தவெகவை வலதுசாரிகள் ஆக்கிரமிப்பதை தடுக்கவே விசிக ஆதரவு! தொல் திருமாவளவன் புது விளக்கம்
சென்னை: தவெகவை வலதுசாரிகள் ஆக்கிரமிப்பதை தடுக்கவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு தந்ததாக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முப்பெரும் விழா நேற்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட திருமாவளவன் பேசுகையில், நாம் தவெக அணியில் இடம் பெறாமல் இருந்திருந்தால் தவெகவை வலதுசாரி சக்திகள் ஆக்கிரமித்துக் கொள்வதற்கான சூழல் இருந்தது.
அதாவது பெரும்பான்மை கிடைக்காத போது தவெகவை அணுகிய வலதுசாரிகள், நாங்கள் ஆதரவு தருகிறோம் , நீங்கள் ஆட்சி அமையுங்கள் என்றனர். ஆனால் தவெக அதற்கு தயாராக இல்லை.

தவெகவை தனித்து விடக் கூடாது
எனவே தவெகவை அப்படி தனித்து விட்டு விட கூடாது என்ற பொறுப்புணர்வோடு விசிகவும், அக்கட்சிக்கு ஆதரவு என்ற முடிவை எடுத்தது என்று புரிந்து கொள்ள வேண்டும். உண்மை அதுதான். வலதுசாரிகள் எந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. எந்த சூழலையும் தமதாக்கிக் கொள்ளக் கூடாது, அதை தடுக்க வேண்டிய பொறுப்பு. தவெக வென்றது நமக்கு விருப்பமில்லாமல் இருக்கலாம்.
தவெக வெல்லக் கூடாது என பிரச்சாரம்
தவெக வெல்லக் கூடாது என்று கூட நான் பிரச்சாரம் செய்துள்ளேன். அது நமது ஆசை, நாமிருக்கும் அணி வெற்றி பெற வேண்டும், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றுநான் கருதினேன். ஆனால் கூட்டணி அரசு அமைவது என்பது விசிகவின் கனவு. அந்த கனவு 2026 இல் நனவாகிறது என்கிற போது திமுக தலைமையில்தான் அப்படியொரு கூட்டணி அரசு அமையும் என நான் யூகம் செய்திருந்தேன்.
தொங்கு சட்டசபை
தமிழகத்தில் தொங்கு சட்டசபை ஏற்படும். அப்போது கூட்டணி அரசு அமைந்தே தீரும். அந்த சூழலில் நான் சட்டசபையில் இருப்பது நல்லது, தமிழக அரசியலில் நான் இன்னும் தீவிரமாக செயலாற்ற வேண்டும் என்ற கனவுடன் இருந்தேன்.
வேறு கணக்கு போட்ட காலம்
காலம் வேறு கணக்குகளை போட்டது. ஆனால் நமது கனவு நனவாகி தமிழகத்தில் கூட்டணி அரசு அமைந்துவிட்டது. இனி கூட்டணி ஆட்சி முறைதான் தமிழகத்தில் நீடிக்கும். அதை நடைமுறைப்படுத்தக் கூடிய அளவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு மகத்தான அரசியல் சக்தியாக பரிணமித்திருக்கிறது.
அவதூறு
சட்டசபை தேர்தல் முடிந்ததும் நமக்கு எதிராக ஒரு அவதூறை பரப்பினர். திருமாவளவன் என்ற தலைமைத்துவத்தையே காலி செய்ய வேண்டும், அவர் முன்போல் இல்லை, தடுமாறுகிறார் என என்னை நம்பக் கூடிய லட்சக்கணக்கான மக்களின் நம்பகத் தன்மை மீது ஒரு தாக்குதலை நடத்தினர்.
திருமாவளவனுடன் இருந்தவர்கள் எல்லாம் விஜய் கட்சியில் இணைந்துவிட்டனர். அப்படி நம்மை விமர்சித்தவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டிய வகையில் உளுந்தூர்பேட்டை மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
நலம் விசாரிக்கவில்லை- திருமா உருக்கம்
இப்போது அந்த மாநாட்டின் வெற்றியை பேசாமல் , மேடையில் ஏற்பட்ட நெரிசலை பேசுகிறார்கள். அப்போது அந்த நெரிசலில் திருமாவளவனுக்கு என்ன ஆனது என்று கூட நட்புறவின் அடிப்படையில் யாரும் தொடர்பு கொண்டு என்னை கேட்கவில்லை. "திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல் என்றார்களே, ஒரு வீடியோவையும் பார்த்தோம், வீடியோவை பார்க்கவே சங்கடமாக இருந்தது" என தோழமையின் அடிப்படையில் கூட யாரும் கேட்கவில்லை.
உளுந்தூர்பேட்டை ஸ்தம்பித்தது
உளுந்தூர்பேட்டையில் தெற்கே 20 கி.மீ. வடக்கே 20 கி.மீ. மேற்கே 20 கி.மீ என ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசைகட்டி நின்றன. ஒரு இடத்தில் கூட சிறு வன்முறை இல்லை, அதை பற்றி யாருமே பேசவில்லை. அந்த கட்டுப்பாட்டையும் ஒழுங்கையும் பற்றி யாரும் பேசவில்லை.
ஆர்வ மிகுதியால் என்னோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள மேடையில் ஏறிய அந்த தோழர்கள் ஏற்படுத்திய நெரிசலை பற்றி மட்டுமே 3 வார காலம் பேசினார்கள்.
திருமாவளவனை அழிக்க திட்டம்
திருமாவளவனின் தலைமை தமிழகத்திற்குள் நிலை பெற்றுவிடுமோ, வலுப்பெற்று விடுமோ என்ற அச்சம் சிலருக்கு இருக்கிறது. அவர்களுக்கு ஒரு அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேற காரணம் அவர்களேதான் என்று திருமாவளவன் பேசினார்.
எப்படி சாத்தியம்?
நடந்து முடிந்த தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் அக்கட்சி எப்படி நாங்கள் ஆதரவு தருகிறோம் என தவெகவை அணுகியிருப்பார்கள் என தெரியவில்லை. ஒரு வேளை என்டிஏ கூட்டணி என்ற அடிப்படையில் அதிமுக, பாமக கட்சிகள் ஆதரவு தரும் என்பதை சொல்லியிருப்பார்களா என்றும் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications
