1967, 1977 போல.. 2026 தேர்தல் இருக்குமா? விஜய் பேச்சுக்கு சுடச்சுட திருமாவளவன் கொடுத்த ரிப்ளை!
சென்னை: 1967, 1977 ஆம் ஆண்டு போல வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலும் இருக்கும் என்று நேற்று சென்னையில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு திருமாவளவன் பதில் (Thirumavalavan's response to Vijay) அளித்துள்ளார். 1967, 1977-ல் நடந்தது போல தமிழ்நாட்டில் 2026-ல் ஆட்சி மாற்றத்துக்கு வாய்ப்பு இல்லை என்றும், 2026-ல் யார் தேவை என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்றும் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலை நோக்கி அரசியல் கட்சிகள் நகர்ந்து வரும் நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் கட்சி பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி நேற்று மை டிவிகே ஆப் செயலியை விஜய் அறிமுகம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், 1967, 1977 ஆம் ஆண்டு தேர்தலில் நடந்தது போல வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலிலும் ஆட்சி மாற்றம் நடக்கும் என்று பேசியிருந்தார்.

விஜய்க்கு திருமாவளவன் பதில்
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த தொல் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:- அது விஜய்யின் விருப்பமாக இருக்கலாம்.. இப்போது கள நிலவரம் அவர் சொல்வது போல் இல்லை.. எம் ஜி ஆர் காலத்தில் இருந்ததை போன்ற சூழல் அதற்கு பிறகு இருந்தது கிடையாது. அடுத்தடுத்து எத்தனையோ திரைக்கலைஞர்கள் அரசியலுக்கு வந்தார்கள். பெரும் செல்வாக்கோடு அவர்கள் வந்தனர். ஆனால் மக்கள் அவர்களை இலகுவாக ஏற்றுக்கொள்ளவில்லை.
அரசியல் விழிப்புணர்வு வந்துவிட்டது
தமிழ்நாடு இப்போது திரைப்படங்களை நம்பி தலைவர்களை தேர்ந்தெடுக்கக் கூடிய மாநிலம் என்று விமர்சித்த காலம் மாறிப்போய்விட்டது. அரசியல் விழிப்புணர்வு உள்ள ஒரு சமூகமாக தமிழ்ச் சமூகம் வளர்ச்சியடைந்துவிட்டது. யார் தேவையோ அவர்களை மக்கள் தேர்வு செய்வார்கள். 2026 தேர்தல் இதனை நமக்கு உணர்த்தும்.. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. ஆளும் கட்சியான திமுக 'ஓரணியில் தமிழ்நாடு' என பரப்புரை முழக்கத்துடன் உறுப்பினர் சேர்க்கை பணிகளை மேற்கொண்டு வருகிறது. எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்டெப்போம்' என கோஷத்துடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக பிரசாரம் செய்து வருகிறார்.
1967, 1977 சட்டமன்ற தேர்தல்களை போல
அதேபோல், பாமக, தேமுதிக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் வெவ்வேறு கருப்பொருளுடன் பிரசாரம் மேற்கொண்டு வருவது அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது. தமிழக அரசியலில் புதிதாக குதித்துள்ள தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலை எதிர்கொள்ள வியூகம் வகுத்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த, அடுத்தக்கட்ட பணிகளை தொடங்கி இருக்கிறது.
அந்த வகையில், கட்சியின் உறுப்பினர் சேர்க்கை பணிகளை துரிதமாக மேற்கொள்ளும் வகையில், 'மை டி.வி.கே.' எனும் செயலி வெளியீடு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பேசிய விஜய், தமிழக அரசியலில் இதற்கு முன்பு நடந்த 2 மிகப்பெரிய தேர்தல்களான 1967 மற்றும் 1977 சட்டமன்ற தேர்தல்களை போல, வருகிற 2026 சட்டமன்ற தேர்தலும் அமைய போகிறது. இதில் நாம் உறுதியாக உள்ளோம்.
அண்ணா சொன்னது போலவே
2 மாபெரும் தேர்தல்களிலும், ஏற்கனவே வெற்றி பெற்றவர்களின் அதிகார பலம், அசுர பலத்தை எதிர்த்து நின்றுதான் புதிதாக வந்தவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். எப்படி வெற்றி பெற்றார்கள் என்று பார்த்தால், எளிமையான தத்துவம்தான். 'ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு' என சென்று அனைத்து மக்களையும் சந்தித்துள்ளார்கள். இந்த நேரத்தில், அண்ணா சொன்ன அதே வார்த்தையைதான் நான் மீண்டும் சொல்ல வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
இதை செய்தாலே போதும் வெற்றி பெறலாம்
'மக்களிடம் செல், மக்களிடம் இருந்து கற்றுக் கொள், மக்களுடன் வாழ், மக்களுடன் சேர்ந்து திட்டமிடு' இதை சரியாக செய்தாலே போதும், ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு, 'வெற்றி பேரணியில் தமிழ்நாடு' என்ற கருத்தின் அடிப்படையில் அனைத்து குடும்பங்களையும் நாம் உறுப்பினர்களாக சேர்த்து கண்டிப்பாக வெற்றி பெற முடியும்" என்று பேசியிருந்தார். 1967 மற்றும் 1977 தேர்தலை போல வெற்றி கிடைக்கும் என விஜய் கூறிய நிலையில், அவரது கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திருமாவளவன் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications