்க முழுக்க இனி நம்முடன் தான் இருக்கும்" என்று கூறியிருந்தார்.
மூன்றாவது நபர்களால் சலசலக்கப்பட்ட ஒரு விஷயத்தை, விஜய் நேரடியாக போட்டு உடைத்தது அரசியல் தலைவர்களிடையை கருத்துக்களை ஏற்படுத்தியது. முதல் ஆளாய் திருமாவளவன் விஜய்யின் பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்திருந்தார். அதாவது விஜய் அம்பேத்கர் புத்தகத்தை வெளியிடுவது மகிழச்சியளிக்கிறது என்றும், ஆனால் அவர் கூறிய கருத்தில் உடன்பாடு இல்லை என்றும் மறுத்திருந்தார். எனக்கு எந்த கட்சி தலைவரும் அழுத்தம் கொடுக்கவில்லை, சுயமாக நானே எடுத்த முடிவு இது என்று கூறிய திருமா, அழுத்தம் கொடுத்தால் பணிந்து போகும் அளவுக்கு நானோ, விசிகாவோ இல்லை என்று தெளிவுப்பட கூறிவிட்டார்.
இதனை தொடர்ந்து இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "நான் தடுமாறுவதாகவும், கட்சியும் தடுமாற்றம் காண்பதாகவும் பலரும் கூறியுள்ளனர். இந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்க எனக்கு விருப்பமில்லை. ஆனால் ஒன்றை மட்டும் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். எங்களுக்கு எந்த தடுமாற்றமும் இல்லை. எங்கள் சுயமரியாதையையும், கருத்தியலையும் குறைத்து மதிப்பிட முடியாது. சமூக மாற்றம் ஏற்படுத்துவதற்கான தாக்கத்தை நாம் உருவாக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். தொண்டர்கள் உறுதியாக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
மேலும், "மதம் குறித்து விசிகவின் நிலைப்பாடு என்ன என்று சிலர் கேட்கிறார்கள். குறிப்பாக பௌத்தம் குறித்து கேள்வி எழுந்திருக்கிறது. இன்றைக்கு உலகம் முழுவதும் உள்ள பௌத்தம் அம்பேத்கர் பெளத்தம் அல்ல. பௌத்தம் குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடும் இதுதான்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications