ஆணவ படுகொலை.. கவின் குடும்பத்துக்கு ஆபத்து.. குடும்பத்தோடு முதல்வர் ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன்!
சென்னை: ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினருடன் விசிக தலைவர் திருமாவளவன் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது கவின் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், ஆணவ படுகொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நெல்லையில் மென்பொறியாளர் கவின் ஆணவ படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக சுர்ஜித் என்பவரும் அவரது தந்தையான காவல் உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.
தமிழ்நாட்டையே அதிர வைத்துள்ள இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆணவ கொலை செய்யப்பட்ட கபினி தந்தை சந்திரசேகர் மற்றும் அவரது சகோதரருடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார்.

கவின் ஆணவக் கொலை
அப்போது "கவின் ஆணவக் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். கவின் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய திருமாவளவன்," அண்மையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் அவர்களின் தந்தை சந்திரசேகர் அவர்கள் இன்று மாண்புமிகு முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து தன்னுடைய குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
திருமாவளவன்
கவின் ஆணவக் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். அந்த கொலையில் கூலிப்படையினருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிகிறது எனவே யாரும் தப்பித்துவிடாமல் இருக்கக் கூடிய வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். அத்துடன் அவருடைய இளைய மகனுக்கு அரசு வேலைவாய்ப்பு வேண்டும் என்றும் கோரிக்கையை விடுத்திருக்கிறார்.
முக ஸ்டாலின்
முதல்வர் அவர்கள் கனிவுடன் கோரிக்கைகளை செவி மடுத்தார். நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று பெரிதும் நம்புகிறோம். குறிப்பாக அவருடைய மனைவி பள்ளி ஆசிரியராக பணியாற்றுகிறார். அவருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு அவரது சொந்த பகுதியிலேயே அந்த கிராமத்திலேயே வேலை செய்யக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். வெளியே செல்வது பாதுகாப்பற்ற ஒரு சூழலாக இருக்கிறது என்கிற கவலையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
அவற்றையெல்லாம் பரிசீலிப்பதாக முதல்வர் கூறியிருக்கிறார். இப்போதைக்கு கவின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் கோரிக்கையை மட்டுமே முதல்வரி டத்தில் நாங்கள் பேசி இருக்கிறோம். ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் வேண்டும் என்பதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து உறுதியாக இருக்கிறோம், வலியுறுத்தியும் வருகிறோம். நாங்கள் முதல்வரிடத்தில் ' மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு' என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறோம். விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் சில கோரிக்கை மனுக்கள் வழங்கி இருக்கிறோம். கல் உடைக்கும் தொழிலாளர்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை மனு.
மின்சாரத் துறை
மின்சாரத் துறையில் அந்த வாரியத்தில் பொறியியல் பட்டம், பட்டயப்படிப்பு, டிப்ளமோ மற்றும் தொழிற்பயிற்சி ஐடிஐ அப்பிரண்டிஷ் படிப்பை முடித்துவிட்டு தேர்ச்சி பெற்றுள்ள அனைவருக்கும் கலைஞர் அவர்களால் பிறப்பிக்கப்பட்ட ஆணை அடிப்படையில் நேரடி நேர்காணல் மூலம் பணி நியமனம் செய்ய வேண்டுமென அறிவிக்கப்பட்டது. அந்த கோரிக்கைகளை இன்றைக்கு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு போய் இருக்கிறோம்.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினத்தில் காணாமல் போனவர்கள் 11 பேர் எந்த வாழ்வாதாரமும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அவர்கள் மிகவும் அதிக நிலையில் சிரமப்பட்டு வருகிறார்கள் அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் விபத்துக்கள் ஏற்படாத வகையில் கட்டமைப்புகளை உருவாக்கித் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். இறந்த 11 பேர் பெயரோடு அவருடைய இறப்பு தேதி உட்பட உறுதிப்படுத்தி வழங்கியிருக்கிறோம். அவற்றையும் பரிசீலிப்பதாக முதல்வர் கூறியிருக்கிறார்.
ஆணவக் கொலைகள்
இந்த சந்திப்பை இது தேர்தல் அரசியலோடு பொருத்திப் பார்க்கக் கூடாது. சமூகத்தில் நிலவுகிற கொடிய நோய் சாதி அடிப்படையிலான இந்த ஆணவக் கொலைகள். எனவே, அதனை தடுக்க வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உள்ளது. அந்த அடிப்படையில் இந்த கோரிக்கை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்." என்றார்.












Click it and Unblock the Notifications